under review

கே.என். செந்தில்

From Tamil Wiki
கே.என். செந்தில்

கே.என். செந்தில் (பிறப்பு: 1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், சிறுகதையாசிரியர். சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள் தொடர்ந்து எழுதி வருபவர். இவருடைய புனைவுகள் இயல்புவாதத்தன்மை கொண்டவை, மனித உறவுகளுக்குள் உள்ள அடுக்குகளை பற்றிப் பேசுபவை.

வாழ்க்கைக் குறிப்பு

கே.என். செந்தில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் அவிநாசியில் நடராஜன், கண்ணம்மாள் இணையருக்கு 1982-ல் பிறந்தார். மேலாண்மையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். திருப்பூரில் வரி ஆலோசனை அலுவலகம் நடத்தி வருகிறார்.

இதழியல்

கபாடபுரம் என்னும் இணைய இதழை 2016-ல் தொடங்கி சில காலம் நடத்தினார். ஐந்து இதழ்கள் வெளியாகின.

இலக்கிய வாழ்க்கை

கே.என். செந்திலின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'இரவுக் காட்சி' 2009-ல் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக வெளியானது. முதல் கட்டுரைத் தொகுப்பு 'விழித்திருப்பவனின் கனவு' 2016-ல் வெளியானது. 'அரூப நெருப்பு' சிறுகதைத் தொகுப்பு 2013-லும், 'அகாலம்' சிறுகதைத்தொகுப்பு 2018-லும் வெளியானது. இயல்பான எழுத்துநடையில் வாழ்வியலை நுட்பமாகச் சித்திரிப்பவை இவரது கதைகள். தொடர்ந்து முன்னோடிகள், சமகாலப் படைப்பாளர்கள் சார்ந்த விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இலக்கிய உரைகள் நிகழ்த்துகிறார்.

இலக்கிய இடம்

கே.என். செந்திலின் புனைவுகள் இயல்புவாதத்தன்மை கொண்டவை, மனித உறவுகளுக்குள் உள்ள அடுக்குகளை பற்றி பேசுபவை.

"அன்றாட வாழ்விலிருந்து இருந்து விதவிதமான கதைத்தருணங்களை கண்டடைந்து இருப்பது இத்தொகுப்பின் பலம் எனில் அன்றாடத்தின் எல்லையில் இருந்து துளியும் நகராத பிடிவாதத்தை பலகீனம் என்று சொல்ல முடியும். கதாப்பாத்திரங்களின் அந்தந்த கணத்து உணர்வுகளை கூர்மையாக தீட்டுவதில் ஆசிரியரிடம் வெளிப்படும் அக்கறையும் கதாப்பாத்திரங்களின் மீது கொள்ளும் கரிசனமும் அவர்களை எவ்வகையிலேனும் வகுத்துவிட முடியுமா என்ற தேடல் நோக்கி நகர்வதில்லை. இது ஒரு எல்லை வரை வாசகனின் வேலை என்றாலும் இதுபோன்ற இயல்புவாதத் தன்மை கொண்ட கதைகளின் உலகிலேயே ஆசிரியர் தொடர்ந்து பயணிப்பது ஒரு வகையான ஒற்றைப்படைத் தன்மையை ஆசிரியரின் புனைவுலகுக்குள் புகுத்தி விடும் வாய்ப்பு உள்ளது" என சுரேஷ் பிரதீப் விருந்து குறுங்கதைகள் பற்றி மதிப்பிடுகிறார்.

கட்டற்ற காதலின் பரிதவிப்பு, மீறிப் பெருகும் காமத்தின் பித்துநிலை, கருணையற்று நிகழ்த்தப்படும் துரோகங்கள், இருபால் உள்ளங்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, அகம் குலைக்கும் புறக்கணிப்புகள் என மனித மனத்தின் இருண்மை கூடிய பிரதேசங்களில், வழித்தடங்களில் பயணிக்கும் கதைகள் அகாலம் தொகுப்பில் உள்ளன.

விருதுகள்

  • இளம் படைப்பாளிக்கான ஸ்பாரோ விருது - 2014
  • சுந்தர ராமசாமி விருது - 2016

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • இரவுக் காட்சி-முதல் (2009, காலச்சுவடு பதிப்பகம்)
  • அரூப நெருப்பு (2013, காலச்சுவடு பதிப்பகம்)
  • அகாலம் (2018, காலச்சுவடு பதிப்பகம்)
குறுங்கதைகள்
  • விருந்து (காலச்சுவடு பதிப்பகம்)
கட்டுரைத் தொகுப்பு
  • விழித்திருப்பவனின் கனவு (2016, காலச்சுவடு பதிப்பகம்)

உரைகள்

இணைப்புகள்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2025, 09:50:31 IST