under review

குடிநிலை

From Tamil Wiki

குடிநிலை கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. பிறந்த குடியினது நிலையைப் பெருமை பொங்கப் பேசுகின்ற காரணத்தால் குடிநிலை எனப் பெற்றது. வழி வழிவந்த வன்கண்மையை (வீரம்) உடைய குடி என்று சிறப்பிப்பது குடிநிலை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மண் செறிந்த இவ்வுலகத்தில் பழமையையும், வழிவந்த வன்கண்மையையும் அளவாக மனத்தில் கொண்டு பிறர் அறிய வருகின்ற தொல்வரவும் தோலும் உடைய குடியின் வரலாற்றைச் சொல்வது குடிநிலை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறர் அறியும் குடி உரைத்தன்று (கொளு 2.15)

வெண்பா

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் - கைஅகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி (35)

பொருள்: இந்த வையகத்தினைக் கவிந்து கொண்ட தெளிந்து ஆரவாரிக்கும் ஊழிக்கடல் வெள்ளம் நீங்கி, அதன்பின் மலைதோன்றி மண் தோன்றாதிருந்த அந்தப் பழங்காலத்திலேயே, எல்லா மக்கள் குடியினும் முற்படத் தோன்றி, வாளாண்மையுடன் முதிர்ச்சிபெற்று வருவது இம்மறவனின் குடியாகும். அதனால் இவன், பொய்மை நீங்க நாடொறும் புகழினை விளைத்துச் சிறப்புறுதல் என்னதான் அதிசயமோ? வேத்தியன் மரபின் பின்வரும் இது, மன்னன் தன்னுடைய மறக்குடி மாண்பினைப் போற்றி உரைப்பதாகும்

உசாத்துணை

கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:12:54 IST