under review

கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ்மாலை

From Tamil Wiki
Kiranji.jpg


கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ் மாலை இலங்கை பெருங்காடு கிராஞ்சியம்பதியில் கோவில் கொண்ட கந்தசுவாமியையைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, வள்ளி திருமணத்தின் தத்துவப் பொருளைப் பாடிய நூல். செந்தமிழ் மாலை என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த இந்நூலை இயற்றியவர் பொன். அ. கனகசபை.

பதிப்பு

இந்நூலின் முதற்பதிப்பு புங்குடுதீவின் கனகசபை அறக்கட்டளை மூலம் ஐப்பசி 1986-ல் வெளிவந்தது.

ஆசிரியர்

கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ் மாலையை இயற்றியவர் பொன்.அ. கனகசபை.

நூல் அமைப்பு

கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ் மாலை சிற்றிலக்கியங்களில் செந்தமிழ் மாலை என்னும் வகைமையைச் சார்ந்தது. எந்த ஒரு பொருளையும் பாடுபொருளாக் கொண்டு, இருபத்தேழு பாடல்களால் இயற்றப்படுவது செந்தமிழ் மாலை.

இந்நூல் வள்ளி திருமணத்தின் தத்துவப்பொருளை (காப்பு தவிர) 27 பாடல்களில் கூறுகிறது. பக்குவ ஆன்மாவாகிய வள்ளியை ஆட்கொள்ள கந்தசாமிப் பெருமான் சத்குருவாய் வந்து ஆடிய ஞான நாடகத்தை 27 கலிப்பாக்களால் பாடியுள்ளார் கனகசபை. கந்த புராணத்தின் தட்ச காண்டத்தில் கச்சியப்பர் 247 பாடல்களில் பாடிய படலத்தைத் தான் 27 பாடல்களில் செந்தமிழ் மாலையாகப் பாடியதாக நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். 27 பாடல்களும் பின்வரும் தலைப்புகளில் அமைந்தன.

  • வள்ளியம்மை திரு அவதாரம்
  • தினைப்புனம் காக்க வைத்தல்
  • தனைப்புனங் காத்தல்
  • முருகன் தினைப்புனஞ் சேர்தல்
  • ஞான ஏதுவான உலகியல்பு மொழிதல்
  • வேடர்வர வேங்கை மரமாதல்
  • ஞானோபதேசம்
  • விருத்த வேதியராதல்
  • பசி தாகம் தணித்தல்
  • விநாயகர் வருகை
  • விசுவரூப தரிசனம்
  • பாங்கிமதி உடன்பாடு
  • பாங்கியிற் கூட்டம்
  • வறும்புனங்கண்டு வருந்துதல்
  • அவனருளால் முக்தியடைதல்
  • வேலன் வெறியாடல்
  • இரவுக்குறி ஏகல்
  • உடன்போக்கு
  • ஐம்புல வேடர்க்கு அருள்புரிதல்
  • வேட்டுவருக்கு விசுவரூபங் காட்டுதல்
  • சிற்றூர் மீண்ட திருவிளையாடல்
  • திருக்கலியாணம்
  • திருவமுது செய்தல்
  • தணிகைமலைச் சிறப்பு
  • கந்தகிரிக்குச் செல்லுதல்
  • தெய்வநாயகியாருக்குச் செய்தி சொல்லுதல்
  • ஞானப்பழம்

கிரியா சக்தியான வள்ளியும் ஞான சக்தியான தெய்வயானையும் கொடியாக தன்னைச் சுற்றிப் படரும் மரமாக கேவலநிலையில் இருக்கும் முருகப்பெருமானையுன் ஐம்புலன்களாக முருகனை எதிர்க்கும் வேட்டுவ மக்களையும் உருவகப்படுத்துகிறார். ஆன்மா பரிபக்குவமடைந்த நிலையில் இறைவனைச் சேர்வதே வள்ளித் திருமணத்தின் உட்பொருளாகக் கூறப்படுகிறது.

பாடல் நடை

ஞானப்பழம்

சந்தமாருந்த் தருவாகி தவமாதர்க் கொடிபடர
அந்தகாரத் துயராற அனைத்துயிர்க்கும் அருள்பூத்து
பந்தமாய்க் காய்த்து ஞானப் பழமாறக் கிராஞ்சியமர்
கந்தசாமித் திருவடிகள் கலந்திடநின் றஞ்சலிப்பாம் (7)

உடன்போதல்

பதிகடந்தே உடன்போந்து பரவெளியிற் சோலைபுக
மதிபுலவேடருக்கஞ்ச வந்துநன்பின் இருந்தருள்க
எதிருரவேல் இருந்தவென்றே இருமையினில் ஒருமைசெய்து
கதியருளுங் கிராஞ்சியான் கழலிணைகள் அஞ்சலிப்பாம் (18)

உசாத்துணை

கிராஞ்சியம்பதிக் கீதாஞ்சலி செந்தமிழ்மாலை, நூலகம் வலைத்தளம்


✅Finalised Page