கலித்துறை மாலை
கலித்துறை மாலை (12-ம் நூற்றாண்டு) செங்குந்தர்களைச் சிறப்பித்து இயற்றப்பட்ட நூல். இந்நூலை இயற்றியவர் நாகை முத்துக்குமார தேசிகர்.
நூல் அமைப்பு
செங்குந்தர்களது பெருமைகளைக் கூறும் இந்நூல், நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்டது. நாகை முத்துக்குமார தேசிகரால் இயற்றப்பட்டது. நூலின் தொடக்கத்தில் தற்சிறப்புப் பாயிரம் இடம்பெற்றது. விநாயகர், சுப்பிரமணியர், நவவீரர், ஒட்டக்கூத்தர் மீதான பாடல்கள் இடம்பெற்றன. நூலை ஆக்கியவர் பற்றிய குறிப்பும், நூலின் பயனும் தனிப் பாடல்களாக இடம்பெற்றன. நூலின் இறுதியில் வாழ்த்து இடம்பெற்றது.
உள்ளடக்கம்
கலித்துறை மாலை நூலில் செங்குந்தர்களின் பெருமை பலவாறாகப் பேசப்படுகிறது. "கரிய கருமேனியுடைய திருமாலுக்கு நிகரானவர்கள்; காஞ்சியில் இருந்து ஆட்சி செய்பவர்கள்; பார்வதியின் கால் கொலுசின் நவமணிகளிலிருந்து தோன்றியவர்கள், கைக்கோளர் எனப்படும் செங்குந்தர்கள்; சிவபெருமானுக்கு இணையான பெருமையுடையவர்கள்" என்றெல்லாம் பலவாறாகக் கலித்துறை மாலை செங்குந்தர்களைப் புகழ்கிறது.
பாடல்
செங்குந்தர் பிறப்பின் பெருமை
சலம்பெற்ற செஞ்சடை யார்கயி லாசர் தமதுநெற்றி
நலம்பெற்ற மூவிரு கட்பொறிக் கஞ்சிய நாயகிபின்
புலம்பிப் பெயர்ந்தவந் நாளவள் பாதத்திற் பூட்டியபொற்
சிலம்பிற் பிறந்தவர் கைக்கோள ராகிய செங்குந்தரே
செங்குந்தரின் சிறப்பு
அக்கால் சடையனுக் கன்பான பேருக் கன்பாகியபேர்
திக்கானை யெட்டுந் திகைக்கச் சமர்புரி தீரர்சிவ
மிக்கான சைவ விதிவளர்ப் போர்பலர் மெச்ச வந்து
செக்காருக் குற்ற பழிக்குயி ரீந்தவர் செங்குந்தரே
பெருக்க முடையவர் சைகைதப் பாதவர் பின்னும்முன்னும்
வருக்க முடையவர் வாகாய்ப் பிறந்தவர் வண்மரபில்
உருக்க முடையவ ருத்தமி கெளரி யுயர்குலமென்
செருக்கை யுடையவர் செல்வரிற் செல்வரிச் செங்குந்தரே
ஈடற்ற வம்பலக் கூத்தன் றலைத்தவி சேறித்தரும்
பாடற் புனைந்தபின் மெய்யாவுந் தந்தலை பற்றியுயிர்
கூடப் புகலு மெழுப்பேழ்ப தாலொட்டக் கூத்தனெனத்
தேடற் கரிய திருப்பேரைத் தந்தவர் செங்குந்தரே
அந்தமு மாதியு மில்லான் பணிகொண் டறுமுகன்பால்
வந்தனை யாற்றித் தமைவரப் பெற்ற மனுகுலத்தோன்
சொந்தம தாமுசுப் பேரரு கேதங்க டொல்படைப்பேர்
செந்தமிழ் நாவலர் கொண்டாட வைத்தவர் செங்குந்தரே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2024, 08:47:52 IST