கரந்தை அரவம்
கரந்தை அரவம் கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. வெட்சியார் ஆநிரையைக் கைப்பற்றியது கேட்டு கரந்தை மறவர் ஆஒரிடத்தில் கூடும் நிகழ்வைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தமது ஆநிரைகளை வெட்சியார் கைப்பற்றிய செய்தியை அரசன் பறையறைந்து தெரிவிக்க, கரந்தையார் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு விரைந்து ஓரிடத்தில் குழுமியதால் ஏற்பட்ட அரவம்(ஒலி) என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
நிரைகோள் கோட்டுச் செய்தொழில் ஒழிய
விரைவனர் குழுவும் வகை உரைத்தன்று )2.3)
வெண்பா
கால்ஆர் கழலார்; கடும்சிலையார்; கைக்கொண்ட
வேலார்; வெருவந்த தோற்றத்தார்; - காலன்
கிளர்ந்தாலும் போல்வார்; கிணைப்பூசல் கேட்டே
உளர்ந்தார்; நிரைப்பெயர்வும் உண்டு(23)
பொருள்: கரந்தை மறவர்கள், தமது காலிலே வீரக்கழலை உடையவர்கள்; கையிலே, கொடுமையை வெளிப்படுத்தும் வில்லை உடையவர்கள்; வேலினையும் கொண்டவர்கள்; தம்மைக் கண்டவரை அஞ்சவைக்கும் தோற்றப் பொலிவை உடையவர்கள்; கூற்றுவனாகிய எமன் வெகுண்டது போன்ற சினத்தை உடையவர்கள். இவர்கள், 'பசுநிரையை வெட்சிமறவர் கவர்ந்து சென்றனர்' என்ற செய்தியை அறிவிக்கும் தடாரியின் ஓசையைக் கேட்டதும் போருக்கு எழுந்தனர். ஆதலால், இவர்கள் வெட்சியார் கவர்ந்து சென்ற பசுவின் திரளை மீட்கக் கூடும்.
உசாத்துணை
கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2025, 18:29:01 IST