under review

ஒயில் கும்மி

From Tamil Wiki

To read the article in English: Oyil Kummi. ‎

Oyil kummi.jpg

ஒயில் கும்மி என்பது குறைந்த அளவிலான அசைவுகளைக் கொண்ட ஒருவகைக் கும்மி ஆட்டம். இக்கலையில் ஒயிலாட்டதைப் போல் பாட்டாகக் கதை கூறும் வழக்கம் உள்ளது. வழிபாட்டிடங்களில் முளைப்பாரி விழாச்சடங்குக்காக இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இது ஒயிலாட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய கலை. "நாட்டுக் கொட்டு ஆட்டம்" என்றும் இக்கலை அழைக்கப்படும்

நடைபெறும் முறை

Oyil kummi1.jpg

வேளாண் தொழிலில் செழிப்பு வேண்டியும், வெப்பு நோய் குறைய வேண்டியும், மழையை எதிர்நோக்கியும் ஒயில் கும்மி நிகழ்த்தப்படுகிறது. ஒயில் கும்மிப் பாடலின் பாடு பொருளாக ஆட்டம் செம்மையுடன் நிறைவேறுதல், அரச வாழ்த்துக் கூறல், நோய் தீர்தல், தேர்த்திருவிழா வருணிப்பு, சடங்கு முறை செய்தல், முளைப்பாரியைக் கண்ணாத்தாளாகப் போற்றுதல், தொழில் நடப்பைப் பாடுதல், பயிர் விளைந்து வளம் பெருகுதல், உறவுமுறைக் குறிப்பு, ஊரைக் குறிப்பிடுதல் ஆகியவை அமைகின்றன.

அரிச்சந்திரன் கதையில் வரும் லோகிதாசன் பாம்பு கடித்து இறந்து போன கதைப் பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து, தங்களது போக்கில் பாடும் வழக்கமும் இக்கலையில் உள்ளது.

இவ்வாட்டத்திலும் ஒயிலாட்டத்தைப் போன்று கால்களில் சலங்கைகளைக் கட்டி ஆடுகின்றனர். ஒயில் கும்மியில் கையில் துணியுடன் உள்ளங்கைகளைக் கொட்டும் முறையும் உள்ளது. சடங்கு முறையாக ஆடப்படும் ஒயில் கும்மிக்குப் பயிற்சி எதுவும் இல்லை. இவர்கள் யாரும் ஆடும்போது ஒப்பனை செய்து கொள்வதில்லை.

வட்டவடிவமாக நின்று ஆடும் இவ்வாட்டத்தின் இறுதியில் அமர்ந்தாடல் முறை இடம் பெறும். இறுதியில் நேர்கோட்டு முறையும் பின்பற்றப்படும். இந்த நேர்கோட்டு முறை ஆட்டத்திற்கு மட்டுமே அண்ணாவி (தலைவர்) பயிற்சியளிக்கிறார்.

ஒயிலாட்டம் மிகுதியாக நடைபெறும் இடங்களுக்கு அருகிலுள்ள ஊர்களில் ஒயில் கும்மி ஆடுவோர் கால்சட்டையும், பனியனும் அணிந்து கொண்டு 'ரிப்பன்’ தலைக்கட்டில் பலூன்களைக் கட்டிக் கொண்டும் ஆடுகின்றனர். இப்பழக்கத்தை ஒயிலாட்டத்தின் தாக்கமாகக் கருதலாம். இன்று உலோகத்தாலான கால்மணிக் கச்சங்களைக் கட்டி ஆடுகின்றனர்.

இசைக்கருவிகள்

இந்நிகழ்த்துக் கலையில் பானைத்தாளம், தோற்பானைத் தாளம், சிங்கி ஆகிய இசைக்கருவிகளுள் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர்.

நடைபெறும் இடம்

ஒயிலாட்டம், ஒயில் கும்மி இரண்டும் ஊர்ப் பொதுவிடமான மந்தைத் திடலில் உள்ள முளைக்கொட்டுத் திண்ணையைச் சுற்றியுள்ள சாணம் தெளித்த பகுதியில் நடைபெறுகிறது அல்லது அதற்கு அருகில் உள்ள பகுதியில் நிகழ்த்தப்படுகிறது. இதுவே இக்கலையின் ஆடுகளமாக அமையும்.

நிகழ்த்தும் சாதிகள்

இக்கலையில் இடைநிலைச் சாதியினரான இடையர், கள்ளர் சாதிகளில் உள்ளவர்கள் பங்குகொள்கின்றனர். இக்கலை பெரும்பாலும் ஆண்களாலே நிகழ்த்தப்படுகின்றன. சில இடங்களில் பெண்கள் தனித்து நின்று இவ்வாட்டத்தை ஆடுவதுண்டு.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

காணொளி


✅Finalised Page