இல்லவை நகுதல்(பெருந்திணை)
இல்லவை நகுதல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி இல்லாதனவற்றைச் சொல்லிச் சிரித்தலைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அழகிய பற்களை உடைய பெண் உள்ளன அல்லாதவற்றை உரைத்து வயல்கள் சூழ்ந்த ஊரனை நகைத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
இல்லவை சொல்லி இலங்கு எயிற்று அரிவை
நல்வயல் ஊரனை நகை மிகுத்தன்று(கொளு 16.7)
வெண்பா
முற்றா முலையர் முயங்க இதழ் குழைந்த
நற்றார் அகலம் நகை தரலின் - நல்தார்
கலவேம் என நேர்ந்தும் காஞ்சி நல்ஊர
புலவேம் பொறுத்தல் அரிது (312)
பொருள்: இளம் மார்பினை உடைய பெண்கள் தழுவ உன் பூமாலை வாடிய தோற்றம் சிரிப்பைத் தருதலின், உன்னைச் சேரவேண்டாம் எனக் கருதினாலும் தலைவனே உன்னோடு ஊடேன்; ஏனெனில் உன்னுடன் ஊடினால் என்னால் தாங்க இயலாது.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2025, 21:02:58 IST