ஆபிதீன்
ஆபிதீன் (பிறப்பு: மார்ச் 13, 1958) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். பெரும்பாலும் இணைய இதழ்களில் 2002 முதல் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.
பிறப்பு, கல்வி
ஆபிதீன் தமிழ்நாட்டின் நாகூரில் ஜே.எம்.ஹுசைன், பல்கிஸ் நாச்சியார் இணையருக்கு மூத்த மகனாக மார்ச் 13, 1958-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரு தங்கைகள். தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். 1974-1975-ல் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்றார். 1976-1979-ல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாகம் (B.B.A) படித்தார். சென்னையில் தங்கி A.C.S-ல் (Associate Company Secretary Course) சேர்ந்தார். உடல்நிலை காரணமாக அதைத் தொடர இயலவில்லை.
தனி வாழ்க்கை
ஆபிதீன் ஆயிஷா பீவியை மணந்தார். மகள் அனீகா நிலோஃபர், மகன் முஹம்மது நதீம்.
ஆபிதீன் ஆரம்ப காலத்தில் ஓவியத்திலுள்ள விருப்பம் காரணமாக சென்னையில் 'அபிதாஸ் அட்வர்டைஸிங்' என்ற கம்பெனியை மண்ணடியில் ஆரம்பித்தார். ஊரிலிருந்த தனது மாமாவின் 'சீஸன் ஸ்டீரியோ' ரிகார்டிங் கடையில் இரு வருடங்கள் வேலைபார்த்தார். 1985-1989 வரை அல்-கோபர், சவுதியில் ஒரு விளையாட்டுத்துறை சார்ந்த நிறுவனத்தில் விற்பனையாளராக இருந்தார். 1990-ல் காரைக்காலில் இன்ஸ்டிட்யூட் ஒன்றில் கணினித்துறையில் பயிற்சி பெற்றார். 1991-லிருந்து துபாயில் ஓவியர், வலையமைப்பு நிர்வாகம், நிரலெழுத்து, கணக்காளர் என பல பணிகள் செய்தார். துபாயில் ஒரு நில வணிக(Real Estate) நிறுவனத்தில் மூத்த நிதி ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
ஆபிதீன் பள்ளிப்பருவத்தில் நண்பர் சீனுவாசன் நடத்திய 'பூங்கா' எனும் கையெழுத்து இதழில் பங்களிப்பு செய்துள்ளார். தனது தம்பியின் 'மவுத்' (இறப்பு) குறித்து ஒரு நண்பருக்கு 1981-ல் இவர் எழுதிய கடிதம், 'யாத்ரா' சிற்றிதழில் 'குழந்தை' என்ற தலைப்பில் வெளியானது. கந்தூரியையும் இசையையும் மையமாக வைத்து எழுதிய அடுத்த கடிதம், 'கடை' என்ற குறுநாவலாக கணையாழி இதழில் தி.ஜா குறுநாவல் திட்டத்தில் தேர்வாகி 1985-ல் வெளியானது. சஃபர்-ன் (பிரயாணம்) வலியை அங்கதச் சுவையோடு எழுதினார்.
ஆதர்ச எழுத்தாளர்களாக நீலபத்மனாபன், கி.ரா ஆகியோரைக் குறிப்பிடுகிறார். திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்களில் 2002 முதல் எழுதிவருகிறார்.
விருது
- அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் 2018-ல் நடத்திய விழாவில் 'இலக்கிய ஆளுமை' விருது பெற்றார்.
மதிப்பீடு
மென்மையான அங்கதம் கொண்ட மொழியில் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதும் ஆபிதீன் தமிழ் இஸ்லாமிய வாழ்க்கையை நுணுக்கமாகச் சித்தரிக்கும் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். ஆபிதீன் தமிழ் இஸ்லாமிய வாழ்க்கையிலுள்ள சூஃபி பண்பாட்டுக் கூறுகளையும், தமிழ் இஸ்லாமியர்களின் நீண்ட வரலாற்றுப்பின்னணியையும் கதைகளிலும் இணையக்குறிப்புகளிலும் தொடர்ச்சியாக முன்வைப்பவர். இந்தியாவிலுள்ள முதன்மையான இஸ்லாமியப் படைப்பாளிகளை தமிழுக்கு அறிமுகம் செய்யும் மொழியாக்கங்களையும் செய்துவருகிறார்.
நூல்கள் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
- இடம் (ஸ்நேகா பதிப்பகம் வெளியீடு, 2002)
- உயிர்த்தலம் (எனி இந்தியன் பதிப்பகம் 2007, காலச்சுவடு 2015)
- அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு (கிண்டில் பதிப்பு 2019)
கட்டுரைத்தொடர்
- சூஃபி 1996 - துபாய் டைரிக் குறிப்புகள்
உசாத்துணை
- ஆபிதீன் பக்கங்கள்
- ஆபிதீன் பக்கங்கள் (ii)
- ஆபிதீனின் 'இடம்' - சதாரா மாலதி
- பெருகிப் பாய்ந்தோடும் நகைச்சுவை தீட்சண்யம் - பி.கே சிவகுமார்
- மீண்ட பொக்கிஷம் (ஆபிதீன் ஓவியங்கள்) - நாகூர் ரூமி
- ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்! - தாஜ்
- புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள் - க. மோகனரங்கன்
- எதிர்வினை : ஆபிதீனின் 'போனாலும்...' கதை - நாகூர் ரூமி
- ஆபிதீன் கதைகள் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
- எழுத்தாளர் ஆபிதீன் குறித்த ஒரு காணொளி - கானல் அமீரகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Nov-2025, 21:16:26 IST