under review

ஆனைவாரி ஆனந்தன்

From Tamil Wiki
ஆனைவாரி
Golden verses.jpg

ஆனைவாரி ஆனந்தன் (ஆனைவாரி இராமானுஜம் ஆனந்தன், ஆனைவாரியார், கவிக்குயில் ஆனந்தன்) (பிறப்பு: பிப்ரவரி 10, 1950) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், சித்தா-ஹோமியோபதி மருத்துவர், சித்த மருத்துவ வரலாற்று ஆராய்ச்சியாளர், குழந்தை எழுத்தாளர். சாகித்ய அகாதெமிக்காக ஐந்து இந்திய இலக்கியங்களை ஆங்கில மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்தார்.

பிறப்பு,கல்வி

ஆனந்தன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் - புவனகிரிக்கருகிலுள்ள ஆனைவாரி என்னும் ஊரில் அ. இராமானுஜம்- அஞ்சலையம்மாள் இணையருக்கு பிப்ரவரி 10, 1950 அன்று பிறந்தார். பிறந்த ஊரின் பெயரை இணைத்துக்கொண்டு ஆனைவாரி ஆனந்தன் என்ற பெயரில் எழுத்துலகில் அறியப்படுகிறார்.

ஆனந்தன் சேத்தியாத்தோப்பு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார், விருத்தாசலம் அரசினர் கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்து, கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இளநிலை அறிவியல் (1969-1972) பட்டமும், மதுரைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், முதுநிலை ஆசிரியக்கல்விப் பட்டமும் பெற்றார். 2002-ல் சித்த மருத்துவ வரலாற்று ஆய்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஹோமியோபதி மருத்துவப்பயிற்சி பெற்று தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் நடத்திய தேர்வில் தேர்வாகி ஹோமியோபதி மருத்துவராகவும் பதிவுபெற்றார்.

தனி வாழ்க்கை

ஆனைவாரி ஆனந்தன் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை அமைச்சகத்தில் 1974 முதல் 18 ஆண்டுகள்,பணிபுரிந்தார். இந்திய மருத்துவத்துறையில் சித்தா- ஆயுர்வேதப் பாடநூல்கள் வெளியீட்டுப் பதிப்பாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பு அலுவலராகவும் (Gazetted Post- 1991-2009) 18 ஆண்டுகள் பணிபுரிந்து 2009-ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்காலத்திற்குப் பின் எழுத்துப்பணியிலும், மொழியாக்கங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஆனைவாரி ஆனந்தனின் மனைவி ஜெயந்தி மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆனைவாரியார் நடத்தும் சேத்தியாத்தோப்பு தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர்.

அறிவியல்/மருத்துவ நூல்கள்

Compendium.jpg

ஆனைவாரி ஆனந்தன் முனைவர் பட்டத்திற்காக சித்த மருத்துவ வரலாற்றில் ஆய்வுகள் மேற்கொண்டார். அவரது ஆய்வேட்டை 'சித்த மருத்துவ வரலாறு” என்ற நூலாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2008) வெளியிட்டது. இந்நூல் சித்த மருத்துவ இளநிலைப் படிப்பின்-BSMS-பாடத்திட்டத்தில் மத்திய அரசால்(ஆயுஷ்) சேர்க்கப் பட்டுள்ளது.

ஆனைவாரி ஆனந்தன் எளிய தமிழில் பல அறிவியல் நூல்கள் எழுதினார். பல அறிவியல் விழாக்கள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். 'விண்ணிலே ஒரு வீடு' அறிவியலும் கற்பனையும் கலந்து எழுதப்பட்ட நூல்.

அறிவியல் மருத்துவத்துறை மொழியாக்கங்கள்

ஆனைவாரியார் இந்திய மருத்துவத்துறையில் மொழிபெயர்ப்புச் சிறப்பு அலுவலர் பணியில் இருந்தபோது 12 சித்த மருத்துவப் பாட நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

Contemporary.jpg

1983-ல் இலங்கையின் கலவரங்களின்போது ஆனைவாரியார் எழுதிய கவிதைகளின் விளைவாக 'சுகந்தம்' என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டு, பின் அது 'கவிக்குயில்' இதழாக 1984-முதல் தொடர்ந்து வெளிவருகிறது. சுகந்தம் இதழின் வாசகர்கள் தொடங்கிய 'சுகந்த மன்றம்' பல கடற்கரைக் கவியரங்கங்களை நடத்தியது. இம்மன்றம் பின்னர் 'கவிக்குயில் கழகம்' எனப் பெயர் மாற்றம் கண்டது. 1990-களில் கவிக்குயில் இதழின் மூலம் பல இளம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் அறிமுகமாயினர்.

1981 முதல் 2023 ஆண்டுகளில் சென்னை மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்களில் ஆனைவாரியாரின் 20-க்கும் மேற்பட்ட இலக்கிய உரைகள் ஒலிபரப்பாகி உள்ளன. இவை 'வானொலியில் ஆனைவாரியார்' என்னும் நூலாக வெளிவந்தன(மணிவாசகர் பதிப்பகம்).

சிறார் இலக்கியம்

ஆனைவாரியார் சிறார்களுக்கான அறிவியல் நூல்கள் எழுதினார். சிறார்களுக்காக அறிவியல் கருத்துகள் கொண்ட பல பாடல்களை எழுதினார். அவரது குழந்தைப் பாடல்கள் 5 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. 'Modern Rhymes for KG' நூலிலுள்ள சிறார் பாடல்கள் சில பாலர் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களுக்காக ஆனைவாரியார் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பாராட்டுகளைப் பெற்றார்.

ஔவையார் அறநெறிக் கதைகள்

ஆனைவாரியார் ஔவையார் இயற்றிய ஆத்திசூடியின் 109 பா அடிகளில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு எழுத்தாளரைக்கொண்டு கதை எழுதி 'ஔவையார் அறநெறிக் கதைகள்' என்னும் தொகுப்பு நூலை வெளியிடும் பணியில் தன் இணையர் ஜெயந்தி ஆனந்தனுடன் இணைந்து ஈடுபட்டுள்ளார்.

சாகித்ய அகாதெமிக்காக மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள்
Tirukkural.jpg
மொழியாக்கங்கள்

ஆனைவாரி ஆனந்தன் திருக்குறளை ஆங்கிலத்தில் இரண்டிரண்டு அடிகளில் மொழியாக்கம் செய்தார்(2020). சங்ககால மற்றும் தற்காலக் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். திருக்குறளுக்கு எளிய தமிழ் உரையையும் எழுதி வெளியிட்டுள்ளார்(2022). 12 சித்த மருத்துவ நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

'Contemporary Tamil Poetry' நூல் தேர்ந்தெடுக்கப்பட்ட சமகால தமிழ்க் கவிதைகளின் ஆங்கில, ஹிந்தி மொழியாக்கங்களின் தொகுப்பு. ஆங்கில மொழியாக்கம் ஆனைவாரியாராலும், ஹிந்தி மொழியாக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்புக் குழுவாலும் செய்யப்பட்டது.

ஆனைவாரி ஆனந்தன் சாகித்ய அகாதெமிக்காக பின்வரும் பிறமொழி இந்திய இலக்கியங்களை ஆங்கில மூலத்திலிருந்து மொழியாக்கம் செய்தார்

  • பரவஸ்து சின்னையா சூரி-தெலுங்கு மேதை(தெலுங்கு)
  • மராத்தி சிறுவர் நாடகங்கள்
  • நெஞ்சங் கவரும் வங்காளிக் கதைகள்
  • உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்
  • சொற்களின் முடிவில்(கவிஞர் தேவ்)-பஞ்சாபிக் கவிதைகள்

பதிப்பியல்

ஆனைவாரி ஆனந்தன் கவிக்குயில் பதிப்பகத்தை நிறுவித் தன் நூல்களைப் பதிப்பித்து வருகிறார்.

அமைப்புப் பணிகள்

ஆனைவாரியார் வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்து, அந்தமான் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று தமிழ் மாநாடுகளில் பங்கேற்றார். கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நக்கண்ணையார் அரங்கத்தின் அமர்வுத் தலைவராக இருந்தார்.

திருக்குறளைத் தேசிய நூலாக்கக்கோரி இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 100 தமிழ்க் கவிஞர்களை அழைத்துச்சென்று புதுதில்லி- ஜந்தர் மந்தரில் மார்ச் 8, 2012-ல் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

சேத்தியாத்தோப்பு தமிழ்ச் சங்கம்

ஆனைவாரியார் 2021-ல் சேத்தியாத்தோப்பு தமிழ்ச்சங்கத்தை நிறுவினார். தான் எழுதிய திருக்குறள் உரை நூலை வெளியிட்டு, மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை ஊட்டும் பணியில் ஈடுபட்டுவருகிறார். மாணவர்களுக்காகப் பல்வேறு திறன்வளர் போட்டிகளை நடத்தி ஊக்குவித்து வருகிறார். சேத்தியாத்தோப்பு தமிழ்ச்சங்கம் அரசுப் பணித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆலோசனை மையமாகவும் செயல்படுகிறது.

இச்சங்கம் இப்போது பதிவு பெற்ற மன்றமாக இயங்கி வருகிறது.

சமூகப் பணிகள்

ஆனந்தன் பாரதி கலைப்பணிக் கழகம் என்னும் அமைப்பை பின்னலூர் கிராமத்தில் உருவாக்கினார். திரைப்பட இயக்குனர் சிவானந்தாவுடன் இணைந்து இளைஞர்களைப் பயிற்றுவித்து மேடை நாடகங்களை அரங்கேற்றினார்.

1995-ல் நிறுவப்பட்ட ஆனைவாரியார் அறக்கட்டளை மூலம் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பணிகள் மேற்கொண்டார். மருத்துவராக பொதுமக்களுக்காக மருத்துவ சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் தொற்றுக் காலத்தில் தமது கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகளை ஆற்றினார்.

விருதுகள், பரிசுகள்

தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது
  • தமிழக அரசின் சிறந்த நூல் பரிசு -1992
  • சித்த மருத்துவப் பேரறிஞர்-பேரூர் ஆதீனம் (2005)
  • சித்த மருத்துவப் பேரறிஞர்-பேரூர் ஆதீனம் (2005)
  • நெய்வேலி - நிலக்கரி நிறுவன சிறந்த எழுத்தாளர் பரிசு (2012)
  • நல்லி- திசையெட்டும் மொழிபெயர்ப்பு விருது (2014)
  • மணிமேகலை மன்றம்- சிறந்த மொழிபெயர்ப்பாளர் பரிசு (2014)
  • அறிவியல் களஞ்சியம்-மயிலைத் தமிழ்ச் சங்கம் (2015)
  • முனைவர் சிலம்பொலியார் வழங்கிய இலக்கிய இமயம் விருது (2016)
  • 2017-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2018)
ஆனைவாரியாரைப் பற்றிய நூல்கள்

கவிக்குயில் ஆனைவாரியார் வாழ்வும் பணிகளும்- ஜெயந்தி ஆனந்தன், மா.சந்திரா

மதிப்பீடு

ஆனைவாரி ஆனந்தன் தமிழகத்தில் சித்தமருத்துவம் சார்ந்த நூல்களை எழுதியவராக முதன்மையாக மதிப்பிடப்படுகிறார். சித்த மருத்துவம் குறித்த நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் ஆனைவாரியாரின் குறிப்பிடத்தக்க பணியாகக் கருதப்படுகிறது. சாகித்ய அகாதெமிக்காக இந்திய இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவராகவும் அறியப்படுகிறார். அறிவியல் கருத்துக்களை எளிய நடையில் கூறும் நூல்களை எழுதினார். சேத்தியாத்தோப்பு தமிழ்ச் சங்கத்தின் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவி வருகிறார்.

ஆனைவாரியாரின் சிறார் பாடல்கள் நூலை "It is indeed a beautiful creation for pre-primary students" என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டினார்.

நூல்கள்

கவிதை
  • ஆனைவாரியின் கவிதைக் கதைகள்
  • நியாயம் கேட்கிறேன்(கவிதை)
  • முத்து மழைத் தூறல்(கவிதை)
  • மழலைப் பாடல்கள்
  • ஆனைவாரியார் கவிதைகள்
  • எண் பெரும் பாட்டு.
  • ஆனைவாரியார் மெல்லிசைப் பாடல்கள்
நெடும் பாடல்கள்
  • கவிதைத் தேரில்
  • வீரமும் காதலும்
  • அபலையின் கடிதம்
  • விண்ணிலே ஒரு வீடு
  • உள்ளமும் உறவும்
  • அவள் யார்
  • இன்றும் நாளையும்
  • வாழ்வும் வழக்கும்
நாவல்
  • ஒரு கவிஞன் முனிவனாகிறான்
மொழியாக்கங்கள் (ஆங்கிலத்திலிருந்து)
  • பரவஸ்து சின்னையா சூரி(1999)
  • ஒரு திருடனைப் பிடிக்க(மராட்டி குழந்தைக் கவிதைகளின் மொழியாக்கம்)
  • நெஞ்சங் கவரும் வங்காளக் கதைகள்
  • உள்ளங் கவரும் ஒரியக் கதைகள் (A bed of arrows and other stories(Oriya))
  • கவி தேவின் பஞ்சாபிக் கவிதைகள் (Where words end-Punjabi poem by Dev)

இலக்கிய ஆய்வு

  • தமிழர் நெஞ்சில் பாவேந்தர்
  • பாவேந்தரின் இசையமுது
  • ஆங்கிலக் கவிஞர்களும் பாரதியும்
  • கண்ணதாசனின் தைப்பாவை
  • அண்ணாவின் நிலையும் நினைப்பும்
அறிவியல் படைப்புகள்
  • விண்ணிலே ஒரு வீடு
  • வியப்பூட்டும் விந்தைகள்
  • அது ஏன்? இது ஏன்?
  • காற்றாலை
  • அறிவோம் தெளிவோம்
  • அறிவியலின் வளர்ச்சியிலே
  • அஞ்சல் தந்தி தொலைபேசி
  • நான் தான் சக்தி
  • மனிதன் வந்த வழி
  • அறிவியல் கொடுக்கும் அதிசய மகசூல்
  • சூழல் தூய்மையே சுகமான வாழ்வு
  • சித்த மருத்துவ வரலாறு
  • மனப்பாவை
  • தொன்மைத் தமிழகம்.
  • மொழிபெயர்ப்பு- சில நுட்பங்கள்
  • பாட்டி மருத்துவம்
  • வானொலியில் ஆனைவாரியார்
English Translations
  • Modern Rhymes for KG
  • Tirukkural (English-Tamil)
  • Reliance General Knowledge
  • An Anthology of Modern Tamil Poetry-2013
  • Glimpses of Modern Tamil Poetry -2015
  • Golden Verses of Classical Tamil -2015
  • Contemporary Tamil Poetry- 2016 (Tamil, English & Hindi)
  • Singing Cuckoo-(English-Hindi)
  • Tamil the Sweetest, is our Joy and Pleasure (2020)
  • TRANSLATED & EDITED SIDDHA MEDICAL WORKS :
  • A Compendium of Siddha Doctrine
  • Siddha Toxicology
  • Siddha Principles of Social & Preventive Medicine
  • Siddha Materia Medica -Mineral & Animal Kingdom
  • Special Medicines in Siddha
  • Siddha Medicine- General -Part I
  • Theraiyar Maha Karisal
  • Line of Treatment in Siddha- Part I
  • Anuboga Vaidya Navaneetham- Parts I & II
  • Principles of Diagnosis in Siddha

உசாத்துணை

நன்றி: ஆனைவாரி ஆனந்தன்


✅Finalised Page