under review

ஆகோள்

From Tamil Wiki

ஆகோள் வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. எதிர்த்த பகைவரை வீழ்த்தி பகை நாட்டின் ஆநிரைகளைக் கவர்வது ஆகோள்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெட்சி மறவர்கள் தங்கள் பகைவரை வென்று ஆரவாரம் செய்து காவற்காட்டில் இருந்த கன்றுகளுடனே ஆநிரையைக் கைப்பற்றுவது ஆகோள் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வென்றுஆர்த்து விறல்மறவர்
கன்றோடும் ஆதழீஇயன்று(கொளு 1.12)

வெண்பா

கொடுவரி சூடிக் குழுஉக் கொண்டு அனைத்தால்
நெடுவரை நீள் வேய் நரலும் - நடுவூர்க்
கணநிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை (9)

பொருள்: உயரிய மலையிடத்தே, நீண்ட மூங்கில்கள் ஒலிக்கின்ற ஊர் நடுவில் பகைவரது திரளான ஆநிரைகளைக் கவர்ந்து, நிணத்தைக் கோத்த வேலை உடையவரான வெட்சி மறவர்கள் நின்றிருந்த நிலை புலிகள் ஒன்றுகூடித் திரண்டு ஓரிடத்தே கூட்டமிட்டிருந்ததை ஒத்திருந்தது.

வெட்சி மறவர்கள் ஊர் நடுவில் புகுந்தார்கள். பகை மறவரின் காவலில் இருந்த ஆநிரையைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றியவர்கள், அந்த இடத்தினின்றும் அகலாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களது நிலை, புலிகள் பல தம்முள் இணைந்து ஓரிடத்தே கூடியிருந்ததனை ஒப்பதாய் இருந்தது.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Mar-2025, 09:43:28 IST