under review

அர்ச். அருளானந்தர் அம்மானை

From Tamil Wiki

அர்ச். அருளானந்தர் அம்மானை (பதிப்பு: 1965), புனித அருளானந்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சிற்றிலக்கிய நூல். இந்நூலை யாழ்ப்பாணத்திலுள்ள பெரிய கல்லாறு என்னும் ஊரைச் சேர்ந்த சாலமோன் என்பவர் இயற்றினார். ’அர்ச்’ என்பது ‘அர்ச்சிஷ்ட’ என்பதன் சுருக்கம். அர்ச்சிஷ்ட என்பதற்குப் ‘புனிதர்’ என்பது பொருள்.

வெளியீடு

புனித அருளானந்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் அம்மானை நூல் அர்ச். அருளானந்தர் அம்மானை. 1852-க்குப் பிறகு இயற்றப்பட்ட இந்நூல், மட்டகிளப்பு ராஜன் அச்சகத்தில் 1965-ல் அச்சிடப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு

புனித அருளானந்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் அர்ச். அருளானந்தர் அம்மானை. யாழ்ப்பாணத்திலுள்ள பெரிய கல்லாறு என்னும் ஊரைச் சேர்ந்த சாலமோன் என்பவர் இந்நூலை இயற்றினார். இவர் சித்த மருத்துவர் என்பதைத் தவிர இவரைப் பற்றிய பிற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நூல் அமைப்பு

அர்ச். அருளானந்தர் அம்மானை நூலில் விருத்தம் ஒன்றும், 144 அம்மானைக் கண்ணிகளும் இடம்பெற்றன. புனித அருளானந்தர் பிறந்தது முதல் அவர் முக்திப் பேறு பட்டம் பெற்றது வரையுள்ள அவரது வரலாறு மிகச் சுருக்கமாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. அதற்குப் பிந்திய நிகழ்ச்சிகள் இந்நூலில் இடம்பெறவில்லை. அருளானந்தர் மரணித்ததும், புனிதர் பட்டம் பெற்ற வரலாறும் தனியாக உரைநடையில் கூறப்பட்டுள்ளது. புனிதரின் வரலாறு 12 பிரிவுகளாகச் சிறு தலைப்புகளுடன் அமைந்துள்ளது.

உள்ளடக்கம்

போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில் புனித அருளானந்தர் பிறந்தார். இளமையில் நோயினின்று புதுமையாகக் காப்பாற்றப்பட்டதால், இயேசு சபையில் சேர்ந்து, குருவாகி, சமயப்பணி செய்யத் தமிழகத்திற்கு வந்தார். இராமநாதபுரம் மன்னனிடம் சிறைப்பட்டார். ஓரியூரில் சமயச் சான்றாளராக உயிர் துறந்தார். பாப்பரசர் அவருக்கு முத்திபேறு அளித்தார். பாப்பு ஒன்பதாம் பத்திநாதர் புனித அருளானந்தருக்கு 1852-ல் முத்திபேறு பட்டம் அளித்தார். அவரது திரு உருவைக் கோயில்களில் வைத்து வணக்கம் செய்யவும், ஆண்டு தோறும் மாசித் திங்கள் முதல்நாள் அருளானந்தரது திருநாளைக் கொண்டாடவும் அனுமதி வழங்கினார். இச்செய்திகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பாடல் நடை

அருளானந்தருக்குப் புனிதர் பட்டம்

காலமது அறிந்துக் கணக்கதுதான் பார்த்து
ஏலவே வருகின்ற எல்லா வருஷத்திலும்
மாசி மாதத்தில் மாறாத முதல் திகதி
ஆசித்துத் திருநாள் அன்பாகக் கொண்டாட
வேண்டுமென்று பாப்புவும் விரும்பியே நிருபத்தில்
ஊண்டியே எழுதிவைத்தார் ஒன்பதாம் பத்திநாத

மதிப்பீடு

கிறித்துவ அம்மானைகள் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் தோன்றினாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின முற்பகுதி வரை மிகுந்த செல்வாக்குப் பெற்றன. மேலும், இருபதாம் நூற்றாண்டில் அம்மானைகள் புதிதாக இயற்றப்பட்டு அச்சிடப்பட்டன. பழைய அம்மானைகளின் முதற் பதிப்புகளும் மறுபதிப்புகளும் வெளிவந்தன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அர்ச். அருளானந்தர் அம்மானை நூல் அறியப்படுகிறது. அளவில் சிறியதாயினும் நாட்டுப்புற இலக்கியத்திற்கு இருக்க வேண்டிய இனிமை, எளிமை முதலிய இயல்புகளைக் கொண்ட நூலாக அர்ச். அருளானந்தர் அம்மானை நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

  • செம்மொழித் தமிழ் வளர்ச்சியில் கிறித்தவம் - தொகுதி 2: தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர் ப.ச. ஏசுதாசன், முனைவர் ப. டேவிட் பிரபாகர்: முதல் பதிப்பு: மே: 2010



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jun-2024, 20:47:00 IST