அன்புராஜ்
அன்புராஜ் (பிறப்பு: மே 6, 1980) சமூகச் செயல்பாட்டாளர், நாடக ஆசிரியர். பழங்குடியினர் மற்றும் சிறைக் கைதிகள் வாழ்க்கை நலனுக்காகப் பணியாற்றுபவர். தனது ஆசிரியர் கட்டிமணியின் வழியில் சிறைக் கைதிகளை ஒருங்கிணைத்து நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவர்.
பிறப்பு, கல்வி
அன்புராஜ் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் புதுக்காடு அருகே உள்ள கழுதப்பாளி என்னும் கிராமத்தில் உத்தராசு, அன்னக்கொடி இணையருக்கு மே 6, 1980-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் தம்பி செந்தில் குமார், தங்கை செல்வி. அன்புராஜ் ஆரம்பக் கல்வியை புதுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்றார். சிறையில் இருந்தபோது இதழியலில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
அன்புராஜ் 2011-ல் ரேவதியை மணந்தார். ரேவதி அன்புராஜுடன் சிறையில் வாழ்ந்தவர். யாழிசை, அகரன் ஆகிய இரண்டு குழந்தைகள்.
சிறை வாழ்க்கை
அன்புராஜுக்கு பதினாறு வயதில் வீரப்பனோடு அறிமுகம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த வீரப்பன் குழுவினர் தங்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருள்களை வாங்க கிராம மக்களின் உதவியை நாடிவருவார்கள். அப்படி ஒருநாள் அன்புராஜ் தனது சகோதரர்களுடன் வீரப்பனின் கூட்டாளிகளைப் பார்த்து அவர்களுடன் இணைந்தார். இருபது வயதில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு சிறை சென்றார். பதினெட்டு ஆண்டுகள் சிறைக்குப் பின் நன்னடத்தை காரணமாக கர்நாடக சிறையிலிருந்து 2016-ல் விடுதலை செய்யப்பட்டார்.
நாடக வாழ்க்கை
கர்நாடகாவின் மிகப்பெரும் நாடக ஆசிரியர்களுள் ஒருவரான சங்கல்பா அமைப்பின் ஹலுகப்பா கட்டிமணி அவர்களை சிறையில் சந்தித்தார். கட்டிமணி சிறைச்சாலையிலிருக்கும் கைதிகளை ஒருங்கிணைத்து, நாடகங்களை உருவாக்குவதை வழக்கமாகக்கொண்டவர். அன்புராஜ் அவருடன் இணைந்து நாடகங்கள் நடித்தார். சிறைக்கு வரும் கன்னட நாளிதழ்கள், பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் நண்பர்களின் உதவியோடு வாசித்தார். நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் மிகக் குறுகிய காலத்திலேயே அவரால் கன்னட மொழியைக் கற்றுக்கொள்ள முடிந்தது. நாடக அரங்கில் கதாப்பாத்திரங்களாக உருமாறும்போது அந்த மாற்றம் தனக்குள்ளும் நிகழ்வதை அந்தரங்கமாக உணர்ந்தார். கட்டிமணியின் நாடகக்குழுவில் முக்கியமான நபராக மாறினார்.
இதழியல்
சிறையிலிருந்தபடி ஜெயிலரின் அனுமதியோடு பத்திரிகை தொடங்கினார். கர்நாடகச் சிறை வரலாற்றில் அதுவொரு புரட்சி. கர்நாடகாவின் முக்கிய ஆளுமைகள் அத்தனை பேருக்கும் அந்தப் பத்திரிகையை அனுப்பினார். அவர்களையும் தங்களது பத்திரிகையில் எழுதச் சொல்லிக் கேட்டார். கிரிஷ் கர்னாட், கெளரி லங்கேஷ் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுடன் அவருக்குத் தொடர்பும் நட்பும் கிடைத்தது.
உசாத்துணை
- வாழ்வென்பதை எங்கிருந்தும் தொடங்கலாம் - அன்புராஜ் - பவா செல்லதுரை
- தோழர் அன்புராஜ் : காட்டிலிருந்து ஒரு குரல் - கலை மூலம் தன்னைச் செதுக்கிக்கொண்ட போராளி|இவர்கள்|பகுதி 25 - லஷ்மி சரவணக்குமார் - vikatan
- இந்தச் சூழலில் அன்புராஜ் தான் உருவாக முடியும்! - அதிஅசுரன்: keetru
- Anburaj speech | காளிதாஸ், பல்லவன் - உண்டாட்டு | வம்சி புக்ஸ் | அன்புராஜ்
- Anburaj speech | மேய்ப்பர்களின் கூடுகை | பவா செல்லதுரை | அன்புராஜ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Feb-2026, 09:22:24 IST