under review

அதிரியர் அம்மானை

From Tamil Wiki
அதிரியர் அம்மானை

அதிரியர் அம்மானை (அதிரியர் அம்மானை; அதிரியார் அம்மானை; அதிரியன் அம்மானை; அதிரியான் அம்மானை) (1913), கிறிஸ்தவ மதப் புனிதர்களுள் ஒருவரான அதிரியர் என்பவரது வாழ்க்கையைக் கூறும் நூல். இந்நூலை இயற்றியவர் பெயர் அறியப்படவில்லை. நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர், முனைவர் பொ. சாம் டேனியல்.

வெளியீடு

அதிரியர் அம்மானை நூல் 1913-ல் இயற்றப்பட்டது. அதன் மூல ஓலைச்சுவடியிலிருந்து இந்நூலின் இரண்டாம் பதிப்பை சரசுவதி மகால் நூலகம், 2007-ல் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர் அல்ஜீரியா, கான்ஸ்தன்தயின் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் பொ. சாம் டேனியல்.

நூல் தோற்றம்

காயல்பதி நகரான், தாணு என்னும் மன்னன் கேட்டுக் கொண்டதின் பேரில் அதிரியர் அம்மானை நூலை இயற்றியதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நூல் அமைப்பு

அதிரியர் அம்மானை நூலின் மூல ஓலைச்சுவடிகளில் அதிரியர் அம்மானை, அதிரியார் அம்மானை, அதிரியன் அம்மானை, அதிரியான் அம்மானை எனப் பல்வேறு பாடபேதங்கள் உள்ளதாக நூலின் பதிப்பு வரலாறு கூறுகிறது. சுவடி பல இடங்களில் சிதைவுற்றதால் பாடல்கள் முழுமையாக அமையவில்லை. ஆசிரியப்பாவில் எழுதப்பட்ட இந்நூலில் விருத்தப் பாடல்களும் இடம்பெற்றன. நூலில் ஆங்காங்கே ‘அம்மானை’ என்ற சொல் இடம்பெற்றது. இந்நூலில் 708 பாடல்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

அதிரியர் அம்மானை ஒரு நாட்டுப் புறக் கதைக் காவியமாக அறியப்படுகிறது. ரோம் நகரத்தில் வாழ்ந்த அதிரியான் - நத்தாலியாள் இணையரின் உறுதியான கிறிஸ்தவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டது. மசுமியான் என்ற மன்னன் ரோமை ஆட்சி செய்த காலத்தில் கிறிஸ்தவ மதம் சார்ந்த மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். பல்வேறு துன்பங்களை விளைவித்தான். கிறிஸ்தவர்களைச் சிறையிலிட்டுத் துன்பப்படுத்தினான். மன்னனின் காவல் அதிகாரியாக அவனது நம்பிக்கைக்கு உகந்த அதிரியான் பணியாற்றினான். அவன் சிறைவாசிகள் மூலம் கிறிஸ்துவைப் பற்றிக் கேள்வியுற்றுக் கிறிஸ்தவனானான். அதிரியானும் நத்தாலியாளும் மன்னனின் கொடுமைக்கு அஞ்சாது கிறிஸ்துவுக்காகப் பாடுபட்டு உயிர் நீத்தனர். பின்னர் புனிதர்களாக உயர்வு பெற்றனர். அவர்களின் கதையைக் கூறுவதே அதிரியர் அம்மானை.

இந்நூலில் இந்து மதத் தெய்வங்களைப் பற்றிய சாடல்கள் இடம்பெற்றன.

பாடல் நடை

மன்னன் செய்த கொடுமை

மா கொடிய னென்று மசுமியானெனும் ராயன்
அன்னீதி கொண்டு அவமதத்தை மெய்யெனவே
தன்னீதி கேடாய்த் தலம் புரக்கும் நாளையிலே
வேந்தன் குடைக்கீழ் விரும்பி வரும் நாளையிலே

போந்த பதி யொன்று புகலக் கேளம்மானை.
ஆய்ந் தங்கு சாவி அறிந்த கிறிஸ்தவரைப்
பங்கப் படுத்துதலும் பாதகங்கள் பண்ணுதலும்
சங்கத்தைத் தள்ளி சதி மானம் பண்ணுதலும்

நிந்தனைகள் பண்ணுதலும் நிட்டூரஞ் செய்குதலும்
இந்தப் படியே யெவருங் கிறிஸ்தவரை
நிட்டூரஞ் செய்கை கண்டு நேசக் கிறிஸ்தவர்கள்
பட்டணத்தை விட்டுப் பலபேர் வனம் புகுந்து

உண்டியற்று வாடி யுறங்காதிரவு பகல்
தண்டலையிற் புள்ளுந் தனிமானும் வானரமும்
கோவப் புலியுங் கொடுவரியுங் குஞ்சரமும்
மேவப் பயந்தீர்ந்து மேலுலகங்கண்டவர் போல்

வாயு வருந்தி வனத்திற் சருகருந்தி
மாயு மளவும் வலிய தவஞ் செய்திருந்தார்
சேரிகள் தோறுஞ் செறிந்தே புறமதத்தார்
ஆரு மறியாம லாதிதனைப் பணிவார்

வீடாரந் தோறும் வெகுபேர் கிறிஸ்தவர்கள்
கூடாரைக் கூடாமல் கொள்கையுடனே நடந்து
வஞ்சித்தோற் கஞ்சி மனத்தை யிழக்காமல்
நெஞ்சிற் தெளிவாக நீதியுடனே யிருப்பார்

வாக்கால் விளம்பி மறைக்குறுதியாய்ச் சிலபேர்
தக்கரசன் கையால் தலத்தேமடிந்திடுவார்

இந்து மதத் தெய்வங்களைச் சாடல்

வாரணத்தைப் போற்றி மடவார் தனைப் புணர
காரணத்தில் வேடுவனாய் கண் மூன்றுடைய துதிக்
கையனொரு மகனாய்க் காமன் மறுமகனாய்
செய்ய அறுமுகனாய்ச் சேர்ந்த கணபதியும்

பெற்றெடுத்த பேராய் பிதாவுக்கிவர் குருவாய்
உற்ற வுமை தாயா யொருபோது தேவியுமாய்
மாலுக்கு மைத்துனனாய் மற்றும் பிரும்மாவை
கோல மறு மகனாய் கொண்டவனோ வுங்கள் தெய்வம்?

மதிப்பீடு

அதிரியர் அம்மானை நூல், ரோம் நகரத்தில் வாழ்ந்து கிறிஸ்தவ மதப் புனிதர்களாக உயர்ந்த அதிரியார் - நத்தாலியாள் இணையரின் வாழ்க்கையைக் கூறும் நூல். இந்நூலின் மூலச் சுவடி சிதைந்துள்ளதால் பல இடங்களில் அவ்வாறே சிதைவுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ’அடியார் வரலாறு’ நூலின் கதை ஒன்றை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டதாக அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Jun-2024, 20:45:55 IST