under review

கிமாராகாங்

From Tamil Wiki
Kimaragang.jpg

கிமாராகாங் பழங்குடியினர் மலேசியாவில் சபா மாநிலத்தில், பிதாஸ் மற்றும் தன்டெப் வட்டாரத்தில் வாழ்கின்றனர்.

தொழில்

கிமாராகாங் பழங்குடியினர், இப்போது, அரசு வேலைகளிலும், விவசாயிகளாகவும், கூலிகளாகவும் வேலை செய்கின்றனர்.

சடங்குகள்

பிறப்புச் சடங்குகள்
பிரசவத்துக்கு முன்

ஒருவர் கர்ப்பம் தரித்த பெண்ணை அச்சுறுத்தும் வகையில் விளையாடக்கூடாது. அப்படி விளையாட்டாகச் சீண்டி அப்பெண் பயந்து போனால், சீண்டியவர் ஹுகூம் சோகிட் (Hukum Sogit) எனப்படும் தண்டம் கட்ட வேண்டும். ஹுகூம் சோகிட் என்பது தன் தவறுக்கு ஒரு சேவலைத் தண்டமாக கொடுப்பது. கர்ப்பம் தரித்த பெண்களின் வீட்டில் யாரும் முன் வாசலில் அமர்ந்திருக்கக்கூடாது. கர்ப்பிணியின் கணவர் தன் கழுத்தில் துணிகளைச் சுற்றிக் கொள்ளக்கூடாது. கர்ப்பிணி வாழும் வீட்டின் படிகளின் ஓரத்தை வெட்டுதல் கூடாது. இந்த விதிகளை மீறுபவர்களின் குழந்தைகள் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு ஊனமாக வாய்ப்புள்ளது என கிமாராகாங் பழங்குடியினர் நம்புகின்றனர்.

பிரசவத்திற்குப் பின்

புதிதாகப் பிரசவித்த பெண்கள் முப்பது நாட்கள் வரை கால்களை நீட்டி அமர வேண்டும். கணவர்கள் மனைவிகளுக்கு உணவளிக்கும்போது, அவற்றைப் பெண்கள் இரு கைகளிலும் வாங்கிக் கொள்ள வேண்டும். புதிதாகப் பிரசவித்த பெண்களுக்குச் சமைக்கும் போது அனைத்து சமையல் பொருட்களையும் மூன்று முறை கழுவ வேண்டும்.

புதிய தாய் முதல் முப்பது நாட்களுக்கு உன்மொலித்தான் (unmolithan) சாப்பிடக்கூடாது. உன்மொலித்தான் என்றால் பானையின் மேற்பரப்பில் இருக்கும் சோறு. குழந்தை பிறந்த முப்பது நாட்களுக்குள் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கும் உன்மொலித்தானைப் பரிமாற மாட்டார்கள்.

குழந்தை பிறந்து முப்பது நாட்கள் முடிந்தவுடன் தீட்டு கழிக்க சுங்காய் நாளைக் கொண்டாடுவர். (Hari Sungkai). குழந்தையின் தகப்பனார் சுங்காய் சடங்குக்கு வந்த உறவினர்களிடம் சிறியதாக வெட்டிய தண்டுகளை அளிப்பார். உறவினர்கள் அதைக் குழந்தையின் வயிற்றில் கொட்ட வேண்டும்.

திருமணச் சடங்கு
மொகும்பாய் (Mogumpai)

மொகும்பாய் திருமணத்திற்காக குறி கேட்டல். வயது வந்த ஆண் அப்பெண் வீட்டிற்குச் சென்று ஓர் இரவு உறங்க வேண்டும். தனது உறக்கத்தில் கினொரிங்கானிடம் (கடவுள்) குறி கேட்பார். நல்ல கனவு வந்தால், அப்பெண்ணை விரும்பிய ஆண் மணக்கலாம்.

லுமாபாட் / சுமொன்டோட்

லுமாபாட் / சுமொன்டோட் என்பது பெண் பார்த்தல். ஆண் வீட்டார் பெண் வீட்டுக்குச் சென்று பெண் கேட்பர். அதில் மங்கதொட் எனும் சடங்கு உள்ளது. மங்கதொட் என்பது சீர் செய்தல். மங்கதொடில் டமாகான் எனப்படும் வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு, தங்க மோதிரம், புகையிலை, முகப்பூச்சு, சேவல் ஆகியவற்றைப் பெண்ணுக்குச் சீராக ஆண் வீட்டார் செலுத்துவர். நிச்சயமானபின் ஆண் வீட்டார் பெண்ணுக்குச் செய்யும் சீர் மொங்கோனான் எனப்படும்.

மிசாசாவோ

மிசாசாவோ என்றால் திருமணம். ஆண்வீட்டார் நிச்சயமாக பெண் வீட்டாருக்கு தினிபு அளிக்க வேண்டும். தினிபு என்பது வேட்டைக் கருவி. தினிபு எடுத்து வரத் தவறினால், திருமணம் ஒத்தி வைக்கப்படலாம்.

இறப்புச் சடங்கு
இறந்த உடலை சுவரில் துளையிட்டு வெளியேற்றல்
Burial1.jpg

கிமாராகாங் பழங்குடியினர் தனது சொந்த ஊரில் இறக்காதவர்களின் உடலை வீட்டிற்கோ, சொந்த ஊருக்கோ எடுத்து வரமாட்டார்கள்.

வீட்டில் இறந்தவர்களை வாசலிலிருந்தோ படியில் இறக்கியோ பிணத்தை வெளியேற்றக் கூடாது. அதை மீறி செய்தால், இறந்தவரின் ஆவி வீட்டிலிருப்பவர்களை மரணிக்க வைக்கக்கூடும் என நம்புகின்றனர். அதனால், இறந்தவரின் தலைக்கு அருகில் இருக்கும் சுவரில் துளையிட்டு, அத்துளையிலிருந்து பிணத்தை வெளியேற்ற வேண்டும்.

வெளியேற்றுவதற்கு முன் பிணத்தை லிந்தாகு, தொங்குங், தொரியுஜு (lintagu,tongkung,toriyuju) எனும் தாவரங்களுடன் இணைப்பர். அதனுடன், மூங்கில்பாய் அல்லது மரவுரியில் சுற்றுவர். வசதியுள்ள கிமாராகாங் குடும்பங்களில் பிணத்தைச் சவப்பெட்டியில் வைப்பர்.

கிமாராகாங் சமூகங்களில் சடங்குகளுக்கான நெறியாளர் இருக்கிறார். இறப்புச் சடங்கில், இறந்தவரின் கணவர்/மனைவி/பிள்ளை/உறவினர் நெறியாளராகலாம். இந்த நெறியாளர் இறந்தவரை அடக்கம் செய்து முடித்த அடுத்த ஏழு நாட்களுக்கு எவரையும் எதையும் பார்க்கக் கூடாது. நெறியாளர் அவரது வீட்டில் இருந்து இறந்தவரின் உடைமைகளை மட்டுமே பார்க்க வேண்டும்.

அடக்கம் செய்த மூன்றாம் நாளில் நெறியாளர் மொங்கோரா (mongora) எனும் சடங்கை நிகழ்த்த வேண்டும். மொங்கோரா சடங்கில் நெறியாளர் சேவல் அடித்து அதன் இரத்தத்தை இறந்தவரின் பேரக்குழந்தைகள், பிள்ளைகளின் நெஞ்சில் தடவுவர். இறந்தவர் உறவுகளின் மனத்துயரைப் போக்குவதற்காக மொங்கோரா சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

இறந்தவரை அடக்கம் செய்த ஏழாம் நாளில், மொனுன்சுப் தாதோட் எனும் சடங்கு நிகழ்த்தப்படும். இந்தச் சடங்கை நெறியாளர் செய்வார். இந்தச் சடங்கைச் செய்தால், இறந்தவரின் ஆவி வீட்டை விட்டு அகலும் என கிமாராகாங் பழங்குடியினர் நம்புகின்றனர். இந்தச் சடங்கைக் கட்டாயமாக நிகழ்த்த வேண்டுமென கிமாராகாங் பழங்குடியினர் நம்புகின்றனர். இல்லையெனில் இறந்தவரின் ஆவி கினபாலு மலையில் தங்காமல் வீட்டில் தங்கி பிரச்சனைகளைக் கொடுக்கும் என நம்புகின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page