under review

64 சிவவடிவங்கள்: 61-வராக சம்ஹார மூர்த்தி

From Tamil Wiki
வராக சம்ஹார மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று வராக சம்ஹார மூர்த்தி

வடிவம்

64 சிவ வடிவங்களில் அறுபத்தொன்றாவது மூர்த்தம் வராக சம்ஹார மூர்த்தி. திருமாலின் அவதாரமாகிய வராகத்தை அழித்ததால் சிவபெருமானுக்கு வராக சம்ஹார மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. (வராகம் = பன்றி)

தொன்மம்

இரணியாட்சன் எனும் அசுரன் பிரம்மனை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெற்றான். இதனால் ஆணவம் கொண்ட அந்த அசுரன், உலகைப் பாய்போலச் சுருட்டி, கடலுக்குள் சென்று மறைந்தான். திருமால் பூமியை மீட்க கருடவாகனத்தில் புறப்பட்டு, வைகுண்டம் தாண்டியதும் வராக உருவம் கொண்டார்.

வராகம் மலையை விட உயரமாகவும். ஒவ்வொரு காலுக்கிடையே ஆயிரக்கணக்கான மைல் தூரம் இடைவெளியும் கொண்டிருந்தது. அதன் வால் அசைவு எட்டுத் திக்கையும் தொட்டது. அதன் மூச்சுக்காற்றின் வெப்பத்தினால் உலகமே குலுங்கியது. அப்படி ஒரு பயங்கர உருவெடுத்த திருமால் கடலையே புரட்டிப்போட்டு அசுரனைக் கண்டுபிடித்தார். அவனைத் தனது கொம்பினால் கொன்று, உலகை மீட்டு ஆதிசேஷனிடம் ஒப்படைத்தார்.

அதன் பின்னும் சீற்றம் குறையாத அவ்வராகம் பெரும் கர்வமுடன் எதிர்வந்த அனைத்து உயிர்களையும் கொன்றது. அதன் கொடுமை கண்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த சிவபெருமான், வேட வடிவம் எடுத்தார். வராகத்தைத் தன் சூலாயுதத்தால் குத்தி, அதன் ஒரு கொம்பை ஒடித்துத் தன்மேனி ஆபரணமாக்கிக் கொண்டார். வராகம் அகந்தை அழிந்து சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டியது. சிவனும் வராகத்தை மன்னித்தார். வராக உருவம் நீங்கிப் பழைய உருவம் கொண்ட திருமால் வைகுந்தம் சென்றார். தேவர்கள் துயர்துடைக்க வராகத்தை அழிக்கச் சிவபெருமான் கொண்ட கோலமே வராக சம்ஹார மூர்த்தி

வழிபாடு

வராக மூர்த்தியைக் காசியிலும், தமிழகத்தில் உள்ள பழமலை கோயிலிலும் காணலாம். காஞ்சிபுரத்துக்கருகில் உள்ள தாமல் என்ற ஊரில் வராகீஸ்வரர் கோயில் உள்ளது. இவருக்கு புதன்கிழமைகளில் நெய்விளக்கும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் அளித்து வழிபட, வியாபாரம் கொழிக்கும்; வாழ்க்கை வளம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Oct-2024, 10:32:11 IST