64 சிவவடிவங்கள்: 48-கஜாந்திக மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கஜாந்திக மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் நாற்பத்தி எட்டாவது மூர்த்தம் கஜாந்திக மூர்த்தி.
தொன்மம்
அசுரனான சூரபத்மன் தேவர்களை வென்று அவர்களுக்குப் பல விதங்களில் துன்பமளித்தான். சூரபத்மனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத இந்திரன், தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழிக்குச் சென்று மறைவாக வசித்தான். அங்கே சிவபெருமானைத் துதித்து வழிபட்டுக் கொண்டிருந்தான். தேவர்கள் சூரனின் கொடுமை தாங்காமல் இந்திரனைத் தேடி சீர்காழி வந்தனர். இந்திரனையும் அழைத்துக் கொண்டு திருக்கயிலையை அடைந்தனர். இந்திராணி சாஸ்தாவின் பாதுகாப்பில் இருந்தார். கயிலையில் சனகாதி முனிவர்கள் யோகத்தினைப் பற்றிச் சிவபெருமானிடம் அளவளாவிக் கொண்டிருந்ததால் இவர்கள் பல ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது.
அச்சமயத்தில் சூரபத்மனின் தங்கையான அஜமுகியும் அவளது தோழியான துன்முகியும் சீர்காழி சென்றனர். இந்திராணியைக் கண்ட அவர்கள், அவளிடம் சூரபத்மனை மணம் செய்து கொள்ளும்படிக் கூறினர். இதற்கு மறுத்த இந்திராணியை அங்கிருந்து இழுத்துச் செல்ல முயன்றனர். இதைப்பார்த்த பாதுகாவலரான சாஸ்தா கடும் சினம் கொண்டார். இந்திராணியைக் கொடுமைப்படுத்தியதற்காக அஜமுகி மற்றும் அவளது தோழியின் கையை வெட்டினார்.
இச்செய்தி கேள்வியுற்ற சூரபத்மனின் மகனான பானுகோபன் கடும்கோபம் கொண்டான். தேவர்களைப் பழிவாங்கப் புறப்பட்டான். சூரபத்மன் தனது சகோதரிகளின் கையை வளரச் செய்தான். பானுகோபன் இந்திராணியையும், இந்திரனையும் தேடி அலைந்தான். பூமியில் எங்கும் அவர்களைக் காணவில்லை. இந்திரலோகத்திலும் அவர்களைக் காணவில்லை. சீற்றம் கொண்ட அவன், இந்திரனின் மகனாகிய ஜெயந்தனுடன் போரிட்டு அவனை வென்றான். தேவலோகத்தின் யானையான ஐராவதத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.
ஐராவதம் பானுகோபனுடன் போக மறுத்து சண்டையிட்டது. போரில் ஐராவதத்தின் தந்தம் உடைந்தது. அதனால் மனம் வருந்திய ஐராவதம், திருவெண்காடு தலத்திற்குச் சென்று முப்பொழுதும் நீராடிச் சிவபெருமானைத் துதித்து வந்தது. அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்குக் காட்சி கொடுத்தார். அதன் குறைகளை நீக்கி அதன் ஒடிந்த தந்தத்தை மீண்டும் வளரச் செய்தார். பழையபடி அதனை இந்திரனின் வாகனமாக்கினார். அதற்குப்பிறகு முருகபெருமானால் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தன்னுலகம் திரும்பினான். ஐராவதமும் அவனுடன் சென்றது, ஐராவதமாகிய யானையின் வேண்டுகோளை ஏற்று வரம் கொடுத்த சிவபெருமான், கஜாந்திக மூர்த்தி என அழைக்கப்படுகிறார்.
வழிபாடு
கஜாந்திக மூர்த்தியை சீர்காழியருகே அமைந்துள்ள திருவெண்காட்டில் தரிசிக்கலாம். இங்குள்ள இறைவனின் திருநாமம் திருவெண்காட்டுநாதர். இறைவி பிரம்மவித்யா நாயகி. இங்குள்ள அக்னி, சூர்ய, சந்திர தீர்த்ததில் அடுத்தடுத்து நீராடி இறைவனை வழிபட இந்திரலோக வாழ்வு சித்திக்கும் என்பது ஐதீகம். திங்கள் கிழமைகளில் மகா வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் காரிய சித்தி அளிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:00:32 IST