under review

64 சிவவடிவங்கள்: 20-திரிபுராந்தக மூர்த்தி

From Tamil Wiki
திரிபுராந்தக மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று திரிபுராந்தக மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் இருபதாவது மூர்த்தம் திரிபுராந்தக மூர்த்தி. திரிபுரம் எரித்து தேவர்களைக் காத்த சிவனின் திருக்கோலமே திரிபுராந்தக மூர்த்தி என அழைக்கப்படுகிறது.

தொன்மம்

தாரகாசுரனுக்கு தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என மூன்று மகன்கள். அவர்கள் பிரம்மாவை நோக்கி நெடுங்காலம் தவமியற்றினர். அவர்களின் தவத்தினால் மகிழ்ந்த பிரம்மா அவர்களுக்குக் காட்சி அளித்தார். பிரம்மாவிடம் அவர்கள் என்றும் அழியாத வரம் வேண்டும் என்று கேட்டனர். பிரம்மா, “அது முடியாத காரியம். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே. மற்ற அனைத்தும் ஒரு நாள் அழிந்தே தீரும். ஆகவே மோட்சமாவது கேளுங்கள்; கிடைக்கும்” என்றார்.

உடனே அம்மூவரும், “அப்படியானால் பொன், வெள்ளி, இரும்பினால் ஆன சுவருடைய முப்புரங்கள் வேண்டும். அவை நாங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்ல வேண்டும். அந்த முப்புரத்தை எங்களையும் சிவபெருமானையும் தவிர வேறு யாராலும் அழிக்க முடியாதபடி இருக்க வேண்டும்” என்று வரம் கேட்டனர்.

பிரம்மாவும் அவர்கள் கேட்டபடி வரம் கொடுத்துவிட்டு மறைந்தார். உடன் அம்மூவரும் கர்வம் கொண்டு, தங்கள் அசுரத் தன்மையை சிவனிடம் மட்டும் காட்டாமல் மற்ற அனைவரிடத்திலும் காட்டினர். அவர்களது தொல்லை தாளாத தேவர்கள் சிவனை நோக்கிக் கடும் தவம் செய்தனர். அவர்களது தவத்தின் பயனால் சிவபெருமான் போர் செய்வதற்குத் தேர் முதலான போர்க் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார்.

தேவர்களும் அவ்வாறே போர்க் கருவிகள் தயார் செய்தனர். தேரில் மந்திர மலையை அச்சாகவும், சூரிய, சந்திரர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்ட பர்வதங்கள் தேரின் தூண்களாகவும் அமைந்தன. புண்ணிய நதிகள் சாமரம் வீச, தேவ கணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான் பார்வதியுடன் இடப வாகனத்தில் இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறித் திருமால் தேரைத் தாங்கினார். ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் முதற்கடவுளான வினாயகரை வேண்ட தேர் பழைய படி சரியானது.

பின் தேவ கணங்கள் புடை சூழ முப்புரம் இருக்கும் இடத்திற்கு அனைவரும் சென்றனர். அப்போது தேவர்கள், தாங்கள் செய்த தேரினால் தான் சிவபெருமான் இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவார். நாம் இல்லாமல் இவரால் வெற்றி பெற முடியாது என்று கர்வம் கொண்டனர். இதனை அறிந்த சிவபெருமான் யுத்தக் கருவிகளைக் கீழே வைத்துவிட்டு முப்புரங்களையும் பார்த்துச் சிரித்தார். உடனே முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. உடனே தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்களும் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுச் சரணடைந்தனர். அவரும் அவர்களை மன்னித்தார். தன் துவார பாலகர்களாக ஏற்றுக் கொண்டார். தேவர்களின் துயரை நீக்கி, முப்புரங்களையும் எரித்ததால் சிவபெருமானுக்கு திரிபுராந்தக மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.

வழிபாடு

கடலூரில் உள்ள திருவதிகையில் திரிபுராந்தக மூர்த்தி வடிவில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார். இவருக்கு அதிகைநாதர் என்ற பெயரும் உள்ளது. இறைவியின் பெயர் திரிபுரசுந்தரி. திரிபுராந்தகருக்கு கெடில நதி நீரால் அபிஷேகமும் வில்வார்ச்சனையும் பகை தீர்க்கும் என்றும் திருமஞ்சனத்தூள் அபிஷேகம் நோய்களைத் தீர்க்கும் என்றும் நம்பிக்கை உள்ளது. சூலை நோய் தீர இங்கு வழிபடும் வழக்கம் உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 19:05:42 IST