64 சிவவடிவங்கள்: 12-இடபாந்திக மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று இடபாந்திக மூர்த்தி.
இடபாந்திக மூர்த்தி – வடிவம்
64 சிவ வடிவங்களில் பனிரெண்டாவது மூர்த்தம் இடபாந்திக மூர்த்தி. இடபாந்திக மூர்த்தி என்பது, சிவபெருமான் காளையின் மீது சாய்ந்தபடி இடக்காலை ஊன்றி வலக்காலை ஒய்யாரமாகத் தாங்கியபடி நிற்கும் வடிவம்.
இடபாந்திக மூர்த்தி - தொன்மம்
சதுர்யுகங்கள் என்னும் நான்கு யுகங்கள் கிருதயுகம், துவாபரயுகம், திரேதாயுகம், கலியுகம் என்பன. சதுர்யுகம் மொத்தம் 43 லட்சத்து 21000 மனித வருடங்கள் கொண்டது. அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்ந்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது முடிந்தால் அது பிரம்மாவின் ஆயுட்காலம். பிரம்மாவின் ஒரு ஆயுட்காலம் விஷ்ணுவிற்கு ஒரு நாள். விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது பிரபஞ்சக் கணக்கு. உயிர்கள் அழியும் அந்த ஊழிக் காலத்தில் உமையம்மையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்ம தேவதை வேதனை கொண்டது. ஊழிக் காலத்தில் தானும் அழிய வேண்டி வருமே என்று மனம் வருந்தியது.
இடபமாக மாறி சிவபெருமானைச் சரணடைந்த தர்ம தேவதை, ”இறைவா, நான் என்றும் அழியாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டது.
அதனைக் கேட்ட சிவபெருமான், “தர்மத்தினை உலகிற்கு உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் மூன்று கால்களுடனும், துவாபரயுகத்தில் இரண்டு கால்களுடனும், கடைசியாகக் கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும் எப்பொழுதும் என்னைப் பிரியாமல் இருப்பாய்; எனது வாகனமாகும் பேற்றையும் நீ பெறுவாய்” என்று ஆசிர்வதித்தார்.
அவ்வாறே இடபமாகிய தர்ம தேவதையுடன் சிவபெருமான் காட்சி அளித்தார். அவ்வடிவமே இடபாந்திக மூர்த்தி.
வழிபாடு
கும்பகோணம் அருகே உள்ள திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயிலில் இடபாந்திக மூர்த்தி காட்சி தருகிறார். இடபாதிக மூர்த்திக்கு வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் குரு தோஷ நிவர்த்தியளிக்கும் எனவும், வில்வ நீர் அபிஷேகம் சிவனருளை அளிக்கும் எனவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:50:12 IST