under review

64 சிவவடிவங்கள்: 10-சந்திரசேகர மூர்த்தி

From Tamil Wiki
சந்திரசேகர மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சந்திரசேகர மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் பத்தாவது மூர்த்தம் சந்திரசேகர மூர்த்தி. சந்திரனைத் தன் தலையில் சூடியதால் இப்பெயர் பெற்றார். தலையில் பிறைச் சந்திரனைச் சூடி, பின்கைகளில் மானும், மழுவும் ஏந்தி, முன்கைகளில் அபய , வரத முத்திரைகளுடன் உமையம்மையுடன் காட்சி தருகிறார் சந்திரசேகர மூர்த்தி.

தொன்மம்

பிரம்மனின் மகன் தட்சன். தட்சனுக்கு 27 நட்சத்திரங்களே இருபத்தியேழு பெண்களாகப் பிறந்தன. அவர்கள் அனைவரையும் அவர் சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தார். சந்திரன் மணமாகிய சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி ஆகியோரிடம் மட்டும் மிகுந்தது. இதனால் மற்ற பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் முறையிட்டனர்.

தட்சனும் மருமகனை அழைத்துத் தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி புத்திமதிகள் கூறி அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பின்னும் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் பெண்கள் மறுபடியும் தங்கள் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பத்தைக் காண சகியாத தட்சன் ’நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய்’ என்று சந்திரனுக்குச் சாபம் கொடுத்தார்.

சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்தான். இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனைச் சந்தித்துத் தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகன் தட்சனும் மகன் தட்சன் வேலையில் தானும் தலையிடுவதில்லை என்ற உறுதிமொழியைக் கூறி, சிவபெருமானைச் சரணடையச் சொன்னார்.

அதன்படி சந்திரன் சிவபெருமானிடம் சரணடைய சிவனும் சந்திரனின் ஒரு கலையை எடுத்துத் தன் சடையில் தரித்துக் கொண்டார். பின், ‘இனி உன் ஒரு கலைக்கு என்றும் அழிவில்லை. ஆனாலும் தட்சனின் சாபத்தால் தினமொரு கலையாகக் குறைந்தும், என்னிடம் உள்ளதால் தினமொரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என ஆசி கூறினார். சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சிவபெருமான் சந்திரசேகரன் ஆனார்.

வழிபாடு

சந்திரசேகரரை திருவாரூரில், (புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ள ஆலயத்தில் வழிபடலாம். இங்குள்ள திருநாமம் கோணபிரான் மற்றும் அக்னிபுரீஸ்வரர். இறைவி: கருந்தாழ்குழலி.

இத்தலத்தில் உள்ள சந்திரசேகர மூர்த்தி, நல்லவனவற்றை மட்டுமே கொடுக்க கூடியவர் எனக் கருதப்படுகிறது. சந்திரனுக்குரிய திங்கள் மற்றும் முழுநிலவு நாட்களில் வெண்தாமரை அர்ச்சனையும் நெய்யன்ன நைவேத்தியமும் அறிவு வளர்ச்சியையும் நினைவாற்றலையும் அளிக்கும் என்றும், சந்தன அபிஷேகம் புகழைத் தரும் என்றும் நம்பப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:48:50 IST