under review

வீரபத்ர சாமி ஆட்டம்

From Tamil Wiki
Revision as of 05:34, 14 September 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Kurumbar.jpg

வீரபத்ர சாமி ஆட்டம் வீரபத்ரரின் உருவத்தைத் தலையில் சுமந்து ஆடும் ஆட்டம். வீரபத்ரரை குதிரையின் மேல் அமர்த்தியோ, சக்தியுடன் இருப்பது போலவோ ஐம்பொன் சிலை அமைத்து தலையில் தூக்கி ஆடுவர். இக்கலையை குறும்பர் இனத்தவர்கள் நிகழ்த்துகின்றனர். இக்கலை குறும்பர் பலகை ஆட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

பார்க்க: வீரபத்திரர்

நடைபெறும் முறை

ஒப்புக் கேட்டு உடைத்தல் நிகழ்ச்சி

குறும்பர்களின் கோவில்களான மாரியம்மா, அல்லியம்மா, சாக்கம்மா, ஓட்டாளம்மா, அங்காளம்மா கோவில்களில் வீரபத்ர சாமி ஆட்டம் நிகழ்கிறது. இக்கலை இரவு முழுவதும் நிகழ்த்தப்படும். ஆண்கள் மட்டுமே இதனை நிகழ்த்துகின்றனர். இதற்கென ஒப்பனை எதுவும் கிடையாது. இயல்பாக உடுத்தும் ஆடைகளை மட்டுமே அணிகின்றனர். காலில் சலங்கை கட்டியிருப்பர். தலையில் சும்மாடும் இருக்கும்.

இதில் முப்பது நபர் வரை கலந்து கொள்வர். வீரபத்ரரின் ஐம்பொன் சிலை நன்கு அலங்கரிக்கப்பட்டு பலகையை வெள்ளைத் துணியால் மூடியிருப்பர். சும்மாட்டின் மேல் சிலை இருக்கும். இசைக்கப்படும் இசைக்கருவிகள் தாளத்திற்கு ஏற்ப வட்டமாக நின்று ஆடுவர். ஆட்டக்காரர்களில் ஒருவர் மரகண்டம்[1] கட்டியிருப்பார். இவர்களுடன் கரகாட்டக்காரர்களும் சேர்ந்து ஆடுவர். ஆட்டத்தின் நடுவே ஒப்புக் கேட்டு உடைத்தல் நிகழ்ச்சி நடக்கும்[2]. இந்நிகழ்ச்சி தொடங்கும் முன் கன்னடத்தில் மந்திரம் ஒன்றை ஓதுவர்.

நிகழ்த்துபவர்கள்

இந்நிகழ்த்துக்கலையை கன்னடத்தில் இருந்து தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த குறும்பர் இனத்தவர் நிகழ்த்துகின்றனர்.

பார்க்க: குறும்பர்

இசைக்கருவிகள்

வீரபத்ர சாமி ஆட்டத்தில் பம்பை, மேளம், தோல், பறை போன்ற இசைக்கருவிகளை பின் பாட்டிற்காக பயன்படுத்துகின்றனர்.

நிகழ்த்தும் ஊர்கள்

வீரபத்ர சாமி ஆட்டம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவிரிப்பூம்பட்டினம், சுக்கராண்டவள்ளி, பெரியமுத்தூர், பஞ்சபள்ளி, காமனூர், கும்மனூர், கிருஷ்ணகிரி, கனகமுட்லு, செட்டி, மாரன்பட்டி ஆகிய ஊர்களில் நிகழ்த்தப்படுகிறது. பிற ஊர்களில் உள்ள பிற சாதியினரின் வேண்டுதலுக்கு ஏற்ப குறும்பர்கள் இக்கலையை நிகழ்த்துவதும் உண்டு. ஆனால் அதற்கு முன் தங்கள் குலதெய்வத்தை நிறுவி பூஜை செய்துவிட்டே நிகழ்ச்சியைத் தொடங்குவர்.

வேறு பெயர்கள்

இதனை குறும்பர் பலகை ஆட்டம் என்றும், வீரபத்ரசாமி பலகை ஆட்டம் என்றும் அழைக்கின்றனர்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள், நா. இராமசந்திரன் (ஆறு. இராமநாதனின் கள ஆய்வுத் தரவுகள்)

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. ஆண்குறி வடிவம், சில இடங்களில் பெண்குறி வடிவமும் இடம்பெறும்.
  2. ஆட்டக்காரரின் சம்மதத்துடன் அவர் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி.


✅Finalised Page