under review

நாலடியார்

From Tamil Wiki
Revision as of 08:13, 26 August 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நாலடியார் நயவுரை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். இது சமண முனிவர்களால் பாடப்பட்டது. நானூறு வெண்பாக்களைக் கொண்டது. நான்கடி கொண்ட வெண்பாக்களால் ஆனதால் நாலடி எனக் கூறப்படுகிறது. நூலின் சிறப்புக் கருதி 'ஆர்’ விகுதி சேர்த்து 'நாலடியார்’ என அழைக்கப்பட்டது.

இயல் பகுப்பு

நாலடியார் கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூறு வெண்பாக்களைக் கொண்டுள்ளது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளாய் நாலடியார் பகுக்கப்பட்டுள்ளது. பதினொன்று இயல்களும், நாற்பது அதிகாரங்களும் கொண்டது. அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் நானூறு பாக்களைக் கொண்டுள்ளது. நாலடியாரைப் பால், இயல், அதிகாரமாக வகுத்தவர் பதுமனார்.

அறத்துப் பால்

இயல் - 2 : இல்லறவியல், துறவறவியல்; அதிகாரங்கள் - 13

இல்லறவியல்
  1. பொறையுடைமை
  2. பிறர்மனை நயவாமை
  3. ஈகை
  4. பழவினை
  5. மெய்ம்மை
  6. தீவினை அச்சம்
துறவறவியல்
  1. செல்வம் நிலையாமை
  2. இளமை நிலையாமை
  3. யாக்கை நிலையாமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. தூய தன்மை
  6. துறவு
  7. சினம் இன்மை

பொருட்பால்

இயல்கள் - 7 : அரசியல், நட்பியல், இன்பவியல், துன்பவியல், பொதுவியல், பகை இயல், பன்னெறியியல்; அதிகாரங்கள் - 24

அரசியல்
  1. கல்வி
  2. குடிப்பிறப்பு
  3. மேன் மக்கள்
  4. பெரியாரைப் பிழையாமை
  5. நல்லினம் சேர்தல்
  6. பெருமை
  7. தாளாண்மை
நட்பியல்
  1. சுற்றம் தழால்
  2. நட்பாராய்தல்
  3. நட்பிற் பிழை பொறுத்தல்
  4. கூடா நட்பு
இன்பவியல்
  1. அறிவுடைமை
  2. அறிவின்மை
  3. நன்றியில் செல்வம்
துன்பவியல்
  1. ஈயாமை
  2. இன்மை
  3. மானம்
  4. இரவச்சம்
பொதுவியல்
  1. அவையறிதல்
பகை இயல்
  1. புல்லறிவாண்மை
  2. பேதைமை
  3. கீழ்மை
  4. கயமை
பன்னெறியியல்
  1. பன்னெறி

காமத்துப்பால்

இயல்கள் - 2 : இன்ப, துன்பவியல், இன்பவியல்; அதிகாரங்கள் - 3

இன்ப, துன்பவியல்
  1. பொது மகளிர்
இன்பவியல்
  1. கற்புடை மகளிர்
  2. காம நுதலியல்

நாலடியாரின் பெருமை

மானுட வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கு எளிமையான விளக்கங்களைக் கூறி நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்ற நூல். திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பு இதற்கு உண்டு. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்பது இதன் பெருமைக்குச் சான்று. 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது’ என்ற வரிகளாலும், 'பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்ற பாடலினாலும் நாலடியாரின் பெருமையை அறியலாம்.

நாலடியாரின் சிறப்புகள்

அறத்துப்பாலில் இல்லற நெறி அறங்களும், துறவு நெறி அறங்களும் கூறப்பட்டுள்ளன. சமண முனிவர்கள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலையாமை பற்றிய கருத்துகளும் அதிகம் இடம் பெற்றுள்ளன. அதே சமயம் இல்லறத்தின் சிறப்பு, பெருமை, கல்வியின் சிறப்பு, இன்றியமையாமை, சான்றோர்களின் சிறப்பு, பண்பற்றவர்களின் நடத்தை எனப் பல விஷயங்களை எளிமையான உவமைகள், பழமொழிகள் மூலம் நாலடியார் கூறுகிறது. "அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட" என்ற பாடல், உணவின் சுவையையும், அதனை இல்லாள் அமர்ந்து ஊட்டுவதால் அது மேலும் சிறக்கும் என்பதையும் சொல்கிறது.

'விலங்கிற்கும் விள்ளல் அரிது' (பாடல்-6)'செத்தாரைச் சாவார் சுமந்து’ (பாடல்-24); 'கல்லாத பேர்களிலும் கல்லே மிக நல்லது’ (பாடல்-334); போன்ற சிந்திக்கத் தூண்டும் பல வரிகள் பல நாலடியாரில் இடம் பெற்றுள்ளன. நாலடியாரில் இடம் பெற்றிருக்கும் பழமொழிகளும் குறிப்பிடத்தகுந்தவையாக உள்ளன. 'கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு’ (பாடல்-112) 'ஒருவர் பொறை இருவர் நட்பு’ (பாடல்-223), 'கற்கிள்ளிக் கையிழந்தற்று’ (பாடல்-336), 'மகனறிவு தந்தையறிவு’ (பாடல்-367) போன்ற பல பாடல் வரிகளை உதாரணமாகச் சொல்லலாம்.

நாலடியார் மூலம் அறிய வரும் செய்திகள்

தன்னைச் சார்ந்த சுற்றத்தாரையெல்லாம் காப்பதற்கு உழைத்தலே ஆண்மகனின் கடமையென்ற கருத்து அக்காலத்தில் இருந்ததை,

"பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன்" (பாடல்-202) - என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. "ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ

நாணுடையாள் பெற்ற நலம்" (பாடல்-386) - எனும் பாடல் வரிகள், நாணம் மிகுந்த குலமகளின் அழகு, அறிவிற் சிறந்த வீரனின் கையில் உள்ள கூரிய வாள் போல் யாராலும் நெருங்குதற்கு அரியது என்பதைக் கூறுகிறது. அதே சமயம் 'நாணமில்லா பெண்ணின் அழகு பயனற்றது’ என்ற கருத்தும் இதில் மறைமுகமாக வெளிப்படுகிறது. பறை என்ற இசைக்கருவி பற்றி,

".... மன்றம் கறங்க மணப்பறை ஆயின

அன்றவர்க்கு ஆங்கே பிணப்பறையாய்ப் பின்றை

ஒலித்தலும் உண்டாம்....." (பாடல்-23) - என்ற பாடலின் மூலம், மணம் செய்யும் போது அடிக்கும் பறை 'மணப்பறை’ என்றும், இறந்தவர்களுக்காக அடிக்கப்படும் பறை 'பிணப்பறை’ என்றும், இது அக்காலத்தில் வழக்கில் இருந்த ஒன்று என்றும் அறிய முடிகிறது. நாலடியார் பாடல்களின் மூலம் அக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அவர்களது தொழில், உணவு முறை, பயன்படுத்திய நாழி, தூணி, பதக்கு முதலிய அளவீட்டுக் கருவிகள், காணி, முந்திரி முதலிய நில அளவைகள், காதம், யோசனை முதலிய தூர அளவைகள், பிறன் மனையை நாடுவோருக்கு வழங்கப்பட்ட கொலைத் தண்டனை, முற்பிறவி, மறுபிறவி நம்பிக்கைகள், வினைப்பயன்கள் மீதான நம்பிக்கைகள், எமன் பாசக்கயிற்றால் உயிர்களைப் பிணித்துக் கொண்டு செல்வான் என்ற நம்பிக்கை என பலதரப்பட்ட செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.

நாலடியார் : சில பாடல்கள்

நாலடியாரில் சிந்திக்கத்தூண்டும் பாடல்கள் பல உள்ளன. அவற்றிலிருந்து சில...

தவத்தின் பெருமை கூறும் பாடல்

அகத்து ஆரே வாழ்வார்? என்று அண்ணாந்து நோக்கி

புகத் தாம் பெறாஅர் புறங்கடை பற்றி

மிகத் தாம் வருந்தியிருப்பரே - மேலைத்

தவத்தால் தவம் செய்யாதார் (அறத்துப்பால், அறன் வலியுறுத்தல்: பாடல் -31,)

இளமை நிலையாமை பற்றிய பாடல்

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்

முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு. (அறத்துப்பால், இளமை நிலையாமை : பாடல் -19)

அறிவுச் செயல்பாடு

பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்

தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்

இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேரா

தணங்கருந் துப்பின் அரா (பொருட்பால், அறிவுடைமை, பாடல் : 241)

அறிவின்மைச் செயல்பாடு

அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா

ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை

மூழை சுவையுணரா தாங்கு (பொருட்பால், புல்லறிவாண்மை, பாடல் -321)

காமம்

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்

மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்

நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்

தோள்வைத் தணைமேற் கிடந்து (காமத்துப் பால், காமநுதலியல், பாடல் - 394)

உசாத்துணை


✅Finalised Page