under review

தாண்டவராய முதலியார்

From Tamil Wiki
Revision as of 09:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தாண்டவராய முதலியார் (வித்வான் தாண்டவராய முதலியார்) (மறைவு - 1850) வில்லிவாக்கம் தாண்டவராய முதலியார். தமிழ் இலக்கண நூல்களை பதிப்பித்தவர்களில் முன்னோடி, மற்றும் பொது வாசகர்களுக்கான உரைநடை நூல்களை எழுதி வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

தாண்டவராய முதலியார் செங்கல்பட்டு அருகே உள்ள வில்லியம்பாக்கம் என்ற வில்லிவாக்கத்தில் கந்தசாமி முதலியாருக்கு பிறந்தார். (இவரது பிறப்பு தேதி விவரங்கள் அறியப்படவில்லை). இவரின் தந்தை மரணமடைந்த பிறகு செங்கல்பட்டுக்கு அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் இவரின் அம்மாவின் உடன் பிறந்தவரான குமாரசாமி உபாத்தியாயரின் பாதுகாப்பில் வளர்ந்தார். அவரிடம் நெடுங்கணக்கு(அரிச்சுவடி), எண்சுவடி போன்றவைகளைக் கற்றார். பின்னர் வீரராகவ முதலியார் வழிவந்த உழலூர் வேலப்ப தேசிகரிடம் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.சென்னைக்கு சென்று புதுவை விஸ்வநாதப் பிள்ளை, கூனிமேடு இராமானுஜ முதலியார் ஆகியவர்களிடம் தமிழ் இலக்கியங்களைப் பயின்றார். மேலும் தொல்காப்பிய இலக்கணத்தை வரதப்ப முதலியார், சீர்காழி அருணாச்சலக் கவிராயர் வழிவந்த சீர்காழி வடுகநாத தம்பிரான் என்பவரிடம் கற்றார்.மேலும் வடமொழி, தெலுங்கு, கன்னடம், உருது, மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

தனிவாழ்க்கை

ஆங்கிலேய அரசு இவரை சென்னைக் கல்விச் சங்கத்தின் (The College of Fort St. George 1812-1854) தலைமைத் தமிழ்ப் புலவராக நியமித்தது. பின்னர் 1843-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியில் அமர்த்தப்பட்டார்.

பங்களிப்பு

நன்றி-archieve.org

சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்த ரிச்சர்ட் கிளார்க் (கிளார்க் ஐயர்) அவர்களின் விருப்பப்படி இலக்கண வழிகாட்டி என்ற நூலை உரைநடையில் எழுதி இச்சங்கத்தின் சார்பில் 1820-ம் ஆண்டு வெளியிட்டார்.

தமிழகத்தில் வழங்கிவந்த வாய்மொழி கதைகளைத்தொகுத்து கதாமஞ்சரி என்ற உரைநடை நூலை 1826-ம் ஆண்டு வெளியிட்டார். மன்மத விலாசம் போன்ற சில நூல்களும் தாண்டவராய முதலியாரால் எழுதப்பட்டன என தெரிகிறது

மதகண்டனம்

தாண்டவராய முதலியார் கிறிஸ்துவப் பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க பைபிள் (விவிலியம்) நூலை விமர்சித்து எழுதிய புரசைப் பொன்னம்பல அடிகளாரின் நூலான வேதவிகற்பம் என்னும் நூலை எதிர்த்து வேதவிகற்ப்பதிக்காரம் என்னும் கண்டன நூலை எழுதி கொடுத்தார். இது வேறு ஒருவருடைய பெயரில் வெளிவந்தது.

பஞ்சதந்திரம்

தாண்டவராய முதலியாரின் முதன்மையான பங்களிப்பாகக் கருதப்படுவது பஞ்சதந்திரம் நூல் மொழியாக்கம். அன்று வெவ்வேறு ஆசிரியர்களால் உதிரியாக பஞ்சதந்திரம் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. அவை பிழை மலிந்திருந்தமையால் மராட்டிய மொழியிலிருந்து அந்நூலை மொழியாக்கம் செய்தார். பொது வாசகர்களுக்கான உரை நடை நூலாக பஞ்ச தந்திர வசனம் என்ற நூல் அமைந்தது. 1824-ம் ஆண்டு இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. இதன் ஐந்தாவது தொகுதியை சற்று கடுமையான மொழி நடையில் மாற்றி எழுதினார் என்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.

“தமிழ் கற்கப் புக்கோர் தமிழில் எழுதி வழங்குகின்ற பஞ்சதந்திரக் கதையைக் கற்கப் புகுந்தால், குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்டாற்போல வழுக்களையே கற்றுத் தடுமாற்றமுறுதலால், சென்னைச் சங்கத்துத் தலைவராகிய மகாராஜஸ்ரீ ரிச்சட்டுக் கிளார்க்குத் துரையவர்கள் உத்தரவினால், மகாராஷ்டிரத்தில் அச்சுப் பதித்திருக்கின்ற பஞ்சதந்திரக் கதையைத் தமிழில்மொழிபெயர்த்துச் சொற்பொருளழகுறப் பலவிடத்துச் சில கூட்டியும், கற்போர் உலக நடையும் சில செய்யுள் நடையுமான தமிழ் நன்குணரவும், சுவையுற இம்மொழிபெயர்ப்புப் பஞ்சதந்திரக் கதை சாலீவாஹன சக வருடம், 1746 மேல் செல்லாநின்ற பார்த்திவ வருடத்துக்குச் சரியான கிரித்து 1825-ம் வருடம் செய்து முற்றுப்பெற்றது.”என்று தம் நூலுக்கு எழுதிய முன்னுரையில் தாண்டவராய முதலியார் குறிப்பிடுகிறார்.

பதிப்புப்பணி

இலக்கண நூல்களான இலக்கணப் பஞ்சகம் (நன்னூல் மூலம், அகப்பொருள் மூலம், புறப்பொருள் வெண்பா மாலை) என்ற நூலை 1835 -ம் ஆண்டும், சூடாமணி நிகண்டு (முதல் பத்துப்பகுதி), சேந்தன் திவாகரம் (முதல் எட்டுப் பகுதி) போன்ற நூல்களைப் பிழை திருத்தி முதன் முதலில் பதிப்பித்தார்.

வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் மூன்று பகுதிகளை 1824-ல் அச்சிட்டு வெளியிட்டார்.திருமயிலை யமக அந்தாதி போன்ற சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தார்.

இலக்கிய நட்பு

தாண்டவராய முதலியார் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த இராமானுஜக் கவிராயருடனும் அவருடைய மாணவராகிய சரவணப் பெருமாளையருடனும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி வாதம் செய்தார்.

விவாதங்கள்

பஞ்சதந்திரம்

தாண்டவராய முதலியாரின் பஞ்சதந்திர மொழியாக்கம் சரியானது அல்ல என்று சி. சுப்ரமணிய பாரதி கருதினார். சுதேசமித்திரன் ஜனவரி 21, 1920 இதழில் இவ்வாறு எழுதினார். ”பஞ்ச தந்திரம், வடமொழியிலுள்ள மூல நூலுக்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு இதுவரை யாவராலும் செய்யப்படவில்லையென்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தாண்டவராய முதலியார் எழுதியிருக்கும் தமிழ்ப் பஞ்ச தந்த்ரம் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து நேராக மொழி பெயர்க்கப்பட்டதன்று. மஹாராஷ்ட்ர பாஷையில் பஞ்ச தந்திரக் கதைகளை மட்டும் ஒருவாறு தொகுத்திருந்ததொரு நூலினின்றும் கதைகளைத் திரட்டித் தமிழில் அந்த முதலியார் வெளிப்படுத்திவிட்டாரென்று தெரிய வருகிறது.

எனவே பூமண்டல முழுமையிலும் தனக்கொரு நிகரில்லாத ராஜ்யநீதி சாஸ்த்ரமும், ஹிந்துக்களின் அறிவு நுட்பத்துக்குப் பெரும் புகழுமாகி விளங்கும் ஸம்ஸ்க்ருத பஞ்சதந்திரமும், தமிழில் இயற்கையாக மொழி பெயர்க்கப்படவில்லை. அதன் அழகான நீதி வசனங்களில் பெரும்பான்மை தமிழ் மொழி பெயர்ப்பிலேயில்லை. மேலும் தமிழ்ப் பஞ்ச தந்திரத்தைப் படித்தால், இஃதொரு ஸாமான்யமான கதைப் புஸ்தகமொன்று தோன்றுகிறதேயன்றி, உலகத்து ராஜ்ய தந்த்ர சாஸ்த்ரங்களுள்ளே இது சிரோமணியென்பது துலங்கவில்லை”.

சேந்தன் திவாகரம்

தாண்டவராய முதலியார் 1835-ல் சேந்தன் திவாகரத்தின் சுவடிகளை ஒப்பிட்டுப் பார்த்துப் பிழை நீக்கி பதிப்பித்தார். முதல் எட்டு தொகுதிகள் மட்டுமே வெளிவந்தன. அவற்றில் சில பகுதிகளில் சில சூத்திரங்களைத் தாமே இயற்றிச் சேர்த்தார். செயற்கை வடிவப் பெயர்த் தொகுதியில் அவர் சேர்த்த சூத்திரங்களின் எண்ணிக்கை பிற தொகுதிகளைக் காட்டிலும் சற்று மிகுதி. எனினும், தாம் எழுதிச் சேர்த்த நூற்பாக்களை உடுக்குறியிட்டுக் காட்டினார். பின்னர் வந்த திவாகர நிகண்டின் பதிப்புகள் பலவும் தாண்டவராய முதலியாரின் பதிப்பையட்டியே பெரும்பாலும் அமைந்தன. எனினும் அவற்றுள் அவர் இயற்றிச் சேர்த்த சூத்திரங்கள் உடுக்குறியிட்டு வேறுபடுத்திக் காட்டப் பெறவில்லை. எனவே திவாகரர் செய்த நூற்பாக்களும், பதிப்பாசிரியர் செய்த நூற்பாக்களும் பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டது. (மா.சற்குணம்)

மறைவு

தாண்டவராய முதலியார் 1850-ம் ஆண்டு மறைந்தார்.

இலக்கிய இடம்

தாண்டவராய முதலியார் தமிழிலக்கிய இலக்கணங்கள் அச்சில் ஏற்றப்பட்டு பொதுவாசிப்புக்கு வந்த தொடக்க காலத்தில் அவற்றை புரிந்துகொள்வதற்கான முன்னோடி முயற்சிகளைச் செய்த தமிழறிஞர்களுள் ஒருவர். இலக்கண விளக்கத்தில் தனிப்பங்களிப்பாற்றியவர். பஞ்சதந்திரம் நூல் வழியாக இன்று அறியப்படுகிறார்

படைப்புகள்

இயற்றிய நூல்கள்
  • பஞ்ச தந்திர வசனம் இணையநூலகம்
  • கதாமஞ்சரி
  • திருத்தணிகை மாலை
  • திருப்போரூர்ப் பதிகம்
  • இலக்கண வினாவிடை
  • வேதவிகற்பதிக்காரம்
  • மன்மதவிலாசம்
பதிப்பித்த நூல்கள்
  • இலக்கணப் பஞ்சகம் (நன்னூல் மூலம், அகப்பொருள் மூலம், புறப்பொருள் வெண்பா மாலை)
  • சேந்தன் திவாகரம் (முதல் எட்டுப் பகுதிகள்) இணையநூலகம்
  • சூடாமணி நிகண்டு (முதல் பத்துப் பகுதிகள்)
  • வீரமா முனிவரின் சதுரகராதி (முதல் மூன்று பகுதிகள்)
  • திருமயிலை யகம அந்தாதி

உசாத்துணை


✅Finalised Page