under review

செலாஞ்சார் அம்பாட் நிகழ்வு

From Tamil Wiki
Revision as of 09:11, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு செலாஞ்சார் அம்பாட் எனும் தோட்டத்தில் வேலை செய்த இந்தியத் தொழிலாளிகள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்த நிகழ்வு மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் கொடும் நிகழ்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செலாஞ்சார் அம்பாட் தோட்டத்தின் அமைப்பு

செலஞ்சார் அம்பாட் 1.jpg

மலேசியாவில் உள்ள பகாங் மாநிலத்தில் செலாஞ்சார் அம்பாட் தோட்டம் அமைந்துள்ளது. பகாங்கின் மையப் பகுதியினூடாகச் செல்லும் நெடுஞ்சாலையில் வெறுமையான சில நிலப்பரப்புகள் உள்ளன. 135 கி.மீ நீளம் கொண்ட இச்சாலை சிகாமட்டை குவாந்தானுடன் இணைக்கக்கூடியது. இச்சாலையுடனே செல்லும் பகுதியில் புதிய நில வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அத்திட்டங்களில் உருவான திட்டம்தான் செலாஞ்சார் திட்டம்.

பின்னணி

செலாஞ்சார் அம்பாட்டிலுள்ள 40 பேர் வசிக்கும் இடிந்து விழும் நிலையிலுள்ள கொங்சி எனப்படும் குடிசை வீடுகள்.

1957-ம் ஆண்டு பிரிட்டிசாரிடமிருந்து மலாயா விடுதலை பெற்ற பிறகு, நாட்டு மேம்பாட்டுக்காகப் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வந்தன. நாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படாமலிருந்த நிலப்பரப்புகள் அரசாங்கத்தால் தூய்மைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. அப்பணிக்காக நில மேம்பாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒப்பந்தங்களை அளித்தது. அந்த மேம்பாட்டு நிறுவனங்கள், நிலத்தைத் தூய்மைப்படுத்தத் தேவைப்படும் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்திக்கொள்ள துணை ஒப்பந்ததாரர்களை அமர்த்திக்கொண்டன. வளர்ச்சிப் பணிக்காக ஒப்பந்தத் தொழிலாளர்களைத் துணை ஒப்பந்ததாரர்கள் ஏற்பாடு செய்து தோட்டங்களுக்கு அனுப்பினர். இதன் அடிப்படையில், 1983-ம் ஆண்டு செலாஞ்சார் அம்பாட் பகுதியைத் தூய்மைப்படுத்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் துணை ஒப்பந்தத்தாரர்களால் செலாஞ்சார் அம்பாட் தோட்டத்திற்கு அனுப்பப்பட்டனர்.

எதிர்நோக்கிய சிக்கல்

செலாஞ்சார் அம்பாட் பகுதிக்கு அனுப்பப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் துணை ஒப்பந்தக்காரர்களால் அடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் மறுக்கப்பட்டது. முகாம்களை விட்டு வெளியில் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கீழ்ப்படியாமைக்கு தண்டனை வழங்கப்பட்டது. போதுமான அளவில் உணவு தரப்படாததால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊட்டச்சத்துக் குறைவிற்கு ஆளானார்கள்.

தொழிலாளர்களின் தலைமுடியை வெட்டிய காட்சி

செலாஞ்சார் அம்பாட் தோட்டத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் எதிர்காலத்தை இழந்தனர். ஒப்பந்தக்காரர்களும் அவர்களது அடியாட்களும் அவர்களை இழிவாக நடத்தினர். அங்கிருந்த பெண்கள் மிரட்டப்பட்டதோடு சிலர் பாலியல் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டனர். உத்தரவை மீறும் தொழிலாளர்கள் அடிக்கப்பட்டனர். கோழிக்கூண்டுகளில் பல நாட்களுக்கு உணவின்றி அடைத்து வைக்கப்பட்டனர். தோட்டத்தை விட்டு வெளியே செல்லவும் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவில்லை. நாள் முழுவதும் இவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இத்தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதி இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டில் ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொல்வதற்காக நாஜிகள் ஏற்படுத்தியிருந்த சித்திரவதை முகாம்களை நினைவுபடுத்துவது போல் அமைந்திருந்தது. இதனால் செலாஞ்சார் அம்பாட் தோட்டம் ‘நரக எஸ்டேட் (Hell Estate)’ என்றும் அழைக்கப்பட்டது.

சர்ச்சைகள் / எடுக்கப்பட்ட நடவடிக்கை

செலாஞ்சர் அம்பாட் தோட்டத்தில் இருந்த கெடுபிடிகள் அனைத்தையும் மீறி அங்கிருந்து தப்பிச் சென்ற பெண்ணொருவரால்தான் இந்தக் கொடுமைகள் வெளிஉலகத்துக்குத் தெரிய வந்தது. இதன்பிறகே அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது.

அன்றையப் பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ். சாமிவேலு தலைமையில் விசாரணைக் குழுவொன்று அத்தோட்டத்திற்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நிகழ்வுகள் எதிர்மறையான விளம்பரத்தை உருவாக்குவதாக அரசு உணர்ந்தது. இதனை மூடிமறைக்கும் விதமாக இத்தொழிலாளர்களின் வாழ்விடங்களாக இருந்த அக்குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதன் மூலம் தொழிலாளர்கள் அடைந்த இழிவுகளுக்கு ஆதாரமாக எஞ்சியிருந்த சான்றுகளும் அழிக்கப்பட்டன.

செலஞ்சார் அம்பாட் சம்பவம் தொடர்பான தொடக்க பத்திரிகை செய்திகளைப் பார்த்து எதிர்வினையாற்றும் தொழிலாளர்கள்.

தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைத் துணை ஒப்பந்ததாரர்கள் மீறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செலஞ்சார் அம்பாட் தோட்டத்தில் கொத்தடிமைத்தனம் இருந்தது குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை. அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன.

இலக்கியப் பதிவுகள்

உசாத்துணை


✅Finalised Page