under review

செராஸ் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 08:24, 4 December 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இணைக்கட்டடம்

செராஸ் தமிழ்ப்பள்ளி மலேசியா, கோலாலம்பூரின் இரண்டரை மைல் செராஸ் சாலையில் அமைந்துள்ளது. இப்பள்ளி 1947-ல் தொடங்கியது. செராஸ் தமிழ்ப்பள்ளி முழு அரசாங்க உதவிபெறும் பள்ளி.

வரலாறு

தொடக்கத்தில் செராஸ் தமிழ்ப்பள்ளி அரை ஏக்கர் நிலத்தில் அத்தாப்பு(ஒருவகை பனையின் ஓலை) கூரையுடன் கட்டப்பட்டது. அறுபத்து மூன்று மாணவர்களுடன் தொடங்கிய பள்ளியின் முதல் தலைமையாசிரியராக சிதம்பரம்பிள்ளை பொறுப்பேற்றார். பெரும்பாலான மாணவர்கள் நகராண்மைக்கழகத் தொழிலாளர்களின் பிள்ளைகள். இப்பள்ளிக்கு ஆரம்பத்தில் நகராண்மைக்கழக அதிகாரிகளும் உதவினர்.

பள்ளி மேம்பாடுகள்

ஏப்ரல் 1, 1950 -ல் இப்பள்ளி நகராண்மைக்கழகப் பள்ளியென்றே செயல்படத்தொடங்கியது. நூறு மாணவர்கள் கல்வி பயின்றநிலையில், பள்ளியில் ஏதும் அடிப்படை வசதிகளில்லை. 1956 -ல் தங்கவேலு தலைமைப் பொறுப்பேற்றபோது, இருநூற்று எழுபது மாணவர்களாக எண்ணிக்கை அதிகரித்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூடியது. செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய கட்டடம் பெறுவதற்கான முயற்சியில் நகராண்மைக்கழக அதிகாரிகளான தர்மலிங்கம், திருமதி டி.ஆர்.மார்க்ஸ், கே.பி.வி.மேனன், தொழிற்சங்கவாதி வி. டேவிட் ஆகியோர் பங்காற்றினர்.

பள்ளி திறப்பு

1961-ல் 60000 ரிங்கிட் செலவில் ஏழு வகுப்பறைகள், நூலகம், ஆசிரியர் அறை ஆகிய வசதிகளுடன் கூட்டரசு வளாக கமிஷனர் ஏ.டி. யோர்க், J.M.N, P.J.K, OBE, MCS செராஸ் தமிழ்ப்பள்ளியைத் திறந்துவைத்தார். இக்காலக்கட்டத்தில் மாணவர் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்தது. பள்ளியின் திடலும் சீரமைக்கப்பட்டது. 1967 -ல் செராஸ் தமிழ்ப்பள்ளியில், பள்ளி மேலாளர் வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியம் பள்ளி மேம்பாட்டிற்கான உதவிகளை வழங்கியது. செராஸ் தமிழ்ப்பள்ளி காலை, மாலையென இருபிரிவாக இயங்கியது. பள்ளிக்கு இரு அலுவலகப் பணியாளர்களும் அமர்த்தப்பட்டனர்.

புதிய கட்டடம்

செராஸ் தமிழ்ப்பள்ளி

1975 -ல் கன்னியப்பன் தலைமையாசிரியராகப் பொறுப்பு வகித்தபோது 420 மாணவர்களும் பன்னிரண்டு ஆசிரியர்களும் இருந்தனர். 1994 -ல் நாகப்பன் தலைமைப் பொறுப்பேற்றபோது, பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இந்திய வணிகர் சங்கமும் இணைந்து பள்ளிக்கு மூன்று வகுப்பறைகளுடன் மேலுமொரு கட்டடத்தை அமைத்தனர். கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் துணையுடன் பள்ளியின் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. சண்முக தவமணியின் தலைமைத்துவத்தில் செராஸ் தமிழ்ப்பள்ளிக் கட்டடம் மேலும் சீரமைக்கப்பட்டது.

கணினி வகுப்பு

1999 -ல் பெரியசாமி என்னும் சாந்தழகன் செராஸ் தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்பை அறிமுகம் செய்தார். இதற்கான நிதி ஒரு விருந்துணவு நிகழ்ச்சியின்வழி திரட்டப்பட்டது. 2007-ல் செராஸ் தமிழ்ப்பள்ளிக்குக் கல்வியமைச்சு கணினி மையம் கட்டித்தந்தது.

மூன்று மாடிக்கட்டடம்

2015 -ல் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற தேவி பள்ளிக்கான இணைக்கட்டடம் கட்டும் முயற்சியை மேற்கொண்டார். 2021-ல் மூன்று மாடிகளுடன் புதிய இணைக்கட்டடம் அதிகாரப்பூர்வமாகத் திறப்புவிழா கண்டது.


✅Finalised Page