under review

சரவணன்பேடு பார்சுவநாதர் கோயில்

From Tamil Wiki
Revision as of 08:15, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Saravananpedu Parshvanatha Temple. ‎


சரவணன்பேடு பார்சுவநாதர் கோயில் (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) செங்கல்பட்டு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

செங்கல்பட்டு மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தாலுகாவைச் சேர்ந்த சரவணன்பேடு என்னும் ஊர் பொன்னேரியிலிருந்து ஏறத் தாழ ஒன்பது கிலோமீட்டர் மேற்கில் உள்ளது. சிவரம்பேடுஎன்னும் பண்டைய பெயரினைக் கொண்ட இத்தலத்திற்கு பொ.யு. 6-ம் நூற்றாண்டில் சிறுவை, சிறுவாபுரி எனவும் பெயர்கள் இருந்ததாக அருணகிரி நாதரது திருப்புகழ் கூறுகிறது. தற்காலத்தில் சின்னம்பேடு என்றும், கணன்பேடு என்றும் அழைக்கப்படுகிறது.

அமைப்பு

சிறிய அளவில் கட்டப்பட்ட பார்சுவநாதர் கோயில் ஒன்று உள்ளது. கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. தற்போது மிகவும் சிதைந்த நிலையிலுள்ளது. பொ.யு. 12 அல்லது 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றுமதில் முற்றிலும் அழிந்துவிட்டது. அதுவும் அழிவுற்றதால் பிற்காலத்தில் செங்கல்களைப் பயன்படுத்தி கோயில் தோற்றுவிக்கப்பட்டது. முன்பிருந்த கோயிலின் அடிப்பகுதியில் பயன்படுத்திய நீண்ட கருங்கற்களை கருவறை, மண்டபம் ஆகிய வற்றின் கூரைக்குப் பயன்படுத்தினர் என்பதை பொ.யு. 12-13-ம் நூற்றாண்டு வரிவடிவத்தைக் கொண்ட சாசனம் கூறுகிறது. இக்கோயிலின் மண்டபத்திற்கு எதிராக பலிபீடம் உள்ளது. இதன் மேற்பகுதியிலுன்ள வட்டவடிவ கல்லில் சமணச்சின்னமாகிய சுவஸ்திகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரின் தாயார் அம்மாள் கோயில் சன்னதியின் மண்டபத்தின் இரு தூண்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன.

பார்சுவநாதர் சிற்பம்

கருவறையில் இரண்டரை அடி உயரமுள்ள பார்சுவநாதர் சிற்பம் உள்ளது. இவரது இருமருங்குகளிலும் சாமரம் வீசுவோர் சிறிய அளவிலும் இவர்களது தலைக்கு மேலாக தாமரை, சங்கு ஆகிய வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சாமரம் வீசுவோர் சங்க நிதி, பத்ம நிதி ஆகிய பெரு நிதிகளின் மானிட வடிவங்கள் என்பதனை விளக்கும் வகையில் இவ்வாறு காட்டப்பட்டுள்ளது. இந்த சிற்பம் பொ.யு. 12 அல்லது 13-ம் நூற்றாண்டு கலைப்பாணியினைக் கொண்டது.

கல்வெட்டுக்கள்

ஆரம்ப காலத்தில் கோயிலின் அடிப்பகுதியிலிருந்த பார்சுவநாதர் கோயிலின் கூரையில் வேயப்பட்டுள்ள வரிக்கற்களில் கல்வெட்டுக்கள் இருந்தன. கோயில் புதுப்பிக்கப்பட்டபோது இவற்றில் பொறிக்கப்பட்டிருந்த சாசனங்களும் சிதைக்கப்பட்டன. இவற்றில் 'சபை யோம்... 'விரிச்சிக' என்பன போன்றசில சொற்களே தற்போது எஞ்சியுள்ளன. இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றியோ அல்லது அவை தொடர்பான வேறு செய்திகளையோ அறிய முடியவில்லை. இந்த சாசன எழுத்துக்களின் வரிவடிவம் பொ.யு. 12-13-ம் நூற்றாண்டினைச் சார்ந்தது.

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991


✅Finalised Page