under review

க்ஷத்ரியன் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 22:42, 28 January 2024 by Jeyamohan (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
க்ஷத்ரியன் இதழ் (நன்றி: க்ஷத்ரியன் இதழ்த் தொகுப்பு)

க்ஷத்ரியன் இதழ், வன்னியர் குலத்தின் முன்னேற்றத்திற்காக, 1923-ல், தொடங்கப்பட்டது. சேலம் சு. அர்த்தநாரீச வர்மா இதன் ஆசிரியராக இருந்தார். இதன் இதழ்கள் தொகுக்கப்பட்டு, 2010-ம் ஆண்டில், 17 தொகுதிகளாக வெளிவந்தன. இதனைத் தொகுத்தவர் ஆய்வாளர் ஆறு. அண்ணல்.

பதிப்பு வெளியீடு

வன்னிய குல மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக நன்மைக்காவும் தொடங்கப்பட்ட இதழ் க்ஷத்ரியன். இதன் மாதிரிப் பிரதி, 1922, ஐப்பசி மாத விஜயதசமி தினத்தன்று வெளியானது. கோயமுத்தூர் பூபதி பழனியப்ப நாயகர் இதன் வெளியீட்டாளராக இருந்தார். அவரது திடீர் மறைவை அடுத்து சேலம் சு. அர்த்தநாரீச வர்மா, க்ஷத்ரியன் இதழின் ஆசிரியப் பொறுப்பேற்றார். அவரது ஆசிரியத்துவத்தில், முதல் இதழ், ஏப்ரல் 13, 1923 அன்று வெளியானது. முதலில் மாதமிருமுறை இதழாக வெளிவந்த க்ஷத்ரியன், பின்னர் வார இதழ் ஆனது. இருபதாண்டுகள் வரை வெளிவந்த இவ்விதழ், பொருளாதரப் பிரச்சனைகளால் நின்று போனது.

பொன்.இராமச்சந்திரனின் சேகரிப்பில் இருந்த இவ்விதழ்களை, ஆறு. அண்ணல் தொகுத்து, 17 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். கவிஞர், ஆய்வாளர் காவிரிநாடனின் ஆய்வு மற்றும் மேற்பார்வையில் இத்தொகுதிகள் வெளிவந்தன.

சேலம் சு. அர்த்தநாரீச வர்மா

ஆசிரியர்

சு. அர்த்தநாரீச வர்மா க்ஷத்ரியன் இதழின் ஆசிரியர்

இதழின் நோக்கம்

இதழின் நோக்கமாக, க்ஷத்ரியன் இதழே தன்னைப் பற்றி உரையாடுவது போன்ற வடிவில் எழுதியுள்ளார் இதழின் ஆசிரியர் சு. அர்த்தநாரீச வர்மா. அதில், “க்ஷத்ரியன் நான். இதுவரை வெளிவரத் தயங்கினேன். இனி தடையின்றி எனது ஜாதியார் சமூகத்தில் மட்டுமன்றி ஜாதீய தர்மங்களில் தலை சிறந்தொழுதும் சமஸ்த நண்பர்கள் சந்நிதானத்திலும் சஞ்சரிப்பேன்” என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “தற்போது ஆறு வித அங்கத்தினரைக் கொண்டுள்ளேன். நாளடைவில் நல்லன்பர் பலர் என்னை நண்ணுவார்கள். உலகியல், ஒழுக்கம், சரித்திரம், சாசனம், கட்டுரை, காவியம் இவர்களே தற்போது என் வசமுள்ள அறுவர். சங்கம், சாஸ்திரமென்னும் இருவரையும் கூடத் தயார் செய்துள்ளேன். ஆதலின் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் எனக்குண்டு. எனது கடமையை ஒழுங்காய் ஆற்றுவேன்; மரபையாளுவேன்; முன்னேற்ற வழிகளில் முந்துவேன்; தன்னலங்கருதேன்; ஜாதி நலத்தையே நீதியில் மதிப்பேன்; இது நிச்சயம்.” என்று குறிப்பிட்டுள்ளார் [1].

க்ஷத்ரியன் இதழ் - 17 தொகுதிகள்

உள்ளடக்கம்

க்ஷத்ரியன் இதழின் முகப்பில், சிறு ஓவியமாகத் திருமகளும், கலைமகளும் இடது, வலது புறங்களில் இடம் பெற்றுள்ளனர். நடுவில் அரசனும், அரசியும், அமைச்சர்கள் மற்றும் அந்தணர்கள் புடை சூழ வீற்றிருப்பது போன்ற ஓவியம் இடம் பெற்றுள்ளது. ‘அருளும் அன்பும் அரசர்க்கியல்பு ' என்ற வாசகமும், ‘கோல்வழி நிற்றல் குடிகட்கியல்பு' என்ற வாசகமும் இதழின் வலது மற்றும் இடது புறங்களில் இடம் பெற்றுள்ளன. இதழின் ஆண்டினைக் குறிக்க ‘பவனி’ என்பதையும், இதழின் எண்ணிக்கையைக் குறிக்க ’காட்சி’ என்பதனையும் பயன்படுத்தியுள்ளனர்.

‘பரமபதி துணை’ என்ற வாசகத்தின் கீழ் இதழின் பெயரான ‘க்ஷத்ரியன்' என்பது இடம்பெற்றுள்ளது. அதன் கீழ் ‘சநாதந தர்மத்தை யாதரிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை’ என்ற வாசகம் காணப்படுகிறது.

ஒவ்வொரு இதழிலும்,

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்
என்ற குறளும்
ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்”]

என்ற குறளும் இடம் பெற்றுள்ளது.

க்ஷத்ரியன் இதழ்த் தொகுப்பு

தொகுதிகளும் செய்திகளும்

1923-1951 காலகட்டத்தில் வெளியான க்ஷத்ரியன் இதழ்களில் இடம் பெற்ற செய்திகள், பொருள் அடிப்படையில் தொகுக்கப்பட்டு 17 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

தொகுதி 1

முதல் தொகுதியில் கவிஞர் காவிரிநாடனின் ஆய்வுரையும், பதிப்பாசிரியர் அண்ணல் அவர்களின் முன்னுரையும் இடம் பெற்றுள்ளது. காந்திய பக்தரான அர்த்தநாரீச வர்மாவின் கட்டுரைகள் பல இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் வெளிவந்த நூல்கள், இதழ்கள் பற்றிய குறிப்புகள், மதிப்புரைகள், பாடல்கள், விளம்பரங்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

தொகுதி 2

அமுதமொழிகள், கீதை உபதேசம், பிற செய்திகள், புறநானூற்றுப் புலவர்களின் பாடல்கள் குறித்த உரைகள், ஒழுக்க நெறிகள், வாழ்வியல் சிந்தனைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

தொகுதி 3

அர்த்தநாரீச வர்மாவின் பாடல்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

தொகுதி 4

44 தலைப்புகளில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுதி 5

சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பாண்டியர் வரலாறு, மழவர் வரலாறு, பேராலயங்களின் வரலாறு போன்றவற்றைக் கொண்டுள்ளது.

தொகுதி 6

வன்னியர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. 96 தலைப்புகளில் சமுதாயச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தொகுதி 7

138 தலைப்புகளில் வன்னியர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தொகுதி 8

சாதிகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தொகுதி 9

இந்தத் தொகுதியில் சாதி மோதல்களைப் பற்றிய பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.

தொகுதி 10

கதர் பற்றிய பல தகவல்கள் இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுதி 11

400 மேற்பட்ட அரசியல் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.

தொகுதி 12

பழமொழிகள், மருத்துவக் குறிப்புகள், சிறுகதைகள், சித்தரஞ்சன்தாஸ், சேலம் வரதராஜுலு நாயுடு பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

தொகுதி 13

சுதேசமித்திரன், ஸ்வராஜ்யம், இந்தியா, தமிழ்நாடு, நவ இந்தியாவில் வெளிவந்த கட்டுரைகளின் மறுபதிப்புகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுதி 14

இந்திய அரசியல், காங்கிரஸ் கட்சி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

தொகுதி 15

1931-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் முடிய உள்ள கால கட்டங்களில் நடந்த அரசியல் நிகழ்வுகள், காங்கிரஸ் மற்றும் பிரிட்டிஷாரின் செயல்பாடுகளை, அரச நடவடிக்கைகளைக் கூறுகிறது.

தொகுதி 16

அரசியல் சார்புடைய பெட்டிச் செய்திகள், நீண்ட பத்திச் செய்திகள், கட்டுரைகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுதி 17

அர்த்தநாரீச வர்மா வெளியிட்ட க்ஷத்ரிய சிகாமணி, தமிழ் மன்னன் போன்ற இதழ்களின் தொகுப்பாக இத்தொகுதி அமைந்துள்ளது.

வன்னியர் சமூகத்தின் ஆவணமாக க்ஷத்ரியன் இதழ்த் தொகுப்பு அமைந்துள்ளது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page