under review

கிரஹலக்ஷ்மி

From Tamil Wiki
Revision as of 18:11, 27 October 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கிரஹலக்ஷ்மி (மகளிர் இதழ்)

கிரஹலக்ஷ்மி (1937), மகளிருக்கான இதழ். பெண் கல்வி, சுகாதாரம், பால்ய விவாக எதிர்ப்பு, கைம்பெண்களின் நலம் பேணல், பெண்களின் சொத்துரிமை, வாக்குரிமை போன்ற கருத்துக்களை வலியுறுத்தி வெளிவந்த மாத இதழ். மே 1940 வரை இவ்விதழ் வெளிவந்தது.

பிரசுரம், வெளியீடு

கிரஹலக்ஷ்மி, பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை வலியுறுத்தி வெளிவந்த மாத இதழ். ஜனவரி, 1937 முதல் மே 1940 வரை வெளிவந்தது. டாக்டர் எஸ். சேஷகிரி ராவ் இவ்விதழின் வெளியீட்டாளர். எஸ். கிருஷ்ணன் பி.ஏ. (ஆனர்ஸ்) இவ்விதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை, ராயப்பேட்டை லோத்ரா அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டு வெளியானது.

நோக்கம்

"ஸ்த்ரீ சமூகம், அரசியல், கல்வி, பொருளாதாரம், சமூகக்கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் இதழ்" என்ற அறிவிப்புடன் கிரஹலக்ஷ்மி இதழ் வெளிவந்தது.

உள்ளடக்கம்

இதழின் முகப்புப் பக்கத்தில் ‘கிரஹலக்ஷ்மி’ என்ற தலைப்பின் கீழ், ‘ஸ்திரீகள் சித்திர மாதப் பத்திரிகை’ என்ற குறிப்பு இடம் பெற்றது. தலைப்பில், இதழின் பெயர், ஆங்கிலத்தில், GRIHALAKSHMI என்று குறிப்பிடப்பட்டது. அவ்வப்போது பெண்களின் ஓவியங்கள் இடம் பெற்றன. வீணை மீட்டும் பெண், கவலையுடன் அமர்ந்திருக்கும் பெண், கோலம் போடும் பெண், புத்தகம் படிக்கும் பெண் எனப் பல்வேறு வகையிலான பெண்களின் கோட்டோவியங்கள் இவ்விதழில் இடம் பெற்றன. இதழின் இரண்டாவது பக்கத்தில் பொருளடக்கம் இடம்பெற்றது.

இதழின் தொடக்கத்தில் கிரஹலக்ஷ்மி இதழின் முகவர்களது முகவரிகள் இடம் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து கதை, கட்டுரைகள் இடம்பெற்றன. பெண்களுக்கான பல படக்கட்டுரைகள் வெளியாகின. பெண்கல்வி, இந்து மாதர் லட்சியம், பெண்களின் உரிமைகள், விதவைகளுக்கு விமோசனம் உண்டா?, சொத்துரிமை வேண்டும், தேவதாஸி, எத்தகைய கல்வி?, ஆடம்பர வாழ்க்கை, எல்லைப்புற இந்து மாதர், ஸ்திரீகளும் வியாசம் வரைதல் போன்ற பெண்களுக்கான பல கட்டுரைகள் வெளியாகின. நாடக விமர்சனங்கள், நூல் மதிப்புரைகள், சமையல் குறிப்புகள், உடல் நல, மருத்துவக் குறிப்புகள், உரையாடல் கட்டுரைகள் இடம் பெற்றன. ஆன்மிகத் தலங்கள் பற்றிய பல தொடர் கட்டுரைகளும் வெளியாகின.

விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. அட்டைப்படத்தின் பின்னால் சில விளம்பரங்கள் வெளியாகின. தென்னாப்பிரிக்கா, பர்மா, மலேசியா, இலங்கை மற்றும் வடநாட்டில் வங்கம் முதல் சிந்து வரை தமிழர்கள் தங்கியிருக்கும் அனைத்துப் பகுதியிலும் இவ்விதழுக்கு வாசகர்கள் இருந்ததாக இதழின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

சென்னையிலிருந்து வெளிவந்த இவ்விதழின் ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய்.

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்.

இதழ் நிறுத்தம்

மே 1940 வரை வெளிவந்த இவ்விதழ் அதன் பின் எப்போது நின்று போனது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

மதிப்பீடு

கிரஹலக்ஷ்மி, பெண்கல்வியின் இன்றியமையாமை, பெண்களுக்கான சொத்துரிமை, பெண்களின் அடிப்படை உரிமைகள், கைம் பெண் மண ஆதரவு போன்ற பல பெண்ணியச் சிந்தனைகளை வலியுறுத்தி வந்த முன்னோடி இதழ்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

  • பெண் எழுத்து, இரெ. மிதிலா, அடையாளம் பதிப்பகம், முதல் பதிப்பு, 2010


✅Finalised Page