under review

ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Finalized)
Line 29: Line 29:


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை மலையாளத்தின் பேரகராதி தயராரிப்பாளர் என்னும் நிலையில் முதன்மை அறிவியக்கவாதியாக மதிக்கப்படுகிறார். அவரது பேரகராதி இன்றும் முதன்மைப்பயன்பாட்டில் உள்ளது. தமிழில் பேரகராதியை உருவாக்கிய [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] , தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய [[பெரியசாமித் தூரன்]] ஆகியோருக்கு நிகரானவர்.  'சப்ததாராவலியின், ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளையின் வரலாறு மலையாள புத்தகங்களின் வரலாற்றில் அசாதாரணமான ஒரு அத்தியாயம்' என்று [[பி.கே.ராஜசேகரன்]] குறிப்பிடுகிறார்.
ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை மலையாளத்தின் பேரகராதி தயாரிப்பாளர் என்னும் நிலையில் முதன்மை அறிவியக்கவாதியாக மதிக்கப்படுகிறார். அவரது பேரகராதி இன்றும் முதன்மைப்பயன்பாட்டில் உள்ளது. தமிழில் பேரகராதியை உருவாக்கிய [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] , தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய [[பெரியசாமித் தூரன்]] ஆகியோருக்கு நிகரானவர்.  'சப்ததாராவலியின், ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளையின் வரலாறு மலையாள புத்தகங்களின் வரலாற்றில் அசாதாரணமான ஒரு அத்தியாயம்' என்று [[பி.கே.ராஜசேகரன்]] குறிப்பிடுகிறார்.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.jeyamohan.in/186397/ ஶ்ரீகண்டேஸ்வரம் பற்றி பி.கே.ராஜசேகரன்]
[https://www.jeyamohan.in/186397/ ஶ்ரீகண்டேஸ்வரம் பற்றி பி.கே.ராஜசேகரன்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Revision as of 09:34, 5 August 2023

ஶ்ரீகண்டேஸ்வரம்

ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை ( 27 நவம்பர் 1864- 4 மார்ச் 1946 ) மலையாள மொழிக்கு ஆதாரமான பேரகராதியான சப்ததாராவலி (சொற்களின் விண்மீன்நிரை) யை உருவாக்கியவர். மலையாள மொழியின் பெரும்பகுதிச் சொற்கள் சம்ஸ்கிருதத்தை ஒட்டியவை. ஆகவே இந்நூல் மலையாள சம்ஸ்கிருத அகராதியும்கூட.

பிறப்பு, கல்வி

திருவனந்தபுரம் அருகே ஶ்ரீகண்டேஸ்வரம் என்னும் ஊரில் குளவற வளாகத்து வீட்டில் பருத்திக்காட்டு நாராயண பிள்ளைக்கும் நாராயணியம்மைக்கும் மகனமாக 27 நவம்பர் 1864ல் பிறந்தார். ஶ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் ஆலயம் அருகே திண்ணைப்பள்ளியில் பயின்றபின் பேட்டை அரசினர் பள்ளியில் ஆங்கிலக் கல்வி பெற்றார். மெர்றிகுலேஷன் தேர்வில் இரண்டாம் முறை வென்றார். இளமையிலேயே திருவனந்தபுரம் பழவங்காடியில் விஞ்சேஸ்வர சாஸ்திரிகளிடம் சம்ஸ்கிருதக் கல்வி பயின்றார். தமிழும் அறிந்திருந்தார். கவியூர் பரமேஸ்வரன் மூஸது என்பவரிடம் ஆயுர்வேதமும் கற்றார். பழைய திருவிதாங்கூர் வழக்கப்படி வட்டார (மஜிஸ்ட்ரேட்) நீதிமன்றம் நடத்திய தேர்வில் வென்று வழக்கறிஞர் (எஃப்.ஏ) தகுதி பெற்றார்.

தனிவாழ்க்கை

பத்மநாப பிள்ளை பழைய திருவிதாங்கூர் அரசில் கண்டெழுத்து எனப்பட்ட வரிவசூல் துறையில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். பின்னர் வேலையை துறந்து வழக்கறிஞராக பணியாற்றினார். அகராதிப்பணியில் உள்ளம் மூழ்கியிருந்தமையால் இரு பணிகளையுமே முறைப்படி செய்யவில்லை. பின்னர் முழுநேர எழுத்தாளராகவே வறுமையில் வாழ்ந்தார். தன்னைப்பற்றி 1930 சப்ததாராவலி இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் 'என் அகராதியில் சுகம் என்னும் சொல்லும் அதன் பொருளும் உள்ளது. என் வாழ்க்கையில் அந்தச் சொல் இல்லை' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்

இலக்கியவாழ்க்கை

இளமையிலேயே கதகளி, ஓட்டன் துள்ளல் போன்ற கலைகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். முதல் படைப்பு பாலி விஜயம் என்னும் ஓட்டன் துள்ளல் பாட்டு. தர்மவிஜயம் என்னும் கதகளி ஆட்டக்கதை பிறகு வெளிவந்தது. அறுபதுக்குமேல் நூல்களை ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை எழுதியிருக்கிறார். பொருளியல்தேவைக்காக நாட்டார் மரபை ஒட்டிய பல்வேறு திருவிழாப்பாடல்களை எழுதியுள்ளார்

சப்த தாராவலி

மலையாள மொழியின் முதல் நவீனப் பொது அகராதி ஜெர்மானிய மதப்பரப்புநர் ஆன ஹெர்மன் குண்டர்ட் தயாரித்தது. மலையாள மொழியின் பெரும்பாலான சொற்கள் சம்ஸ்கிருத மூலம் கொண்டவை. அச்சொற்கள் அனைத்தையும் இணைத்த பேரகராதியை முதன்முதலாக ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை தயாரித்தார். 1895 ல் தன் 32 ஆவது வயதில் ஶ்ரீகண்டேஸ்வரம் சப்ததாராவலிக்கான ஆய்வை ஆரம்பித்தார். 1897ல் தன் முயற்சியை அறிவித்தார். 1904-ல் அகராதிக்காக அதுவரை அவர் சேகரித்த சொற்களை ’கீசா நிகண்டு’ என்ற பெயரில் கையடக்கப் பதிப்பாக பத்மநாபபிள்ளை வெளியிட்டார்.

சிறுபதிப்பாளர் ஜெ.கேப்பையுடன் சேர்ந்து 1917இல் நவம்பர் 13-ஆம் தேதி பத்மநாபபிள்ளை சப்ததாராவலியின் முதல் பகுதியை வெளியிட்டார். மாத இதழ் போல தொடராக அகராதி வெளிவந்தது. 1923ல் கடைசியில் 22ஆம் பகுதி வெளிவந்ததுடன் சப்ததாராவலியின் முதல்பதிப்பு முழுமையாக வெளிவந்துவிட்டது. மொத்தமாக 1584 பக்கங்கள். 1930ல் அதன் பதிப்புரிமையை திருவனந்தபுரம் சாலைத்தெரு சந்தையில் ஆர்.டி.பிள்ளை என்ற புத்தகவியாபாரிக்கு விற்றார். பின்னர் ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளையின் மகன் பி.தாமோதர பிள்ளை அந்த அகராதியின் சுருக்கமான பதிப்பை வெளியிட்டார். பின்னர் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. இன்று இவ்வகராதி முப்பது சதவீத வார்த்தைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

மறைவு

4 மார்ச் 1946ல் ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை மறைந்தார்.

விருது

சப்ததாராவலி அகராதிக்காக ஶ்ரீமூலம்திருநாள் ராமவர்மா மகாராஜா ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளைக்கு வீரச்சங்கிலி பரிசளித்தார்

விவாதங்கள்

ஹெர்மன் குண்டர்ட் அகராதியில் கடைப்பிடித்த ஐரோப்பிய முறைமை ஶ்ரீகண்டேஸ்வரம் அகராதியில் இல்லை என்னும் குற்றச்சாட்டு சொல்லப்படுவதுண்டு. பல சொற்களுக்கு பொருளாக மாற்றுச்சொற்களே அளிக்கப்பட்டுள்ளன.

இதழியல்

பாஷாவிலாசம் என்னும் மாத இதழை மொழியாராய்ச்சிக்காக சிலகாலம் நடத்தினார்

இலக்கிய இடம்

ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை மலையாளத்தின் பேரகராதி தயாரிப்பாளர் என்னும் நிலையில் முதன்மை அறிவியக்கவாதியாக மதிக்கப்படுகிறார். அவரது பேரகராதி இன்றும் முதன்மைப்பயன்பாட்டில் உள்ளது. தமிழில் பேரகராதியை உருவாக்கிய எஸ். வையாபுரிப் பிள்ளை , தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித் தூரன் ஆகியோருக்கு நிகரானவர். 'சப்ததாராவலியின், ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளையின் வரலாறு மலையாள புத்தகங்களின் வரலாற்றில் அசாதாரணமான ஒரு அத்தியாயம்' என்று பி.கே.ராஜசேகரன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

ஶ்ரீகண்டேஸ்வரம் பற்றி பி.கே.ராஜசேகரன்


✅Finalised Page