first review completed

வ.உ. சிதம்பரனார்

From Tamil Wiki


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

வ.உ.சிதம்பரனார்

வ.உ. சிதம்பரனார் (செப்டம்பர் 5, 1872 – நவம்பர் 18, 1936) விடுதலைப் போராட்ட வீரர், தமிழறிஞர், எழுத்தாளர், கட்டுரையாசிரியர், பேச்சாளர், பதிப்பாசிரியர், வழக்கறிஞர், தொழிற்சங்கத் தலைவர், மொழி பெயர்ப்பாளர், உரையாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

தனிவாழ்க்கை

வ. உ. சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக்கொண்டார். அரசாங்க அலுவலரான கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். பதினான்கு வயதில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குச் சென்று புனித சேவியர் பள்ளியிலும் கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார்.

வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் 1894-ஆம் ஆண்டு சட்டக்கல்வித் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். 1895-ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலை துவங்கினார். அதே ஆண்டில் வள்ளி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். 1900-ல் வள்ளி அம்மையார் தன் முதல் பிரசவத்தில் மரணமடைந்தார். அதன் பின் தூத்துக்குடிக்குச் சென்று வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்த வ.உ.சி. 8 செப்டம்பர், 1901 அன்று மீனாட்சி அம்மாளை திருமணம் செய்து கொண்டார்.

அரசியல்

1892-ஆம் ஆண்டு பாலகங்காதரின் எழுத்துக்களால் கவரப்பட்டு அவரின் சீடரானார். மொழிப்பற்று வழி நாட்டுப்பற்று உருவாகும் என்ற நம்பிக்கை கொண்டிருந்த அவர் அரசியல் தலைவர்கள் கூட்டங்களில் தமிழில் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. இதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

சிறைக்குப் பின்

வ.உ. சிதம்பரனார் ஆறாண்டு சிறைத்தண்டனையிலிருந்து டிசம்பர் 24, 1912 அன்று விடுதலை பெற்றார். சிறைவாழ்க்கை அவர் மொழியின் பக்கம் திரும்பும்படியான சூழ்நிலையை உருவாக்கியது. இதன் பின்னர், வ.உ.சி. 24 ஆண்டுகளை இலக்கியம், இலக்கணம், சைவம் ஆகியவற்றை கற்பதிலும் பதிப்பிப்பதிலும் செலவிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சிறையிலிருந்தபோதே திருக்குறள் உரைகளை படித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த அவர் ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் பதிப்பித்தவற்றில் தொல்காப்பியம், சிவஞான போதம், திருக்குறள் ஆகிய மூன்றும் முக்கியமானவை.

மொழி பெயர்ப்பு

மனம் போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்ற நூல்களை வ.உ.சி. மொழி பெயர்த்திருக்கிறார். வ.உ.சி.யை ஜேம்ஸ் ஆலன் (1864-19) பெரிதும் கவர்ந்திருக்கிறார். ஆலன் கீழைநாட்டுத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்தவர். வ.உ.சி. மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் மனம் போல் வாழ்வு என்ற நூல் 13 பதிப்புகளை கண்டிருக்கிறது. வ.உ.சி. வாழ்ந்தபோதே இப்பதிப்புகள் வெளிவந்தன. வலிமைக்கு மார்க்கம் நூல் 9 பதிப்புகளும் அகமே புறம் 6 பதிப்புகளும் கண்டன. ஒருவகையில் வ.உ.சி.யின் இறுதிக்காலத்தில் ஜேம்ஸ் ஆலன் அவருக்கு உதவியிருக்கிறார்.

சைவசமயம்

வ.உ.சி. சைவசமயக் கருத்துகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் சிறையிலிருந்து வெளிவந்தபின் சென்னையிலும் (1913-1920) கோயம்புத்தூரிலும் (1920-24) யோக வாசிஷ்டத்தை முறையாக கற்றார். வ.உ.சி.யின் சிவஞானபோத இரண்டாம் பதிப்புக்கு அணிந்துரை எழுதிய சி.சு. மணி "வ.உ.சி. கடும் சைவத்தைக் கடுமையாக எதிர்கொண்டிருக்கிறார். அவருடைய சீர்த்திருத்த எண்ணங்கள் வேதாந்தத்தோடு சித்தாந்தத்தை சமரசம் காணவைத்துள்ளன” என்கிறார். பொது மக்களுக்கு புரியும்படியான உரை வேண்டும் என்பதற்காக சிவஞானபோத நூலுக்கு உரை எழுதியதாக வ.உ.சி. கூறுகிறார்.

வ.உ.சி. சிவஞானபோதத்தை 1935-ல் உரையுடன் வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பை ஆ.இரா. வேங்கடாசலபதி முன்னுரை, பின்னிணைப்புகள், படங்களுடன் வெளியிட்டிருக்கிறார் (1999). இப்பதிப்பில் வ.உ.சி. சைவ சித்தாந்தம் தொடர்பாக எழுதி வெளிவராத ஒரு கட்டுரையும் உள்ளது.

பதிப்பாளர்

தொல்காப்பியம் - இளம்பூரணத்தை இவர் பதிப்பித்தார் என்பதை வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் முதல் இரண்டு இயலை வ.உ.சி. வெளியிடும்போது செல்வக்கேசவராய முதலியார் உதவியிருக்கிறார். வ.உ.சி.யும் வையாபுரிப்பிள்ளையும் இணைந்து பொருள் முழுவதையும் பதிப்பித்திருக்கின்றனர். திருக்குறள் பரிமேலழகர் உரையில் சில இடங்களில் பிழை உள்ளது என்ற கருத்துடையவர் வ.உ.சி. அவருக்குப் பிடித்த உரையாசிரியர் மணக்குடவர். இந்த உரை தமிழ்ப் பண்பாடு கருதி எழுதப்பட்டது என்று கருதினார் அவர். வ.உ.சி.யின் மணக்குடவர் உரை வெளிவர (1918) தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் உதவியிருக்கின்றனர்.

எதிர்கொண்ட இன்னல்கள்

திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் 'இன்னிலை' என்ற பேரில் ஒரு நூலின் ஏட்டை வ.உ.சி.யிடம் கொடுத்து இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று எனக் கூறி வ.உ.சி.யிடம் கணிசமாக பணமும் பெற்றிருக்கிறார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இன்னிலையையும் சேர்த்து அதை பதிப்பித்தார் வ.உ.சி. இப்பதிப்பு போலியானது, தவறானது என மயிலை சீனி வேங்கடசாமி, மு. அருணாசலம் ஆகியோர் எழுதிய பின்பு வ.உ.சி.யின் பதிப்பு தவறானது என்று தெரிந்தது. 1931-ல் அனந்தராம அய்யர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று 'கைந்நிலை' என பதிப்பித்த பின்னர் வ.உ.சி. மனம் நொந்திருக்கிறார். இதை வையாபுரிப்பிள்ளையும் கு. அருணாசலக்கவுண்டரும் பதிவு செய்துள்ளனர்.

படைப்புகள்

பதிப்பு

  • தொல்காப்பியம்
  • சிவஞான போதம்
  • திருக்குறள்

மொழி பெயர்ப்பு

  • மனம் போல் வாழ்வு
  • அகமே புறம்
  • வலிமைக்கு மார்க்கம்
  • சாந்திக்கு மார்க்கம்

உசாத்துணை

அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்