being created

வைக்கம் முகமது பஷீர்

From Tamil Wiki
Revision as of 01:59, 24 April 2022 by CashelBloom (talk | contribs)
நன்றி ஜெயமோகன்.இன்

இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர் (1908-1994). நவீன மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியான பஷீர், எளிமையான வார்த்தைகள், மிகைப்படுத்தல்கள் இல்லாத நடை, இயல்பு வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்திருக்கும் கதாபாத்திரங்கள் இவற்றால் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் படைப்பாளியாகப் புகழ் பெற்றிருந்தார். வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது. அவர் பல நாவல்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

1வாழ்க்கைக் குறிப்பு

1.1 பிறப்பு

பஷீர் ஜனவரி 19-ஆம் நாள் 1908 -ல் கேரளாவில் உள்ள வைக்கம் தாலுகாவில் 'தலையோலப்பரம்பில்', ஆறு பிள்ளைகள் பிறந்த ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்தார்.பஷீரின் தந்தையார் பெயர் காயி அப்துல் ரகுமான், தாயார் பெயர் குஞ்ஞாச்சுமா.

1.2 இளமை

பஷீர் தான் பிறந்த அதே ஊரில் மலையாளப் பள்ளியில் ஆரம்பக்கல்வியும், பின்னர் வைக்கம் ஆங்கிலப் பள்ளியிலும் கற்றார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். தனது பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே வீட்டை விட்டு ஓடி இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.1930-ல் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். பகத் சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி இயங்கினார். அவ்வமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ எனும் வாரப் பத்திரிகையும் தொடங்கினார். பிரபா’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். பஷீரின் பத்திரிகை தடை செய்யப்பட்டது. இவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்கவே பத்தாண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து நாடோடி போலக் கழித்தார். ஆப்பிரிக்கா, அரேபியா போன்ற நாடுகள்வரைகூட அந்தப் பயணம் நீண்டது. இந்தக் காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சில வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கைக் கரைகளிலும் இந்துத் துறவியாகவும் இஸ்லாமியச் சூஃபியாகவும் வாழ்ந்தார். பின்னர் கேரளத்திற்குத் திரும்பி மலையாளத்தில் சிறுகதை, நாவல், உரைநடை என விரிவாக இயங்கி மலையாள இலக்கியத்தின் முக்கியமான முகமாக மாறினார்.

1.3 குடும்பம்
  1. பஷீரின் மனைவியின் பெயர்பாத்திமா என்ற பெயருடைய பாஃபி(1956–1994). பஷீருக்கு ஷாபினா பஷீர், அனீஷ் பஷீர் என பெண்ணும் ஆணுமாய் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

2. பங்களிப்பு

இந்திய சுதந்திர போராட்டம் வீறுகொண்டு நடைபெற்றுவந்த வேளையில் இளைஞரான பஷீர் தனது வீட்டை விட்டு வெளியேறி, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ‘மதிலுகள்’ எனும் நாவலாக பின்னாளில் உருவானது. சிறையில் இருக்கும்போதே அவருக்கு சிறையில் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒருவருடன், மதில் ஒன்றின் இருபுறமும் இருந்து பேசிகொள்வதன் வாயிலாக உருவாகும் காதலும், அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களும் இந்தக் கதையில் விவரிக்கப் பட்டுள்ளது. சிறை வார்டன்களுக்கு வழங்கப்படும் லஞ்சம், சிறைகளின் உள்ளும் தலைவர்கள் வாழும் சொகுசு வாழ்க்கை என்று பஷீர் தனது மதிலுகள் நாவலில் சிறைத்துறை சீர்கேடுகளை உரைக்கிறார்.

பஷீர் சில காலம் மனநோயால் பீடிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் மனம் பேதலித்தவர்களுடன் இருந்தபோது அவர், ‘பாத்தும்மாயுடே ஆடு’ என்ற நாவலை எழுதினார். `பாத்துமாவின் ஆடு’ உற்சாகமான ஒரு குடும்பசித்திரம். மனநிலை பிறழ்ந்து, சிகிச்சைக்குப்பிறகு, ஓய்வெடுக்கும் பொருட்டு தன் குடும்ப வீட்டுக்கு வந்து தங்குகிறார் பஷீர். அங்கு அவருடைய உம்மா, தம்பி ஹனீபா, அவர் மனைவி, தங்கை, அவள் கணவன் இவர்களுடைய குழந்தைகள் மற்றும் உம்மாவின் வளர்ப்புக் கோழிகள் உள்ளனர். பக்கத்தில் தங்கை பாத்துமாவும் அவள் குழந்தைகளும் கணவனும் அவளுடைய செல்ல ஆடும் வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். இந்த குடும்ப நாடகத்தை நகைச்சுவையுடன் கூறுகிறார் பஷீர். இந்நாடகத்தில் மையக்கதாபாத்திரம் பாத்துமாவின் ஆடுதான். பஷீரின் படைப்பியக்கத்தின் சிறப்பான இடங்கள் குழந்தைகளையும் மிருகங்களையும் அவர் காட்டுமிடங்கள்தான். இந்நாவல் அதற்கு சிறந்த உதாரணம். மானுடம் மீதான உளம் திறந்து நேசிக்கிறது. அந்தப் பிரியத்தின் ஒளியில் குரூரமான வாழ்வுநாடகம் இனிய நகைச்சுவை அரங்காக மாறிவிடுகிறது.

பஷீர் அளவுக்கு மானுடக்குரூரத்தைக் கண்டவர் குறைவே. அவருடைய ‘சப்தங்கள்’ போன்ற ஆக்கங்கள் குரூரத்தையே சித்தரிக்கின்றன. அதிலிருந்து தாண்டிவந்து அனைத்தையும் எல்லையில்லாது மன்னிக்கும் மார்போடணைத்து நேசிக்கும் மனவிரிவை அவர் அடைந்தார். மனிதர்கள் மட்டுமின்றி பஷீரின் கதைகளில் அவர் வீட்டு கோழி, ஆடு, பாம்பு, நரி என அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. அவரது காதாபாத்திரங்களின் பெயர்கள் கூட 'சிங்கிடி முங்கன்' , 'எட்டுகால் மும்முஞ்சு' என விசித்திரமாக இருக்கும்.

பஷீரின் ஆக்கங்களில் இன்று நமக்கு கிடைக்கும் குறிப்பிடத்தக்க ஆரம்பகால புனைகதை என்பது ‘பால்யகால சகி ‘ தான். இது மிக எளிமையான ஒரு காதல் கதை. எளிய நேரடியான மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. பஷீர் தனது கதைகளில் உண்மையைத் தேடுபவராக இருந்தார். பஷீரின் நாவல்கள் அனைத்தும் கேரளத்தின் முஸ்லீம் சமுதாய நிலையை விவரிப்பவை. ‘பாத்தும்மாயுடே ஆடு’, ‘முகச்சீட்டுகளிக்காரண்டே மகள்’, ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ போன்ற நாவல்களில் தனது சமூகத்தைப் பற்றி எடுத்துரைக்கும் மனப்பான்மை அவரிடத்தில் இருந்தது. ‘என்டுப்புப்பாக் கோரான யுண்டார்னு’ ( எனது தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது) என்ற நாவலுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பேரில் சிலகாலம் இந்த நாவலுக்கு தடையும் விதிக்கப்பட்டது. பஷீர் கதை எழுதுபவரல்ல; அவர் கதை சொல்லி, அவ்வகையில் அவர் இ. ராஜ நாராயணனைப் போன்றவர். அவருடைய மொழியில் கோழிக்கோட்டுப் பகுதி முஸ்லீம் உரையாடல் மொழியின் அழகுகள் மிகுதி. குழந்தைகளின் மழலைப் பேச்சையும் பல்வேறுவிதமான கொச்சைகளையும் அவருடைய கதைகளில் காணலாம்.

3. இலக்கிய முக்கியத்துவம்.

பஷீரின் கதைகள் வலுவான மையக்கரு கொண்டவை அல்ல. திட்டவட்டமான கதைக்கட்டுமானம் உடையவும் அல்ல. ஆழமுள்ள கதைமாந்தரும் அவர்கள் சுமக்கும் மதிப்பீடுகளும் அம்மதிப்பீடுகள் மோதும் நாடகீயத் தருணங்களும் அவற்றில் இல்லை. புனைவுத்தருணங்கள் கவித்துவ தரிசனத்தின் ஒளியுடனோ தத்துவ தரிசனத்தின் உக்கிரம் கொண்டோ வெளிப்படுவதில்லை. பஷீரின் ஆக்கங்கள் அவற்றின் மொழிநடையால் மட்டுமே பேரிலக்கியங்களாக ஆகின்றன.

உலகமெங்கும் நகைச்சித்திரங்களை உருவாக்குபவர்கள் அவற்றை விமரிசனம் கலந்து கேலிச்சித்திரங்களாக [Cartoon] ஆக்குவதே வழக்கம். பஷீர் அதிலிருந்து முற்றாக வேறுபடுகிறார். பஷீரில் கேலியே இல்லை. காரணம் அவர் எதையுமே விமரிசனம் செய்வதில்லை. பஷீர் நாம் நம்மைச்சுற்றிக் காணும் எதிர்மறைக் கூறுகள் ஏதுமில்லாத ஓர் உலகத்தை உருவாக்கி நம் முன் காட்டுகிறார், அவவ்ளவுதான். அது அவரது சிரிப்பு மூலம் நிகழ்கிறது. அந்தச் சிரிப்பு பஷீரின் மொழியிலேயே உள்ளது. பஷீரின் கலையின் சாரம் அதுவே.

பஷீரின் இலக்கிய உலகம் முற்றிலும் அவரை மையமாக்கி இயங்குவது. பஷீர் தான் நேரடியாகவும் வேறு பெயரிலும் அவருடைய படைப்புலகு முழுக்க நிரம்பியிருக்கிறார். மலையாள மொழியைக் கற்கத் தொடங்கும் வாசகன் முதலில் வாசிக்கக்கூடிய எழுத்து பஷீருடையது. மிகமிக எளிமையான நடை. அவருடைய மிக நீளமான நாவல்கூட அதிகபட்சம் 80 பக்கம் நீளம் உடையதுதான். பஷீர், அவர் கதைகளில் வரும் சம்பவங்களும், சமூகம், தலைவர்கள், சம்பிரதாயங்கள் பற்றிய கிண்டல்களும், அதே கிண்டல் கலந்த பார்வையையும் கொண்டு சமூகத்தின் மீது கேள்வி எழுப்புபவராக இருக்கிறார்.பஷீரின் முந்தைய காலகட்டத்தின் எச்சம் என்று ‘சப்தங்கள்’ குறுநாவலைச் சொல்லலாம். அது ஒருவகையில் எதிர்ப்பு ஓங்கிய ஆக்கம். அனல் இருக்கிறது. இன்றைய வாசிப்பில் அது பலவீனமான ஒரு பஷீர் படைப்பாகவே தெரிகிறது.

திறனாய்வுகளின் மூலம் புதிய புதிய இலக்கிய முறைகளில் பஷீர் மலையாளத்தில் இன்று மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறார். வெறுமையில் மகத்துவத்தையும் மகத்துவத்தில் வெறுமையையும் கண்டு தெளிந்த சூபிதரிசனத்தின் பின்னணியில்தான் பஷீரை புரிந்து கொள்ளமுடியும். எந்த நவீனப் படைப்பாளியையும் விட பஷீருடன் ஒப்பிடத்தக்கவர்கள் குணங்குடி மஸ்தான் சாகிப் முதலிய சூ·பி துறவியர்தாம். ஆன்மிகம் உயரிய அங்கதத்தைச் சந்திக்கும் இடம் இதில் முக்கியமானதாகும்.

5 வாழ்க்கை வரலாறு நூல்

பஷீர் தனிவழியிலோர் ஞானி, என்கிற அவரது வாழ்க்கை வரலாறு நூல் பேராசிரியர் எம்.கே.ஸாநுவால் எழுதப்பட்டது. இதை தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்க்க பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.

வைக்கம் முகம்மது பஷீர்- காலம் முழுதும் கலை -மலையாளம்: இ.எம்.அஷ்ரப். தமிழில் குறிஞ்சிவேலன். வெளியீடு-கிழக்கு பதிப்பகம்

6 அவர் பெற்ற விருதுகள்

  • பத்மஸ்ரீ விருது- (1982)
  • கேரள சாகித்ய அக்காதமி விருது
  • மத்திய சாகித்ய அக்காதமி விருது
  • வள்ளத்தோள் விருது- 1993
  • முட்டத்து வர்க்கி விருது-1993

7 படைப்புகள்

7.1நாவல்கள்

1. காதல் கடிதம்- 1943

  • 2. பால்யகால சகி- 1944
  • 3. சப்தங்கள்- 1947
  • 4. எங்க உப்புப்பாவுக்கொரு ஆனையிருந்தது- 1951
  • 5. மரணத்தின் நிழலில்- 1951
  • 6. வாழ்க்கையின் நிழற் சுவடுகள்- 1954
  • 7. பாத்துமாவின் ஆடு- 1959
  • 8. மதிலுகள்- 1965
  • 9. தாரா ஸ்பெஷல்ஸ்- 1968
  • 10. மாந்திரிகப் பூனை- 1968
  • 11. காதலின் தினங்கள்- 1984
  • 12.காதல் கரப்பான்- 2000

7.2சிறுகதைகள்

  • ஜென்ம தினம்
  • போலீஸ்காரனின் மகள்
  • ஐசுக்குட்டி
  • நினைவுக் குறிப்பு
  • அம்மா
  • மூடர்களின் சொர்க்கம்
  • ஏழைகளின் விலைமாது
  • உலகப் புகழ்பெற்ற மூக்கு
  • ஒரு சிறைப்பறவையின் புகைப்படம்
  • பசி
  • நீலவெளிச்சம்
  • ஒரு பகவத் கீதையும் சில முலைகளும்
  • ஆனை முடி
  • அனல் ஹக்
  • சிரிக்கும் மரப்பாச்சி
  • செகண்ட் ஹாண்ட்
  • பூமியின் வாரிசுதாரர்கள்
  • பூவன்பழம்
  • சிங்கிடி முங்கன்
  • புனிதரோமம்
  • யா இலாஹி
  • கள்ள நோட்டு
  • மனைவியின் காதலன்
  • பூ நிலவில்
  • நிலவைக் காணும்போது
  • அபூர்வ தருணங்கள்
  • முதல் முத்தம்
  • ஆளரவமற்ற வீடு
  • ஏழைகளின் விலைமாது
  • கால் சுவடு
  • இடியன் பணிக்கர்
  • இரட்டிப்பு
  • வளையிட்ட கை
  • தங்கம்
  • பூமியின் வாரிசுதாரர்கள்
  • நூறுரூபாய் நோட்டு
  • எனது நைலான் குடை
  • பர்ர்ர் . .
  • சிரிக்கும் மரப்பாச்சி
  • தங்க மாலை
  • எட்டுக்காலி மம்மூஞ்ஞு
  • ரேடியோகிராம் என்னும் ரதம்
  • ஒரு கணவனும் மனைவியும்
  • மனைவியைத் திருடிச்செல்ல ஆள் தேவை
  • நோட்டு
7.3 திரைக்கதை

வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நீலவெளிச்சம் என்னும் கதையின் திரைவடிவம் பார்கவி நிலையம் என்னும் பெயரில்1964-ல்வெளிவந்தது. இப்படத்தை ஒளிப்பதிவாளர் ஏ.வின்செண்ட் இயக்கினார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.பாஸ்கர் ராவ், எழுத்து வைக்கம் முகம்மது பஷீர்.

8 மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

  • பஷீரின் இரண்டு சிறு நாவல்களின் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக தமிழில் குமாரி சி.எஸ். விஜயம் மொழிபெயர்ப்பில் தேசிய புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
  • பஷீர் கதைகள்- ஆசிரியர் குளச்சல் மு.யூசுப் (தமிழில்), சுகுமாரன் (தொகுப்பாசிரியர்)
  • பஷீர் நாவல்கள் முழுத் தொகுப்பு- ஆசிரியர் குளச்சல் மு.யூசுப்
  • எ.இ. ஆஷர் அவர்களின் மொழிபெயர்ப்பில் (My grandpa had an elephant and other stories.) ஆங்கிலத்தில் வெளிவந்தது.

9 மற்றவை

9.1 ஆவணப்படம்

எம்.ஏ.ரஹ்மான் இயக்கிய ‘பஷீர் த மேன்’ எனும் ஆவணப்படம்.

9.2 திரைக்கதை

அவரின் இந்த நாவல் “பால்யகால சகி” எனும் பெயரிலேயே பிரேம் நசீர், ஷீலா நடிப்பில் 1967 ல் மலையாளத் திரைப்படமானது. சசிகுமார் இயக்கிய இத்திரைப்படத்திற்கு பஷீரே திரைக்கதையும் வசனமும் எழுதினார்.

9.3 திரைப்படங்கள்

அடூர் கோபால கிருஷ்ணன்’ திரைக்கதை எழுதி இயக்க, மம்முட்டி நாயகனாக நடித்து ’மதிலுகள்’ திரைப்படம் 1990’ல் வெளிவந்தது.

10 உசாத்துணை

சு.பொ. அகத்தியலிங்கம் (25 மே 2014). "படைப்பாளியின் உள்மனதை ஊடுருவி". தீக்கதிர் தமிழ் நாளிதழ்.

இலக்கியத்தின் மகிழ்ச்சியான தொன்மம் வைக்கம் முகமது பஷீர்! - நினைவுதினப் பகிர்வு | Vaikom Muhammad Basheer memorial day article - Vikatan

இலக்கியத்தின் மகிழ்ச்சியான தொன்மம் வைக்கம் முகமது பஷீர்! - நினைவுதினப் பகிர்வு

https://www.puthiyathalaimurai.com/newsview/58656/vaikom-muhammad-basheer---Life-Story

ஆழம் காண முடியாத வாழ்க்கைத் தத்துவம்' - எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் நினைவு தின சிறப்புக் கட்டுரை!

Writer Vaikom Muhammad Basheer Memorial Day Special article

By பி.என்.எஸ்.பாண்டியன்


வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும் | எழுத்தாளர் ஜெயமோகன்

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.