வேதாந்தம்

From Tamil Wiki
Revision as of 14:50, 16 April 2024 by Jeyamohan (talk | contribs)

வேதாந்தம் : இந்திய தத்துவசிந்தனை மரபில் மையமான ஞானக்கொள்கைகளில் ஒன்று. இந்து மெய்ஞான மரபின் மையத்தரிசனம். பிரம்மவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றான பிரம்மம் மட்டுமே உண்மை, பிறிதெல்லாமே மாயை என்பது வேதாந்தத்தின் கொள்கை. இது ரிக்வேதத்தில் உருவாகி உபநிடதங்கள் வழியாக திரண்டு பாதராயணரின் பிரம்ம சூத்திரம் வழியாக வரையறை செய்யப்பட்டது. பகவத் கீதை இதன் முதன்மை நூல். வேதாந்தத்தின் பிற்கால வடிவங்கள் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், சுத்தாத்வைதம் முதலியவை.

கலைச்சொல்

வேதாந்தம் என்னும் கலைச்சொல் வேத+அந்தம் என்று பிரிக்கப்படத்தக்கது. வேதங்களின் முடிவு, வேதங்களின் அறுதி என்னும் பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இப்பெயர் தொல்காலம் முதலே புழக்கத்திலுள்ளது. இப்பெயர் அமைந்தமைக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன

  • ரிக்வேதத்தின் இறுதியாகிய பத்தாவது காண்டத்தில் பேசப்பட்டுள்ள பிரம்மதரிசனத்தின் தத்துவார்த்தமான விரிவாக்கமே வேதாந்தம். ஆகவே இப்பெயர் அமைந்தது
  • வேதங்கள் சொல்லும் மெய்ஞானத்தின் உச்சப்புள்ளி பிரம்மவாதமே. அதை பேசுவதனால் இப்பெயர் அமைந்தது
  • வேதம்பயிலும் மாணவன் தன் கல்விநிறைவிற்காக இறுதியாகக் கற்கவேண்டியது பிரம்மவாதம், ஆகவே இப்பெயர் அமைந்தது

தத்துவ மரபில் இடம்

இந்திய சிந்தனை மரபில் ஆறு தரிசனங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் வேதங்களை முதல்நூல்களாகக் கொண்டவை மீமாம்சம் எனப்படுகின்றன. வேதங்களின் கர்மகாண்டம் எனப்படும் சடங்குசார்ந்த பகுதிக்கு முதன்மை அளிக்கும் தரிசனம் பூர்வமீமாம்சம் எனப்படுகின்றது. வேதங்களின் ஞானகாண்டம் எனப்படும் தத்துவப்பகுதிக்கு முதன்மை அளிக்கும் தரிசனம் உத்தர மீமாம்சம் எனப்படுகிறது. ஆறாவது தரிசனமாகிய உத்தர மீமாம்சமே வேதாந்தம் ஆகும்.