வி.வி.வைரமுத்து

From Tamil Wiki
Revision as of 18:14, 27 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "'''வி. வி. வைரமுத்து''' (11 பெப்ருவரி, 1924 -8 ஜூலை 1989) இலங்கையின் இ சைநாடகக் கலைஞர். அரிச்சந்திர மயானகாண்டம் இவருடைய புகழ்பெற்ற நாடகம். நடிகமணி என போற்றப்பட்டார். == பிறப்பு, கல்வி == வி.வி.வைர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வி. வி. வைரமுத்து (11 பெப்ருவரி, 1924 -8 ஜூலை 1989) இலங்கையின் இ சைநாடகக் கலைஞர். அரிச்சந்திர மயானகாண்டம் இவருடைய புகழ்பெற்ற நாடகம். நடிகமணி என போற்றப்பட்டார்.

பிறப்பு, கல்வி

வி.வி.வைரமுத்து யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா- ஆச்சிக்குட்டி இணையருக்கு 11 பெப்ருவரி 1924ல் பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1932 இல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் 3 ஆம் வகுப்பில் சேர்ந்தார்.1941 தொடக்கம் 1942 வரை தமிழகம் சென்று மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கர்நாடக இசைக்கல்வி பெற்றார்

தனிவாழ்க்கை

1944 இல் அண்ணாவியார் சின்னய்யாவின் மகள் இரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார்.வசந்தா, லலிதா,,வனிதா,சாரங்கன்,மணிமேகலை ஆகியோர் வாரிசுகள். ஆசிரியராக பணியாற்றிய வைரமுத்து கலைப்பணியில் ஈடுபட்டமையால் வேலையை இழந்தார்.

கலைவாழ்க்கை

பாடசாலைக் காலத்தில் அப்பூதியடிகள் என்ற இசை நாடகத்தில் அப்பூதியடிகளாக நடித்தார். 1938 ஆம் ஆண்டு தனது 14 ஆம் வயதில் சங்கீத கோவலன் என்னும் இசை நாடகத்துக்கு முதன் முதலாக ஆர்மோனியம் வாசித்துள்ளார். ‘வசந்தகான சபா” என்னும் நாடகமன்றத்தை ஆரம்பித்துச் சரித்திர புராண இதிகாச நாடகங்களை மேடையேற்றினார். சத்தியயவான் சாவித்திரி நாடகத்தில் சாவித்திரியாகவும் சம்பூரண அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாகவும், ஸ்ரீவள்ளி நாடகத்தில் வள்ளியாகவும், நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளகவும் பெண் பாத்திரங்களை ஏற்று நடித்த வைரமுத்து 1950 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் மேடையேற்றப்பட்ட சம்பூர்ண அரிச்சந்திரா நாடகத்தில் முதன்முதலாக அரிச்சிந்திரனாக நடித்தார். வைரமுத்துவின் மிகச்சிறந்த வேடமாக மயானகாண்டம் என்னும் இசை நாடகத்தில் அரிச்சந்திரன் அமைந்தது.இலங்கை முழுவதும் 3000 இற்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டது அது.

இலங்கை வானொலியில் பல இசை நாடகங்களை வழங்கினார். மிருதங்கம், ஆர்மோனியம், வயலின், ஜலதங்கரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பவளவிழாவின் போது இவர் பாடி நடித்த 'நந்தனார்' இசை நாடகத்தை ஒலிப்பதிவு செய்து குறுவட்டாக வெளியிட்டார்கள். இலங்கை வானொலியில் முதல் முதலாக வெளிவந்த நாட்டுக்கூத்து நாடகம் இதுவே.