விவரண மரபு

From Tamil Wiki

விவரண மரபு (பொயும் 10 ஆம் நூற்றாண்டு) அத்வைத வேதாந்தத்தின் ஒரு துணைப்பிரிவு. அத்வைத விளக்கங்களில் இருந்து உருவானது. விவரண மரபு சங்கரரின் முதன்மை மாணவரான பத்மபாதர் எழுதிய பஞ்சபாதிகா என்னும் நூலுக்கு பத்மபாதரின் மாணவர் பிரகாசாத்மன் எழுதிய விளக்கவுரையில் இருந்து உருவானது. விவரண மரபைச் சேர்ந்தவர்கள் அனைத்தும் பிரம்மமே என்பதனால் பிரம்மம் அன்றி ஒன்று இருக்கமுடியாது என்றும் ஆகவே அவித்யையின் உறைவிடம் பிரம்மமே என்றும் வாதிட்டனர். வேதவேள்விகள் ஞானத்தை நோக்கி கொண்டுசெல்பவை என்றும், மூலநூல்களை முறைப்படி பயில்தலே மெய்ஞானம் அளிக்கும் என்றும் வலியுறுத்தினர்.

தோற்றம்

வேதாந்த மரபுக்குள் சங்கரர் உருவாக்கிய அத்வைதம் பிற்காலத்தில் பாமதி மரபு , விவரண மரபு என இரண்டாகப் பிரிந்தது. இப்பிரிவினை சங்கரரின் மரபைச் சேர்ந்தவர்கள் அவருடைய நூல்களுக்கும் அவரது மாணவரின் நூல்களுக்கும் அளித்த விளக்கங்களிலுள்ள வேறுபாடு வழியாக உருவானது. சங்கரரின் பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு வாஸஸ்பதி மிஸ்ரர் அளித்த விளக்கத்தில் இருந்து பாமதி உருவானது. மண்டன மிஸ்ரரின் மாணவரான வாசஸ்பதி மிஸ்ரர் தன் ஆசிரியரின் கருத்துக்களுடன் சங்கரரின் அவித்யை பற்றிய கருத்துக்களை இணைத்து விளக்கம் அளித்தார்.அதற்கு ஒரு தலைமுறைக்குப் பின் சங்கரரின் மாணவரான பத்மபாதர் எழுதிய பஞ்சபாதிகா என்னும் நூலுக்கு அவருடைய மாணவரான பிரகாசாத்மன் எழுதிய விளக்கவுரையில் இருந்து விவரண மரபு உருவானது. அது பாமதி மரபை மறுத்தது. அத்வைத மரபில் வலுவான தரப்பு என்பது விவரண மரபேயாகும்

தத்துவம்

பிரதிபலிப்புவாதம்

விவரண மரபு அத்வைதத்தை அறிவார்ந்து தர்க்கபூர்வமாக அமைத்துக்கொள்ளும் அடிப்படைகளில் கவனம் செலுத்தியது. அத்வைதத்தின் பாமதி மரபின் கொள்கையின்படி அவித்யை என்பது ஜீவாத்மாக்களிடம் இருக்கும் ஒரு பிழை அல்லது எல்லை. ஓர் அறிவின்மை அது, இன்மைக்கு காரணமோ தோற்றுவாயோ தேடவேண்டியதில்லை (பிள்ளைபெறாதவளின் மகன் என்னும் உவமை போல) .இவ்வாறு பாமதி மரபு முன்வைக்கும் அநிர்வசனீயம் (கூறமுடியாமை) என்பது விளக்கம் அல்ல, விளக்கமின்மை, விளக்குவதே அறிஞரின் பணி என்றது விவரண மரபு.

விவரண மரபின்படி பிரம்மம் ஒன்றே இருப்பது, ஆகவே, தர்க்கபூர்வமாகப் பார்த்தால் எந்த ஒன்றையும் பிரம்மத்திலிருந்து அகற்றிப்பார்க்க முடியாது, அது பிரம்மத்தின் லீலையே ஆயினும்கூட. எனவே அவித்யையின் தொடக்கமும் பிரம்மமே. பிரம்மம் மெய்யறிவால், மெய்யறிவாக அறியப்படுவது, எனவே அறிவுமயமானது, அதில் அறியாமை என்னும் அவித்யை நிலைகொள்ளமுடியாது, அவ்வாறு அறியாமையும் அறிவும் ஓரிடத்தில் தோன்றுமென்பது முரண்பாடு என விவரண மரபின் தரப்பு மறுக்கப்பட்டது. அதற்குரிய பதிலாக பிரதிபலிப்புவாதத்தை முன்வைத்தது. மாயை என்பது பிரம்மத்தின் பிரதிபலிப்பே (ஆடியில் உருவம் பெருகுவதுபோல். ஆடிகள் அவை பிரதிபலிப்பவற்றை எவ்வகையிலும் கூட்டுவதோ குறைப்பதோ மாற்றுவதோ இல்லை).

பிரமாணஞானம்

விவரணமரபின்படி அவித்யையால் மறைக்கப்படுவதும். அவித்யையை அகற்றி ஞானத்தை அருள்வதும், அந்த ஞானத்தால் தெளிவதும், அந்த ஞானத்தின் விளைவாக அறியும்தன்னிலையாகவும் துலங்குவதும் பிரம்மமே. அந்த மெய்றிவு அல்லது பரமார்த்திக அறிவு விவரணமரபால் ஆதாரஅறிவு (பிரமாணஞானம்) என அழைக்கப்பட்டது.

இரண்டு பொருட்களில் அதை விவரண மரபின் ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். ஒன்று. அனுபவ ஆதார ஞானம். ஆதாரம் என்பது அறியும் தன்னிலை அடையும் பிரம்மஅனுபவத்தால் உருவாகும் நேரடியறிதலே (அபரோக்ஷம்). இரண்டு, மூலநூல்களாகிய சுருதிகள் அளிக்கும் ஆதாரம், சப்தப்பிரமாணம்.

விவரண மரபு பிரம்மத்தை அறிய சுருதிகள் மற்றும் முன்னறிவால் அளிக்கப்பட்ட மெய்ஞானத்தை, முறையான ஆசிரியரின் உதவியுடனும் வகுக்கப்பட்ட கல்விநெறிகளுடனும் பயின்று தெளிந்து அடையும் மெய்ஞானம் மட்டுமே ஒரே வழி என வகுக்கிறது.

சத்சித்ஆனந்தம்

தூயபிரக்ஞையாகிய சித்  என்பது பிரம்மத்தின் வடிவமும் பிரம்மம் வெளிப்படும் விதமும் ஆகும், அதுவே சத் என்னும் நன்மையும் உண்மையுமாகிய தெய்வங்களும் பிரபஞ்சமும் ஆகிறது, அதை அறியும் அனுபவமே ஆனந்தம் என்னும் விரிவுநிலை. இம்மூன்றையும் இணைத்து சத்சித்ஆனந்தம் என விவரண மரபினர் கூறுகிறார்கள்.இக்கருத்து பின்னாளில் பக்திமரபிலும் புகழ்பெற்ற இறைவிவரணையாக ஆகியது.

பாமதி- விவரண வேறுபாடுகள்

அத்வைத வேதாந்தக் கருத்துக்களை தொகுத்து சித்தாந்தலேச சம்கிரக என்னும் கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட நூலை இயற்றிய அப்பைய தீட்சிதர் பாமதிக்கும் விவரணத்துக்குமான வேறுபாடுகள் அடிப்படை கொள்கை சார்ந்தவை அல்ல, பார்வைக்கோணங்கள் சார்ந்தவை மட்டுமே என்கிறார். ஆனால் நடைமுறையில் வேள்விகள், வழிபாடுகள் ஆகியவற்றை எந்த அளவில் ஏற்றுக்கொள்வது என்பதே இவற்றுக்கிடையேயான வேறுபாட்டை உருவாக்கியுள்ளது.

பாமதி
  1. அவித்யை என்பது ஜீவாத்மாவில் உறைவது. பிரம்மத்தை மறைப்பது
  2. தியானிக்கும் மனம் மெய்யுணர்வதன் கருவி
  3. வேதஞானம், வேள்விஞானம் ஆகியவை பிரம்மத்தை அறியும் ஆவலை மட்டுமே அளிப்பவை. பிரம்மஞானத்தை அவை அளிப்பதில்லை
  4. மெய்ஞானக் கல்விக்கு (ஸ்ரவணம்) வகுக்கப்பட்ட நெறிகள் தேவையில்லை
  5. ஜீவாத்மாவில் அவித்யை குடிகொள்வதை விளக்க அநிர்வசனீயம் (வகுக்கமுடியாமை) கொள்கை முன்வைக்கப்படுகிறது
  6. ஜீவாத்மாவிலுறையும் அவித்யை பலவகையானது,
  7. அகண்டாவிருத்தி என்னும் ஞானத்தேடனில் நோக்கம் அறியக்கூடிய பிரம்மம் அல்லது ஈஸ்வரன்
விவரண
  1. அவித்யையின் உறைவிடம் பிரம்மமே, பிரம்மமே அனைத்தும்
  2. மகாவாக்கியங்கள் மட்டுமே ஆத்மஞானம் அளிப்பவை
  3. வேள்விகளும் சுருதிகளும் ஞானத்தை அளிப்பவை
  4. மெய்ஞானக் கல்விக்கு (ஸ்ரவணம்) நெறிகள் வகுக்கப்படவேண்டும்
  5. ஆத்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பு என்னும் கொள்கை முன்வைக்கப்படுகிறது
  6. ஒரே அவித்யை மட்டுமே உள்ளது, அது பிரம்மத்தை வேறொன்றாக உணர்வது, அந்த அவித்யை பலவாறாகப் பெருகுகிறது
  7. அகண்டாகார விருத்தி என்னும் ஞானத்தேடலின் நோக்கம் அலகிலாத பிரம்மம்.

இடம்

விவரண மரபு வேள்விகளை உள்ளிழுத்துக்கொண்டது. மூலநூல்களின் இடத்தை உறுதியாக நிலைநாட்டியது. பிரம்மத்தை அறிய வகுக்கப்பட்ட கல்விமுறையை வலியுறுத்தியது. ஆகவே அது பிற்காலத்தைய அத்வைத வேதாந்த அமைப்புகளுக்குரிய கொள்கையாக நிலைகொண்டது, பின்னாளில் புத்தெழுச்சி கொண்ட வேள்விமரபு, திரண்டுருவாகிவந்த பக்தி மரபு மற்றும் அதன் விளைவான ஆலயவழிபாட்டுமுறைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அத்வைதத்தை விவரணமரபு உருமாற்றம் செய்தது. ஆகவே மைய அத்வைத மரபாக நீடிக்கிறது.

நூல்கள்

விளக்கநூல்கள்
  • பிரகாசாத்மன் – விவரண
  • அகண்டானந்தர்- தத்வதீபன
  • சிட்சுகர்- தாத்பர்யதீபிக
  • ஆனந்தபூர்ண வித்யாசாகரர்- விவரண திலக
  • சர்வக்ஞவிவிஷ்ணு – ரிஜுவிவரண
  • ரங்கராஜ தீட்சிதர் – தர்ப்பண
  • ந்ருசிம்ஹாஸ்ராம – ஃபாவபிரகாசிகா
  • யக்ஞநாராயண தீக்ஷிதர் உஜ்ஜீவனி
  • அமலானந்தர் – தர்ப்பண
  • ந்ருசிம்ஹாத்ஸ்ராம -வேதாந்த ரத்ன கோச
  • தர்மராஜாஅத்வரீந்திரர் -பதயோஜனா
பொதுநூல்கள்
  • பாரதிதீர்த்தர் – விரவணப்ரமேய சங்ரக
  • தர்மராஜாஅத்வரீந்திரர்  வேதாந்த பரிபாஷா
  • ராமானந்த சரஸ்வதி விவரணோபன்யாஸ

உசாத்துணை