விக்ரமாதித்யன்

From Tamil Wiki
Revision as of 14:00, 30 January 2022 by Sundarbala94 (talk | contribs)
கவிஞர் விக்கிரமாதித்யன் புகைப்படம் - விகடன் தடம் இதழ்

நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் விக்ரமாதித்யன் (செம்படம்பர் 25, 1947) திருநெல்வேலியில் பிறந்தவர். உத்திராடன் எனும் புனைப்பெயரிலும் எழுதி வருகிறார். இலக்கிய உலகில் அண்ணாச்சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். விக்கிரமாதித்தியன் கவிதைகளில் அவர் பிறந்த சைவ வேளாள சமூகத்தின் அத்தனை தொன்மங்களும் மனச் சுழல்களும் உள்ளன.கோவில் கோவிலாகச் சுற்றுவது,ஜோதிட ஆர்வம்,சக்தி வழிபாடு,சித்தர் வழிபாடு,திராவிடம் பற்றிய இருதலையான நோக்கு,மெலிதான வைஷ்ணவ வெறுப்பு,காசியின் மீதான பிரமிப்பு எல்லாமே அவரது சைவ வெள்ளாள ஆன்மீகத்திலிருந்து வருகிறவையே.அவர் கவிதைகளிலும் இது தொட்டுத் தொட்டு வந்துகொண்டே இருக்கிறது. உலகம் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும் மிகப்பெரிய சுடலைமயானம் என்பது அவர் கவிதைகளிலிருந்து நமக்கு கிடைக்கும் சித்திரம்.

தமிழ்க்கலை வாழ்வில் விக்ரமாதித்யனின் ஆளுமை மகத்துவமான ஒன்று.காலத்தில் மேலும் மதிப்பு அதிகரிக்கக்கூடும். தமிழ்வாழ்வின் நுட்பமான சிக்கல்களை முதன்முதலாக நவீனகவிதைகளை உருவாக்கியவர் அவர். தனிமனித சிக்கல்களை மட்டுமல்ல,சமூக சிக்கல்களையும்,இறந்த காலம் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் பகுத்தறிவு சாராமல் வாழ்வில் அவை குறுக்கிடுவதையும் உணர்த்தியவர். பகுத்தறிவு சாராமல் அவரது மொத்த கவிதை உலகத்தை உற்றுநோக்கும் வாசகன் இதனை உணரமுடியும். வாழ்வின் தர்க்கமற்ற சாத்தியங்களுக்குள் தனது கவிதைகளுக்கும் வாழ்வுக்கும் இடமளித்துக் கொடுத்தவர் அவர்.இனிவரும் தலைமுறையினருக்கு கலையில் ஈடுபடும் மனபலத்தை தரக்கூடியது அவரது வாழ்வு.

நவீன மூளையால் விளங்கிக் கொள்ள முடியாத ஓரிடத்தில் அவரது வாழ்வும் கவிதைகளும் நிரம்பி இருக்கின்றன.தமிழகத்தில் இளம் கலைஞர்களோடு இவருக்குள்ள உறவுபோல வேறு எந்த சமகாலக் கலைஞனுக்கும் உறவு அமையவில்லை என்பது ஒரு உண்மை என்று இவரைப் பற்றி கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணண் குறிப்பிடுகிறார்.

தனிவாழ்க்கை

குறுக்குத்துறை எனும் தனது இணையப் பக்கத்தில் கவிஞர் தன்னை இவ்வாறு அறிமுகம் செய்துகொள்கிறார் - மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவைநிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-க்ளீனர், சர்வர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், குன்றகுடி ஆதின அட்டெண்டர், ஜலகன்னி, தம்போலா, வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு கிளப் கேஷியர், ஊர் ஊராகப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர் என பல பணிகள் செய்திருக்கிறேன். திருமணமாகி பிள்ளைகள் இருவர். பெரியவன் சென்னையில் தனியார் நிறுவமொன்றில் பணிபுரிகிறான். சின்னவன் தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரியில் பயின்று ஒளிப்பதிவு உதவியாளராக இருக்கிறான். மனைவி பகவதி அம்மாள்.

முகவரி: மாறிகொண்டே இருப்பது.

இலக்கிய வாழ்க்கை

திரைப்படப் பாடல்கள் பாதிப்பில் கவிஞன் ஆனேன் என்று கூறிய முதல் நவீனக் கவிஞர். கம்பதாசன் மற்றும் கண்ணதாசன் திரைப்படப்பாடல்கள் தன்னை அதிகம் பாதித்த பாடல் வரிகள் என விக்கரமாதித்யன் குறிப்பிடுகிறார். தி.க.சிவசங்கரன், வண்ணதாசன் வழியாக நவீன இலக்கியம் விக்ரமாதித்யனுக்கு அறிமுகமாகியது. திகசி ஆசிரியராக இருந்த தாமரை இதழ்களை விரும்பி வாசித்திருக்கிறார். மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் கவிஞர் மீரா தனது அன்னம் பதிப்பகம் வாயிலாக நவகவிதை வரிசை என்று அதுவரை வெளிவராத பத்து கவிஞர்களின் கவிதை நூல்களை வெளியிட்டார். அவற்றில் ஒன்று 'ஆகாச நீல நிறம்'. இக்கவிதை தொகுப்பு தமிழ் நவீன கவிதை வரலாற்றில் மகத்தான கவிதை தொகுப்பாக அமைந்தது. இக்கவிதை தொகுப்பு பற்றி எழுத்தாளர் நகுலன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கவிஞர் விக்ரமாதித்யனுக்கு நகுலன் எழுதிய கடிதங்களில் 61 கடிதங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கடிதங்கள் நகுலனின் வாழ்நிலையையும் விக்ரமாதித்யனின் வாழ்நிலையையும் தமிழ் எழுத்தாளர்களின் இருப்பையும் காட்டுவன. மேலும், அன்றைய இலக்கியச் சூழல், சமூகச் சூழல் என அனைத்தையுமே இந்தக் கடிதங்களிலிருந்து கண்டுகொள்ள முடியும். சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது முழுநேர எழுத்தாளர். தான் எழுதிய கதைகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஆட்டோ பயோகிராஃபிதான் எனக் குறிப்பிடுகிறார்.

மண் சார்ந்த கவிஞர்களில் முதன்மையானவரும் முக்கியமானவரும் கவிஞர் விக்கிரமாத்தியன். ஒரு நேர்காணலில், என் மனது முழுக்க முழுக்க என் மண்ணில்தான் இருக்கிறது. என்னை சங்கக் கவிதைகள் பாதிக்கின்றன. திரிகூடராசப்பக் கவிராயர், பாரதியார், கண்ணதாசன் இவர்களின் கவிதைகள்தாம் கவர்கின்றன. மற்றபடி ஒரு கவிதை வாசகனாக நான் உலகக் கவிதைகளை வாசிக்கிறேன். பிரமிள் ஒருமுறை, எதிர் கவிதை எழுதுவதற்கு பெர்டோல்ட் பிரெக்ட்டின் கவிதைகள் உந்துசக்தியாக இருக்கும். வானம்பாடிக் கவிதைகள் பூர்ஷ்வா அழகியல்தன்மைகொண்டவை. அவை மக்களுக்குத் தேவையில்லை. பெர்டோல்ட் பிரெக்ட்டின் கவிதைகள்தாம் உண்மையான மக்கள் கவிதைகள் எனச் சொன்னார். அது எனக்கு உபயோகமாக இருந்தது. தமிழில் சுயம்புலிங்கத்தை அப்படியான ஒரு கவிஞராகச் சொல்லலாம். அதே நேரத்தில் நம்முடைய தனிப்பாடல் திரட்டு முக்கியமான எதிர்கவிதைகள் தான் எனக் குறிப்பிடுகிறார்.

காடாறு மாதம் நாடாறு மாதம் என்பதற்காகவே தனக்கு விக்ரமாதித்யன் என்று பெயர் போட்டுக் கொண்டதாக கூறுகிறார். காடு பதினொரு மாதம், வீடு ஒரு மாதம் என்பதுதான் இந்த விக்ரமாதித்யனின் ஊழாக இருக்கிறது. திரிபு கொண்டு, குடிகாரனும் கலகக்காரனும் தனியனும் கசந்தவனும் ஆக மாறி அதுவரை தன்னை ஆயிரம் கைவிரித்து துரத்தும் அனைத்துக்கும் எதிர் விசை கொடுத்து  நின்றிருந்து, தருக்கி கவிஞனென்று அறைகூவி முடித்ததுமே சலித்து தன் இல்லம் திரும்ப விழைபவர் விக்ரமாதித்யன்.

இலக்கிய இடம்

நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான நவீனக் கவிஞர்களில் ஒருவர். கவிதை, புனைவிலக்கியம் ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். விக்ரமாதித்யனின் பங்களிப்பு என்பது நவீனத்தமிழ்க்கவிதையில் பொதுவாக இல்லாமலிருந்த தமிழ் மரபுக்கூறுகளை, பழந்தமிழ் இலக்கியமரபின் அழகுகளை உள்ளே கொண்டுவந்தார் என்பதுதான். தமிழ் நவீனக்கவிதை ஐரோப்பிய நவீனத்துவத்தை நெருக்கமாக பின்பற்றியதனாலேயே தமிழின் நீண்ட கவிமரபுடன் தன் உறவை துண்டித்துக்கொண்டதாகவே இருந்தது. அவ்வுறவை அறுபடாமல் தக்கவைத்துக்கொண்டு வெளிப்பட்டவை விக்ரமாதித்யனின் கவிதைகள். அவற்றில் உள்ள தமிழ் மரபுசார்ந்த படிமங்களும் தமிழ்மரபுக்கவிதைக்குரிய மொழியோட்டமும் முக்கியமானவை. தமிழ்நவீனக்கவிதை படிமவியலை தன் முதன்மை அழகியலாகக் கொண்டது என்று சொல்லலாம். எஸ்ரா பவுண்ட் படிமவியல் நோக்கில் கவிதையை வரையறைசெய்து எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்து முன்வைத்த க.நா.சு.வில் இருந்து தொடங்கியது நவீனத் தமிழ்க்கவிதையின் இயக்கம்.

ஆகவே படிமச்செறிவே நவீனகவிதை என பொதுவாக அறியப்பட்டது. அப்படிமங்கள் ஒரு சொல்கூட அதிகமாக இல்லாத இறுக்கமான சொற்களில் முன்வைக்கப்படவேண்டும் என்றும், இசையற்ற கூற்றுமொழி அமையவேண்டும் என்றும், உணர்ச்சிகள் வெளிப்படவேகூடாது என்றும் அவ்வழகியல் வரையறுத்தது.

அந்தப் பொதுவரையறையை தன் இயல்பால் மீறிச்சென்றார் என்பதே விக்கிரமாதித்யனது கவிதையின் தனித்தன்மை. அவரது கவிமொழி மிக நெகிழ்வானது, சரளமானது. உள்ளோடும் இசை கொண்டது. அதற்கேற்ப அடுக்கி வரும் சொற்களால் ஆனது. நீட்டிச்சொல்லும் பேச்சுத்தன்மை கொண்டது. அத்துடன் பெரும்பாலும் படிமங்கள் இல்லாமல் நேரடியான கவிக்கூற்றையே கவிதையாக முன்வைத்தார் விக்ரமாதித்யன். அதுவே அவரது கவிதைகளின் தனித்தன்மை.

ஆகாயம்நீலநிறம் தொகுதியின் பலகவிதைகள் நேரடியாகவே பிச்சமூர்த்தியின் நடைக்கு அணுக்கமானவை. ஓர் உதாரணத்துக்காக விக்ரமாதித்யனின் தட்சிணாமூர்த்தியான என்னும் கவிதையையும் ந.பிச்சமூர்த்தியின் சாகுருவி என்னும் கவிதையையும் ஒப்பிட்டுப்பார்க்கலாம். செய்யுளுக்கு அணுக்கமான இசையொழுக்குள்ள அந்த நடை இருவருக்கும் பொதுவானது என்று அறியமுடியும். ந.பிச்சமூர்த்தியை நெருக்கமாக அடியொற்றி அன்று புதுக்கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர் வல்லிக்கண்ணன். வல்லிக்கண்ணனிடமிருந்து ந.பிச்சமூர்த்தி விக்ரமாதித்யனுக்கு கையளிக்கப்பட்டிருக்கலாம்.

மொழியில் மட்டுமல்ல படிமங்களின் அமைப்பிலும் விக்ரமாதித்யனின் ஆரம்பகட்டக் கவிதைகளில் பிச்சமூர்த்தியின் செல்வாக்கு தென்படுகிறது. கோணல்தென்னை போன்ற ஒரு படிமம் விக்ரமாதித்யனுக்கும் தோன்றக்கூடுவதே. ஆனால் மெல்லமெல்ல தீர்மானமாக அவர் ந.பிச்சமூர்த்தியிடமிருந்து விலகிச்செல்கிறார். நடையில் மட்டுமல்ல உளநிலையிலும் நகுலனை அணுகுகிறார். அந்த விலக்கம் அவரை வண்ணதாசன், வண்ண நிலவன், கலாப்ரியா ஆகியோரிடமிருந்தும் அகற்றியது. அவர்கள் எழுதிவந்த இதழ்களில் இருந்தும் அவர்கள் பேசிய சூழலில் இருந்தும் விலக்கிக் கொண்டுசென்றது. ந.பிச்சமூர்த்தி மரபார்ந்த, ஒழுக்கவாத நோக்கு கொண்ட, நவீனக் கவிஞர். அவருடையது நவீனஅத்வைத நோக்கு. விக்ரமாதித்யன் அவற்றுக்கு எதிரானவர்.

நகுலன் கவிதைகள் ஓர் அறிஞனால் எழுதப்பட்டவை. விக்ரமாதித்யனின் கவிதைகள் தன்னை பாமரனாக நிறுத்திக்கொண்ட கவிஞனால் எழுதப்பட்டவை. வீடுவிட்டிறங்காதவை நகுலன் கவிதைகள். வீடில்லாதவனால் எழுதப்பட்டவை விக்ரமாதியனின் கவிதைகள். உலகியல் அம்சமே இல்லாதவை நகுலனின் கவிதைகள். இங்கெங்கும் இல்லாத ஓர் அந்தர வெளியில், அறிவாந்த சிதைவு நிலையின் அகப்பரப்பில் நிகழ்பவை அவை. மாறாக, முற்றிலும் உலகியல் சார்ந்தவை விக்ரமாதித்யனின் கவிதைகள்.  கவிதையில் எப்போதும் தொடர்ச்சிகள் இவ்வண்ணமே அமைகின்றன. ஒருவேளை தன்னில் இல்லாத கூறுகளை நகுலனில் கண்டமையே விக்ரமாதித்யனை அவரை நோக்கி ஈர்த்திருக்கலாம்.

விக்ரமாதித்யனின் கவிதைகளில் வெளிப்படும் ஆன்மிகமான ஒரு தளம் அதை மேலும் ஆழம் கொண்டதாக ஆக்குகிறது. ஆனால் அதுவும் உலகியலுக்குள் அமைந்த ஆன்மிகமே. மெய்த்தேடல் என்பது ஒருவர் தன் இருப்பை உசாவி, அதைப் பொருள்கொள்ளும்படியாகப் பிரபஞ்சத்துடன் பொருத்திக் கொள்வது. இப்பிரபஞ்சத்திற்கு இருக்கும் மாபெரும் இருத்தல் பொருளுடன் தன் இருத்தலின் பொருளும் இணையும் ஓர் இசைவை அவன் கண்டடைவது. தான் என்று உணர்கையிலேயே அனைத்தும் என்று உணர்வது. அது என உணர்வதையே தான் என அறிவது. அதையே தரிசனம் என சொல்கிறோம். அதை கலையென்றும் கவிதையென்றும் அழகுறச் செய்யவும் ஆகும். தமிழ் புதுக்கவிதையில் நவீன ஆன்மீக விளக்க உரையாளர்களின் நேரடியான வரிகளையோ அவ்வரிகளின் பிறிதாக்கங்களையோ, நிழல் வடிவங்களையோ தொடர்ந்து காண முடியும். ஓஷோ தமிழ்க் கவிதைகளில் எங்குமென நிறைந்திருக்கும் ஒருவர். அடுத்தபடியாக ஜெ.கிருஷ்ணமூர்த்தி. ஜென் கவிதைகள் வழியாக பௌத்தம். ஜரோப்பிய மாற்று ஆன்மீக சிந்தனையாளர்கள் குர்ஜீஃப், கலீல் கிப்ரான். அத்தகைய எவருடைய ஒரு வரி கூட நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பிண்ணனி விசையாகவோ நிலை கொள்ளும் கவிதை இவர் படைப்புலகில் இல்லை. ஒரு வேளை தமிழில் அவ்வாறு முற்றிலும் அவ்வாறு எடுத்து அகற்றி வைக்கப்பட வேண்டிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையவை.

இலக்கிய அங்கீகாரம்

  • 2008ம் ஆண்டிற்கான விளக்கு விருது
  • 2014ம் ஆண்டிற்கான சாரல் விருது
  • 2021ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது (இந்நிகழ்வில் விக்ரமாதித்யனின் 19 வாசகர்கள் எழுதிய அவரின் கவிதை விமர்சனக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நாடோடியின் கால்தடன் என்ற பெயரில் விஷ்ணுபுரம் பதிப்பதகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது)

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

  1. ஆகாசம் நீலநிறம்  (1982)
  2. ஊரும் காலம்  (1984)
  3. உள்வாங்கும் உலகம் (1987)
  4. எழுத்து சொல் பொருள் (1988)
  5. திருஉத்தரகோசமங்கை (1991)
  6. கிரகயுத்தம் (1993)
  7. ஆதி (1997)
  8. கல் தூங்கும் நேரம் (2001)
  9. நூறு எண்ணுவதற்குள் (2001)
  10. வீடுதிரும்புதல் (2001)
  11. விக்ரமாதித்யன் கவிதைகள் (2001)
  12. பாதி இருட்டு பாதி வெளிச்சம் (2002)
  13. சுடலைமாடன் வரை (2003)
  14. தேவதைகள்-பெருந்தேவி-மோகினிப்பிசாசு (2004)
  15. சேகர் சைக்கிள் ஷாப் (2007)
  16. விக்ரமாதித்யன் கவிதைகள் - II

சிறுகதைத் தொகுப்பு

  1. திரிபு (1993)
  2. அவன்-அவள் (2003)
கட்டுரைத் தொகுப்பு
  1. கவிமூலம் (1999)
  2. கவிதைரசனை (2001)
  3. இருவேறு உலகம் (2001)
  4. தமிழ்கவிதை- மரபும் நவீனமும் (2004)
  5. தன்மை-முன்னிலை-படர்க்கை (2005)
  6. எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு (2007)
  7. எல்லாச் சொல்லும் (2008)
கடிதத் தொகுப்பு
  1. நகுலன் விக்ரமாதித்யனுக்கு எழுதிய கடிதங்கள்

உசாத்துணை

  1. https://thefederal.com/news/wanderer-poet-vikramadityan-wins-vishnupuram-award/
  2. https://www.jeyamohan.in/159790/
  3. https://lakshmimanivannan.blogspot.com/2021/06/blog-post.html?spref=fb&fbclid=IwAR3RqpsUrqZCcs_8nm5RdHN5PR7JZgNi9-PASb1t9UenbmaBrnpXFmxyho8
  4. https://www.vikatan.com/arts/literature/131533-interview-with-poet-vikramathithan
  5. https://sites.google.com/site/nambiraajan/home