வாசகர் வட்டம் (பதிப்பகம்)

From Tamil Wiki
Revision as of 08:07, 28 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "1964-65 காலகட்டத்தில் ”வாசகர் வட்டம்” என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நல்ல புத்தகங்களை வெளியிட்டார். அதற்காக 'புக்வெஞ்சர் பப்ளிகேஷன்ஸ்' என்ற பதிப்பகத்தை தன் கணவருடன் இண...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

1964-65 காலகட்டத்தில் ”வாசகர் வட்டம்” என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நல்ல புத்தகங்களை வெளியிட்டார். அதற்காக 'புக்வெஞ்சர் பப்ளிகேஷன்ஸ்' என்ற பதிப்பகத்தை தன் கணவருடன் இணைந்து உருவாக்கினார். தரமான புத்தக உருவாக்கம், வித்தியாசமான புத்தக முயற்சிகள், வாசகர்களுக்கான மலிவு விலை, எழுத்தாளர்களுக்கான உரிய வெகுமதி என பதிப்பகத்துறையை முறையாக நடத்தினார். ஆரம்பத்திலேயே தனிப்பட்ட சந்தாதாரர்களைச் சேர்த்து, வருடத்திற்கு 25 ரூபாய் கொடுப்பவர்களுக்குச் பதிப்பக வெளியீடுகள் சலுகை விலையில் வழங்கப்பட்டன. அப்படியாக வாசகர் வட்டம் வெளியிட்ட முதல் நூல் ராஜாஜி எழுதிய 'சோக்ரதர்: ஆத்ம சிந்தனைகள் 1965இல் வெளியானது. தரமான தாள், நேர்த்தியான அச்சு, உயர்தர பைண்டிங் முறை, தனித்துவமான முகப்போவியம், வடிவமைப்பு என எல்லாவற்றிலும் வாசகர் வட்ட நூல்கள் தனித்த முன்மாதிரியாக விளங்கின. முதல் நூலில் ஓவியர் 'கலாசாகரம்' ராஜகோபாலின் கோட்டோவியம் அட்டையில் இடம்பெற்றது . பின்னர் ஓர் அடையாளமாக அதுவே வாசகர் வட்ட வெளியீடுகள் அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. லட்சுமி தொடர்ந்து புது நூல்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் தொடராக வெளிவந்த நாவல்களை நூலாக வெளியிடுவதைத் தவிர்த்தார். சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளைத் தேடியெடுத்து வெளியிட்டார்.

தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', எம்.வி. வெங்கட்ராமின் 'வேள்வித் தீ, ஆ. மாதவனின் 'புனலும் மணலும்', நீல பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்', லா.ச. ராவின் 'அபிதா' போன்ற நூல்கள் வாசகர் வட்டத்திற்கென்றே எழுதப்பட்டன. திறமை வாய்ந்த எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களது முதல் படைப்பு வெளியாகவும் லட்சுமி உதவியாக இருந்தார். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட படைப்புகளில் நாசய்யாவின் 'கடலோடி', சா. கந்தசாமியின் 'சாயாவனம்' மாதவனின் 'புனலும் மணலும்', ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதியான 'குயிலின் சுருதி' ஆகியவை அடங்கும்.

'நடந்தாய்; வாழி, காவேரி' என்னும் கட்டுரை நூல் வாசகர் வட்டத்தின் முக்கியமான வெளியீடு. காவிரி ஆற்றின் கதையோடு சமூக வாழ்க்கையும் கலந்து சொல்லப்பட்ட அந்தப் படைப்பு தி. ஜானகிராமன், சிட்டி இருவரும் இணைந்து எழுதி 1971 ல் வெளியானது. காவிரி தோன்றுமிடம் தொடங்கி அது கடலில் கலக்கும் இடம்வரை உள்ள இடங்களைப்பற்றி மிக விரிவாகச் சொல்கிறது இந்நூல். எழுத்தாளர் ஜானகிராமன், ஓவியர் கலாசாகரம் ராஜகோபால் ஆகியோர் அந்தந்த இடங்களுக்கே நேரில் சென்று தங்கள் அனுபவங்களைத் தீட்டினர். ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியாக 'பிளாக்' செய்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அது ஓர் சமூக, வரலாற்று ஆவணம்.

இலக்கியம் தவிர தொழில்நுட்பம், விஞ்ஞானம், மானுடவியல், வரலாறு எனப் பல்துறை சார்ந்த நூல்கள் வாசகர் வட்டம் மூலம் வெளியாகின. 'அக்கரை இலக்கியம்' என்ற தலைப்பில் இலங்கை, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வாசகர் வட்டம் வெளியிடப்பட்ட தொகுப்பு நூல் முக்கியமான பதிவு. மறைந்த எழுத்தாளர் சுஜாதா கணினித் துறை பற்றி எழுதிய 'காசளவில் ஓர் உலகம்' என்ற நூல்தான் வாசகர் வட்டம் வெளியிட்ட கடைசி நூல். வாசகர் வட்டம் 45 நூல்களை வெளியிட்டது. காலம் செல்லச் செல்ல சந்தாதாரர்கள் குறைந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பதிப்பு நிறுத்தப்பட்டது. தமிழின் ஆரம்பகட்ட எழுத்தாளர்களில் ஒருவரான வை.மு.கோதைநாயகி அம்மாள் கூட தன்னுடைய புத்தகங்களை தானே பதிப்பித்து பதிப்புத்துறையில் செயல்பட்டார். ஆனால் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பிறரது நூல்களை பதிப்பித்து வெளியிட்டதால் முதல் பெண் பதிப்பாளராக நினைவுகூறப்படுகிறார்.

மொழிபெயர்ப்பு நூல்கள்

மிக முக்கியமாக மொழிபெயர்ப்பு நூல்கள் வாசகர் வட்டத்தின் மூலம் வெளியிட்டார். அந்தவரிசையில் லெஸ்டர் ப்ரஷன் ஆங்கிலத்திலே எழுதிய அறிவியல் நூல் தமிழில் 'அறிவின் அறுவடை' என்று வெளியானது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தமிழர் பண்பாடும் வரலாறும்' சிட்டியின் மொழிபெயர்ப்பில் வெளியானது. 'எட்வின் கண்ட பழங்குடிகள்' எனும் நூல் மனித இன வரைவியல் நூல்.