வழியாட்டம்

From Tamil Wiki
Revision as of 17:44, 1 April 2022 by Navingssv (talk | contribs) (Created page with "வழியாட்டம் கரகாட்டக் கலைஞர்களும், நையாண்டி மேளக் கலைஞர்களும் இரு அணிகளாகப் பிரிந்து போட்டியாக ஆடும் ஆட்டம். ஒரு அணி மற்ற அணிக்கு வழி தந்து ஆடுவதால் இப்பெயர் பெற்றது. இப்பெயர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வழியாட்டம் கரகாட்டக் கலைஞர்களும், நையாண்டி மேளக் கலைஞர்களும் இரு அணிகளாகப் பிரிந்து போட்டியாக ஆடும் ஆட்டம். ஒரு அணி மற்ற அணிக்கு வழி தந்து ஆடுவதால் இப்பெயர் பெற்றது. இப்பெயர் கலைஞர்களால் சூட்டப்பட்டதன்றி பார்வையாளர்களுக்கு இப்பெயர் தெரியாது.

நடைபெறும் முறை

கரகாட்டத்தின் துணையாட்டமாக நடைபெறும் இந்நிகழ்த்துக் கலையில் தவில்காரர்கள் இருவர், நாதஸ்வரக்காரர்கள் இருவர், பம்பைக்காரர் ஒருவர், தமுக்குக்காரர் ஒருவர், இரண்டு கரகாட்டக்காரப் பெண்கள், குறவன் குறத்தி வேடமிட்டவர் இருவர், கோமாளி ஒருவர் என மொத்தம் பதினோரு பேர் பங்கு கொள்வர். இவர்கள் இயல்பான ஒப்பனையுடனே இதில் நடிக்கின்றனர்.

இந்த பதினோரு கலைஞர்களும் இரண்டு அணியாகப் பிரிந்துக் கொள்வர். முதல் அணியில் இசைக்கலைஞர் மூவர், ஆட்டக்காரர் இருவர் என ஐந்து பேர் இருப்பர். இரண்டாம் அணியில் இசைக்கலைஞர் மூவர், ஆட்டக்காரர் மூவர் என ஆறு பேர் இருப்பர்.

இவ்விரு அணிகளும் எதிரும் புதிருமாக நிற்பர். ஒரு அணிக் கலைஞர் ஒரு பாடலை நாதஸ்வரத்தில் இசைப்பார். இது தெம்மாங்கு பண்ணில் அமையும். இப்பாடலைப் பாடிக் கொண்டே எதிரணியை நோக்கி வருவர். பாடிக் கொண்டிருக்கும் போதே பாடல் பாதியில் நிறுத்தப்படும். பின் எதிர் அணியினர் வேறு பாடலை இசைத்துக் கொண்டு முதல் அணிக்கு வழி விட்டு முன்னேறுவர். இவர்கள் தங்கள் பாடலை முதல் அணி இசைத்தது போல் இசைப்பதில்லை. இருவர் ஆட்டத்திலும் வேறுபாடு இருக்கும். அவ்வாறு நியதியையும் கட்டாயம் ஆக்கிக் கொண்டு ஆடுவர்.

நிகழும் ஊர்கள்

வழியாட்டம் இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், பட்டுக்கோட்டையின் சில பகுதிகளிலும் நடைபெறுகிறது.

நிகழும் இடம்

கரகாட்டம் நிகழும் நாட்டார் தெய்வக் கோவில்களில் இக்கலையும் நிகழ்த்தப்படுகிறது. இது பெரும்பாலும் பின்னிரவில் நிகழ்த்தப்படுகிறது. ஊர்வலம் செல்லும் வீதியிலோ, கோவிலின் முன் அரங்கிலோ இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்