வசனசம்பிரதாயக் கதை

From Tamil Wiki
Revision as of 17:10, 23 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "வசனசம்பிரதாயக் கதை (1775) நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயர். தமிழ் உரைநடைக்கும், கதைகூறல்முறைக்கும் உதாரணமாக அமையும் பழைய முறையிலான கதை. உரைநடையில் அமைந்தமையால் வசன சம்பிரதா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வசனசம்பிரதாயக் கதை (1775) நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயர். தமிழ் உரைநடைக்கும், கதைகூறல்முறைக்கும் உதாரணமாக அமையும் பழைய முறையிலான கதை. உரைநடையில் அமைந்தமையால் வசன சம்பிரதாயக்கதை என பெயர் பெற்றது. ஆனால் நவீன புனைகதைக்குரிய பண்புகளை அடையவில்லை. நாட்டார் வாய்மொழி இலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் நோக்கி வரும் வழியில் அமைந்த கதை இது என ஆய்வாளர் சிட்டி-சிவபாதசுந்தரம் வகுக்கிறார்கள்.

எழுத்து,பதிப்பு

1775ல் சிவகங்கை சமஸ்தான மன்னர் ரவிகுல முத்து வடுகநாத துரை தன் அவைக்கவிஞராகிய நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயரிடம் சிவராத்திரி அன்று தான் இரவு முழுக்க தூங்காமலிருக்கும்படி ஒரு கதை சொல்லும்படி கோரினார். முத்துக்குட்டி ஐயர் சொன்ன கதையை அட்டணைக்காரர்கள் எழுதிக்கொண்டனர். குபேரனுக்குக் குடிகள் விண்ணப்பம் செய்வதுபோல ஒரு கதையை முத்துக்குட்டி ஐயர் சொன்னார். அது 1895 ஆம் ஆண்டு திருவையாறில் வாழ்ந்த வைத்தியநாத பாரதி என்னும் அறிஞரிரால் ஓலைச்சுவடியில் இருந்து அச்சுக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கு வைத்தியநாத பாரதி சூட்டிய பெயர் வசனசம்பிரதாய கதை.

உள்ளடக்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழையில்லாமல் மக்கள் துன்பப்படுவதும், தெய்வங்களுக்கு பூஜைகள் செய்வதும், மழைபெய்து நெல்விளைந்து மக்களின் வாழ்க்கை செழிப்பதும் இந்த நூலின் உள்ளடக்கம். பெரும்பகுதி உருவகமாகவே சொல்லப்பட்டுள்ளது. “மேகணன் சேர்வைக்காரன் வருசகட்டளை கொடுத்துப் போகும்படி அச்சுதப்பெருமாளையங்கார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.ஆனால் ஒருவருஷம் வருஷ கட்டளை விசாரியாமலிருந்துவிட்டார். அப்போது மேகணன் சேர்வைக்காரன் உடன்படிக்கை தப்பி மறந்துவிட்டதென்னவென்று அடியேங்கள் விசாரித்தோம். மேகணன் சேர்வைக்காரனுக்கு மேல்காரியக்காரர்களான ஆதித்தமய்யன் என்றும் சோமசுந்தரய்யன் என்றும் இரண்டுபேருண்டு” இதில் மேகம், விஷ்ணு, சூரியன், சந்திரன் ஆகியோர் உருவகமாகச் சொல்லப்படுகிறார்கள்.

நவக்கிரகங்களின் சிக்கலால் மழைபெய்யவில்லை. ஆசிரியர்ம்கரியமாணிக்கமய்யன்( சனி) மங்களேஸ்வரய்யன் (செவ்வாய்) என ஆண்டு, திதி அனைத்தையுமே கதைக்குள் கதைமாந்தராகக் கொண்டுவந்துள்ளார்.

இலக்கிய இடம்

இந்நூல் 1775 ல் இந்தியாவை பெரும்பஞ்சம் பிடித்தாட்டிய காலத்தில் எழுதப்பட்டது. இந்தியப் பஞ்சம் பற்றிய இலக்கிய ஆவணங்களில் இது முக்கியமானது. சரவணையா எழுதிய மேழி விளக்கம்,  தச்சநல்லூர் வள்ளியப்ப பிள்ளை மகன் அழகிய சொக்கநாத பிள்ளை எழுதிய திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி 1927, சிவகங்கை சமஸ்தான வித்வான் பிரமனூர் ,மிராசு கணக்கு வில்லியப்ப பிள்ளை இயற்றிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம் போன்ற நூல்களின் வரிசையில் வைக்கப்படவேண்டியது இந்நூல்