வசனசம்பிரதாயக் கதை

From Tamil Wiki
Revision as of 17:24, 23 January 2022 by Jeyamohan (talk | contribs)

வசனசம்பிரதாயக் கதை (1775) நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயர். தமிழ் உரைநடைக்கும், கதைகூறல்முறைக்கும் உதாரணமாக அமையும் பழைய முறையிலான கதை. உரைநடையில் அமைந்தமையால் வசன சம்பிரதாயக்கதை என பெயர் பெற்றது. ஆனால் நவீன புனைகதைக்குரிய பண்புகளை அடையவில்லை. நாட்டார் வாய்மொழி இலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் நோக்கி வரும் வழியில் அமைந்த கதை இது என ஆய்வாளர் சிட்டி-சிவபாதசுந்தரம் வகுக்கிறார்கள்.

எழுத்து,பதிப்பு

1775ல் சிவகங்கை சமஸ்தான மன்னர் ரவிகுல முத்து வடுகநாத பெரிய உடையாத்தேவர் (1750-1780) தன் அவைக்கவிஞராகிய நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயரிடம் சிவராத்திரி அன்று தான் இரவு முழுக்க தூங்காமலிருக்கும்படி ஒரு கதை சொல்லும்படி கோரினார். முத்துக்குட்டி ஐயர் சொன்ன கதையை அட்டணைக்காரர்கள் எழுதிக்கொண்டனர். குபேரனுக்குக் குடிகள் விண்ணப்பம் செய்வதுபோல ஒரு கதையை முத்துக்குட்டி ஐயர் சொன்னார். அது கதையை முத்துக் குட்டி ஐயரிடம் வாய் மொழியாகக் கேட்டவர் அதைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். திருவையாறில் வாழ்ந்த இசைப் புலவர் குஞ்சர பாரதியின் சகோதரர் நாகுபாரதி என்பவர் முத்துக்குட்டி ஐயர் சொன்னபடியே இந்நூலை மனப்பாடமாக நினைவில் வைத்திருந்தார். அவர் மகன் வைத்தியநாத பாரதி அவரிடமிருந்து அக்கதை முழுதும் கேட்டுப் பிரதி செய்து தமது நண்பர் ராமசாமி தீட்சிதரின் உதவியுடன் வசன சம்பிரதாயக் கதை என்ற தலைப்பில் 1895ஆம் ஆண்டு திருவையாற்றில் வெளியிட்டார் என்று சிட்டி-சிவபாதசேகரம் குறிப்பிடுகிறார்.

ஆய்வாளர் பெருமாள் முருகன் இந்நூல் மறுபதிப்பான கதையை இவ்வாறு சொல்கிறார்*. ‘இந்த நூலைக் கண்டுபிடித்தவர் ஈழத்தைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்கள். கிரௌன் வடிவில் 76 பக்கங்களைக் கொண்டிருந்த இந்நூலை ஈழத்தில் பழைய புத்தகக் கடை ஒன்றில் சிதைந்த நிலையில் அவர் வாங்கினார். தம் உதவியாளரைக் கொண்டு உடனடியாகப் படி எடுத்தும் வைத்தார். மூலக்கதையை மட்டுமே அவ்வாறு எழுதி வைத்தார். அந்நூலில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாற்றுகவிகள், முன்னுரைகள் ஆகியவற்றைப் படி எடுக்க இயலவில்லை. அவரும் அவருடன் இணை சேர்ந்து நூல் எழுதுபவரான சிட்டி என்னும் பெ.கோ.சுந்தர்ராஜனும் இந்நூலைப் பதிப்பிக்க எண்ணி 1980ஆம் ஆண்டே முன்னுரை எழுதித் தயார் செய்துள்ளனர். ஆனால் நூல் வெளியிடப்படவில்லை. சிவபாதசுந்தரத்தின் இறப்பிற்குப் பிறகு அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்கி இந்நூலையும் சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் இணைத்துக் 'கண்டெடுத்த கருவூலம்' (வாணி பதிப்பகம், கோவை) என்னும் தலைப்பில் 2004ஆம் ஆண்டு சிட்டி அவர்கள் வெளியிட்டுள்ளார்.’ இந்நூலை சிவபாதசுந்தரம் கண்டெடுத்ததையும் அவர் வெளியிட முயன்று பின்னர் சிட்டி வெளியிட்டதையும் வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார். *

உள்ளடக்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழையில்லாமல் மக்கள் துன்பப்படுவதும், தெய்வங்களுக்கு பூஜைகள் செய்வதும், மழைபெய்து நெல்விளைந்து மக்களின் வாழ்க்கை செழிப்பதும் இந்த நூலின் உள்ளடக்கம். குபேர மகாராஜாஅவர்கள் சீர்பாதம் திக்கு நோக்கி தண்டம் பண்ணி… குடியான அனைவோரும் தண்டனிட்டு விண்ணப்பம்' என்பதே இதன் தொடக்கம். பெரும்பகுதி உருவகமாகவே சொல்லப்பட்டுள்ளது. “மேகணன் சேர்வைக்காரன் வருசகட்டளை கொடுத்துப் போகும்படி அச்சுதப்பெருமாளையங்கார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.ஆனால் ஒருவருஷம் வருஷ கட்டளை விசாரியாமலிருந்துவிட்டார். அப்போது மேகணன் சேர்வைக்காரன் உடன்படிக்கை தப்பி மறந்துவிட்டதென்னவென்று அடியேங்கள் விசாரித்தோம். மேகணன் சேர்வைக்காரனுக்கு மேல்காரியக்காரர்களான ஆதித்தமய்யன் என்றும் சோமசுந்தரய்யன் என்றும் இரண்டுபேருண்டு” இதில் மேகம், விஷ்ணு, சூரியன், சந்திரன் ஆகியோர் உருவகமாகச் சொல்லப்படுகிறார்கள்.

“அடியேங்களை இந்தப்படி வரிசைகுடிகளாக வைத்து ஆதரிக்கிற இராஜவர்க்கங்கள் மகாவிஷ்ணு பிம் பமென்கிறது சுபாவமே. அதுவல்லாமல் ஒருநிதானத்திலே எங்கள் துரையவர்கள் ஸ்ரீமது ராஜமானிய ராஜ ஸ்ரீ சிவகங்கை கர்த்தாக்கள் தங்களுக்கு அதிகமென்று சொல்லலாம். அதெப்படியென்றால் தாங்கள் ஆதி பரமேஸ்வரனை நோக்கித் தபசு பண்ணுகிறபோது போன கண்ணுக்குப் பொற்கண் வெகுமதி வாங்கினீர்கள். அடியேங்கள் துரையவர்கள் அந்தப் பரமேஸ்வரனுக்கு கண்ணுக்குக் கண்ணாயிருக்கிற சூரிய வங்கிஷத்திலே பிறந்தவர்களானதினாலே எங்கள் துரையவர்கள் அதிகம். ….”என்னும் பாணியில் உரையாடல்கள் அமைந்துள்ளன.

நவக்கிரகங்களின் சிக்கலால் மழைபெய்யவில்லை. ஆசிரியர்ம்கரியமாணிக்கமய்யன்( சனி) மங்களேஸ்வரய்யன் (செவ்வாய்) என ஆண்டு, திதி அனைத்தையுமே கதைக்குள் கதைமாந்தராகக் கொண்டுவந்துள்ளார்.

இலக்கிய இடம்

இந்நூல் 1775 ல் இந்தியாவை பெரும்பஞ்சம் பிடித்தாட்டிய காலத்தில் எழுதப்பட்டது. இந்தியப் பஞ்சம் பற்றிய இலக்கிய ஆவணங்களில் இது முக்கியமானது. சரவணையா எழுதிய மேழி விளக்கம்,  தச்சநல்லூர் வள்ளியப்ப பிள்ளை மகன் அழகிய சொக்கநாத பிள்ளை எழுதிய திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி 1927, சிவகங்கை சமஸ்தான வித்வான் பிரமனூர் ,மிராசு கணக்கு வில்லியப்ப பிள்ளை இயற்றிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம் போன்ற நூல்களின் வரிசையில் வைக்கப்படவேண்டியது இந்நூல்