ருக்மிணி தேவி அருண்டேல்

From Tamil Wiki
Revision as of 10:23, 30 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "ருக்மிணி தேவி அருண்டேல் (பிப்ரவரி 29, 1904 – பிப்ரவரி 24, 1986) நடனக் கலைஞர். ”கலாஷேத்ரா” நடனப் பள்ளியை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டிய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ருக்மிணி தேவி அருண்டேல் (பிப்ரவரி 29, 1904 – பிப்ரவரி 24, 1986) நடனக் கலைஞர். ”கலாஷேத்ரா” நடனப் பள்ளியை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில செயல்பட்டவர்.

பிறப்பு, கல்வி

ருக்மிணி தேவி பிப்ரவரி 29, 1904இல் நீலகண்ட சாஸ்திரி, சேஷம்மாள் இணையருக்கு மகளாக மதுரையில் பிறந்தார். பிறந்தார். ருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெஸண்ட் துவக்கிய தியசோஃபிக்கல் சொஸைட்டியில் ஈடுபாடு கொண்டதால் பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

தியசோஃபிக்கல் சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில் நடந்த கலை நிகழ்ச்சிகள் ருக்மிணி கலந்து கொண்டார். ருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். பாடல் பாடினார். தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். கிரேக்க நடனமும் கற்றார்.

தனி வாழ்க்கை

இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னிபெசன்ட் 1920இல், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை அழைத்தார். அன்னிபெசன்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், உருக்மிணியும் கலந்து கொண்டனர். ருக்மிணினி தன் பதினாறாம் வயதில் ஜார்ஜ் சிட்னி அருண்டேலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார்.

கலை வாழ்க்கை

திருமணத்திற்குப்பின் ஐரோப்பாவில் இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு ருக்மிணியை கேட்டுக்கொண்டதற்கிணங்க அதில் ஈடுபாடு கொண்டார். சென்னை மியூசிக் அகாடமியில், 1933இல் கிருஷ்ண அய்யர் ஏற்பாடு செய்த தேவதாசி சதிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ருக்மிணிக்கு அதன் மீது ஈடுபாடு வந்தது. தேவதாசிகள் மட்டுமே கற்க முடிந்த கலை என்ற எதிர்ப்பைத்தாண்டி அதைக் கற்றார். அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மாவிடம் சதிர் ஆட்டம் கற்றார். ருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார். ருக்மிணி நாட்டியத்தில் பயிற்சி பெற்று 1935இல் தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அரங்கேற்றம் செய்தார். ருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது.

சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டியது என்பதை வலியுறுத்தினார். ருக்மிணி இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார். அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது என்று நினைத்தார். தேவதாசிகள் மட்டும் பயின்று, சமூகத்தில் அக்கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது இழுக்கு என்ற நிலையினை மாற்றியதில் பெரும் பங்கு உருக்மிணிக்கு உண்டு. அதுவரை சதிராட்டம் சிருங்கார இரசம் அதிகம் நிறைந்து, பார்வையாளர்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. உருக்மிணி, அந்த தளத்திலிருந்து மேலெழுந்து, ஆன்மிகத்தன்மையினையும் வெளிப்படுத்தி அக்கலையினை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அனுபவிக்கவும் வழிசெய்தார்.

தேவதாசிகள் சதிராடிய போது, சேலையும், தொள தொளவென்ற கால்சட்டையும், அழகான நகைகள் பலவற்றையும் அணிந்திருந்தனர். மேலும் இவர்கள் ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் இவர்கள் பின் தொடர்ந்து நின்றோ/நடந்தோ கொண்டிருந்தனர். இந்த நிலையில், நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக உருக்மிணி கருதினார். அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்தார். பக்கவாத்தியக்காரர்களையும், பாடுபவர்களையும் மேடையில் ஒர் இடத்தில் அமருமாறு செய்தார். பாரம்பரிய சிற்பக் கலைகளின் உதவியாலும், இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியாலும் புதுவித உடைகளையும், ஒப்பனையும் செய்தார். அதைப் போலவே, மேடையின் பின்புலத்தினை மாற்றி, பிரோஸினியம் (மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் மூடிய) வகையான மேடைதான் நாட்டியத்திற்கு சிறந்தது என்று மேடையினை மாற்றினார். கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால் மேடையின் ஒளியமைப்பினையும் மாற்றினார். உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார்.

வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார்.

அரசியல் வாழ்க்கை

ருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார். 1977இல், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.

பிற

ருக்மிணி, இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் முழுமையான ஆர்வம் கொண்டிருந்தார். 1937 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. கமலாதேவி சட்டொபத்யாயவின் உதவியோடு, துணிகளுக்கு இயற்கையான சாயங்களை பயன்படுத்தும் முறையினை பயின்றார். அதோடு இல்லாமல் கலம்கரி என்ற துணிகளில், சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளையும் ஊக்குவித்தார்.

விருதுகள்

  • பத்ம பூஷண் விருது
  • காளிதாஸ் சம்மன் விருது
  • சங்கீத நாடக அகாதமி விருது, வழங்கியது: சங்கீத நாடக அகாதமி
  • 1977இல் மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார்.

2016ல், கூகிள் நிறுவனம், உருக்மணி தேவியின் 112 வது அகவையை தமது முதற்பக்கக் கிறுக்கல் படத்தின் வாயிலாக அங்கீகரித்தது

மறைவு

பிப்ரவரி 24, 1986இல் உருக்மிணி இறந்தார்.

உசாத்துணை

  • ருக்மிணி தேவி அருண்டேல்: தினமணி