standardised

ராஜ் கௌதமன்

From Tamil Wiki
Revision as of 18:39, 5 April 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
MG 7004.jpg

ராஜ் கௌதமன் (ஆகஸ்ட் 25, 1950), தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர். பேராசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்க முயன்றவர். தமிழ் இலக்கிய வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற விளக்கு மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகளைப் பெற்றவர்.

பிறப்பு, இளமை

ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். ஆகஸ்ட் 25, 1950-ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011-ல் ஓய்வு பெற்றார். தற்போது நெல்லையில் வசிக்கிறார்.

குடும்பம்

மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா.

இலக்கிய பங்களிப்பு

ஆய்வுகள்

அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்கள் முக்கியமானவை.

எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள்.

தலித்தியம்

இங்குள்ள அனைவரும் அரசியல், மதம், பொருளாதாரம் என ஏதோவொன்றால் ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களை மீட்டெடுக்கத் தேவையான கருத்தியலை உள்ளடக்கியதுதான் தலித்தியம் என்ற விளக்கத்தை அளித்துவிட்டு, அவற்றை மிகத்தெளிவாக பின்வருமாறு வகைமைப்படுத்தியுள்ளார் ராஜ் கௌதமன்:

  1. சாதி ஒழிப்பை மையமாகக் கொண்ட இடதுசாரி வகை
  2. தமிழ் மொழி அல்லது இனம் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த வகை
  3. அரசின் சலுகைகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மிதவாத வகை
  4. சமஸ்கிருதமயமாதல் என்ற இந்து மதத்திலுள்ள சாதிய ஏறுவரிசையில் ஏறிச் செல்லும் வகை.
நாவல்கள்

ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள்.

இலக்கிய முக்கியத்துவம்

நவீன காலகட்டத்திற்கேற்ப தமிழ் இலக்கிய மரபை மறுவரையறை செய்தவர்களில் முக்கியமான ஒருவர் ராஜ்கௌதமன். இக்கால கட்டத்தில் உருவாகி வந்த, இவ்வரையறைக்கான கோட்பாடுகளை பின்வரும் மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும்:

  1. இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும்.
  2. என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தைய கோட்பாட்டின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் மார்கசியப் பார்வை கொண்டவை.
  3. ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இக்கோட்பாடாகும். ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் தமிழில் எண்பதுகளில் உருவாகி வந்தன.

முதலிரண்டு கோட்பாடுகளின் முன்னோடிகளாக முறையே பி.டி.சீனிவாச அய்யங்காரையும், க.கைலாசபதி அவர்களையும் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் ஜெயமோகன், மூன்றாவது கோட்பாட்டின் முன்னோடியாக ராஜ் கௌதமன் அவர்களை குறிப்பிடுகிறார்.

தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என சொல்லமுடியும்.

விருதுகள்

  • விளக்கு விருது (2016)
  • விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2018)

படைப்புகள்

ஆய்வு நூல்கள்
  1. க.அயோத்திதாசர் ஆய்வுகள்
  2. பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்
  3. ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்
  4. தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,
  5. அறம் அதிகாரம்
  6. அ.மாதவையா
  7. தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
  8. கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.
  9. கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.
  10. ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்
நாவல்கள்
  1. சிலுவைராஜ் சரித்திரம்
  2. காலச்சுமை
  3. லண்டனில் சிலுவைராஜ்
மொழிபெயர்ப்புகள்
  1. உயிரினங்களின் தோற்றம் - சார்லஸ் டார்வினின் 'The Origin of species'
  2. மனவளமான சமுதாயம் - எரிக் ஃப்ராமின் 'The Sane Society'
  3. பாலற்ற பெண்பால் - ஜெர்மெய்ன் கரீரின் 'The Female Eunuch'
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  1. Dark Interiors: Essays on Caste and Dalit Culture - Translator 'Theodore Baskaran', SAGE Publications Pvt. Ltd, 2021

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.