ராஜேஸ்வரி அம்மையார்

From Tamil Wiki
Revision as of 19:05, 8 March 2022 by Thirumalai.p (talk | contribs) (ராஜேஸ்வரி அம்மையார்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நன்றி- தமிழம்.நெட்

ராஜேஸ்வரி அம்மையார் (ஈ. த. இராசேசுவரி அம்மையார், இராசேசுவரி அம்மையார், இ. டி.) (அக்டோபர் 18, 1906 - மார்ச் 1, 1955) என்ற இவர் அறிவியல் எழுத்தாளர்களில் முன்னோடியாக அறியப்படுகிறார். மேலும் இவர் சைவ சித்தாந்த சொற்பொழிவாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

இவர் அக்டோபர் 18, 1906 ஆம் ஆண்டு ஈ. ந. தணிகாசல முதலியாரின் இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவர் தமிழ் கல்வியையும், ஆங்கிலத்தையும் கற்று, ஆங்கிலத்தில் எம். ஏ பட்டமும் பின் சென்னை லேடி வில்லிங்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பி.டி பட்டமும் பெற்றார்.

இவர் 1925 ஆம் ஆண்டு சென்னை இராணி மேரிக் கல்லூரியில் அறிவியல் துணைப்பேராசிரியராக பணியில் அமர்ந்தார். பின் 1946 ஆம் ஆண்டு சென்னை லேடி வில்லிங்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் அறிவியல் துணைப்பேராசிரியராகவும், 1953 ஆம் ஆண்டு இராணி மேரிக் கல்லூரியின் பௌதிகத் துறையின் துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார்.

வானக்குமிழி.png

பங்களிப்பு

நூல் வெளியீடு

இவர் சூரியன் என்ற அறிவியல் நூலை எழுதி வெளியிட்டார். இது தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டைப்பெற்றது. இந்நூல் பி. ஏ பட்டப்படிப்பிற்கு பாடமாக பல தென்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்தது. இவரின் வானக்குமிழி என்ற நூலும் இதுபோல் பாடமாக இருந்தது. இவரின் குழவியுள்ளம் என்ற நூலும் குறிப்பிடத்தக்க வாசக கவனத்தைப்பெற்றது. இது தமிழக அரசின் பரிசையும் வென்றது.

இவர் எழுதி தருமபுரம் ஆதினத்தின் வெளியீடாக வந்த ஐன்ஸ்டீன் கண்ட காட்சி மற்றும் 1953 இல் பரமாணுப் புராணம் என்ற நூலும் பெரும் வாசக கவனத்தைப்பெற்றது. இரண்டாம் நூல் அணுவின் ஆற்றலைப்பற்றியும், அதை அறிந்தவர்களின் வரலாற்றையும் விளக்குகின்றது.

சொற்பொழிவாளர்

இவர் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் தன் அறிவியல் சொற்பொழிவுகளை ஆற்றி பெரும் புகழ் பெற்றார். இவர் சென்னையின் புகழ் பெற்ற சபைகளிலும், கழகங்களிலும் சொற்பொழிவாற்றியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இவர் சென்னை சைவ சித்தாந்த சபைகளில் பலமுறை சொற்பொழிவாற்றியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

கல்வித்தொண்டு

இவர் சிந்தாதிரிப் பேட்டை நடுநிலைப் பள்ளியின் துணைத்தலைவராகவும், உயர் நிலைப்பள்ளியில் பல பணிகளைச் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

மறைவு

இவர் மார்ச்சு, 1 1955 ஆஂம் ஆண்டு தமது 48 வது வயதில் மறைந்தார்.

உசாத்துணை

தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம்