under review

ரசூல் பீவி

From Tamil Wiki
Revision as of 10:59, 17 January 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ரசூல் பீவி (தென்காசி ரசூல் பீவி) (ஞானியம்மா) (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி) இஸ்லாமிய சூஃபி கவிஞர். இல்லற வாழ்க்கையில் கணவருடன் இணைந்து துறவு வாழ்க்கை மேற்கொண்டு ஞானப்பாடல்கள் பல இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ரசூல் பீவி 1910-ம் ஆண்டு அன்றைய திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் முகம்மது லெப்பை என்பவரின் மகளாகப் பிறந்தார். இவரது கணவர் பரிமளத்தார் என்று அழைக்கப்பட்ட புலவர் ஞானி முகம்மது காசிம் சாகிபு. கணவர் ஒரு இஸ்லாமிய ஞானி மற்றும் கவிஞர். மகன் முகமதப்பா.

ஆன்மிகம்

ரசூல் பீவி இல்லறத் துறவியாக வாழ்ந்தார். ரசூல் பீவியும் அவர் கணவரும் இணைந்து ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. இவருக்குக் கேரளத்தில் திருவனந்தபுரம், தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களிலும் கடல்கடந்து இலங்கை வரையிலும் சீடர்கள் இருந்தனர். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இவருக்குச் சீடர்களாக இருந்தனர். ஞானியம்மா என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

ரசூல் பீவி சூஃபிக் கவிஞராக ஞானப்பாடல்கள் பல புனைந்தார்.‘ஞானாமிர்த சாகரம்' என்ற நூல் தென்காசி ராமானுஜ அச்சுக் கூடத்தில் உருவான பழம்பதிப்பு ஒன்றில் உள்ளது. ரசூல் பீவியின் 'ரகுமான் கண்ணி', 'பீர்முறாது கண்ணி', 'குருபரக் கண்ணி', 'அம்மானை', 'கப்பல் சிந்து' முதலான பாடல்களில் சித்தர்களின் சிந்தனைகளின் சாயல் தென்படுகிறது.

ரசூல் பீவியின் பாடல்களில் தன்னை அறிவற்ற பாவி, உடலெடுத்த பாவி, அடிமைக் குடியாள் என்று தன்னையே தாழ்த்திப் பாடல்கள் புனைந்தார். ரசூல் பீவி பாடிய கப்பல் சிந்து, தன்னையே கப்பலாக உருவகித்துப் பாடிய பாடல்களாகும். இப்பாடல்களில் சைவ மரபின் ஒளிச்சேர்க்கைகள் உள்ளன. தன்னுடைய கணவர் பரிமளத்தாரோடு கருத்தொருமித்து வாழ்ந்த இல்லற வாழ்க்கை, மரணத்துக்குப் பின்னரும் தொடர வேண்டும் என்று இறைவனைப் பல பாடல்களில் வேண்டினார்.

பாடல் நடை

  • கப்பல் சிந்து

காலனைக் கொன்று காலூன்றி வருங் கப்பல்
காமனை வென்று கடைத்தேறி வருங் கப்பல்
மூலக்கனல் வாரி மூட்டி வரும் கப்பல்
குண்டலினிப் பாம்பினைக் கொண்டுவரும் கப்பல்
கோலமெனும் குருவீட்டைக் கொண்டுவரும் கப்பல்

நூல் பட்டியல்

  • ஞானாமிர்த சாகரம்
  • ரகுமான் கண்ணி
  • பீர்முறாது கண்ணி
  • குருபரக் கண்ணி
  • அம்மானை
  • கப்பல் சிந்து

உசாத்துணை


✅Finalised Page