யாழ்நூல்

From Tamil Wiki
Revision as of 21:35, 26 February 2022 by Jeyamohan (talk | contribs)

யாழ்நூல் (1947) விபுலானந்த அடிகள் எழுதிய இசைநூல். தொல்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டு இன்று வழக்கொழிந்துள்ள இசைக்கருவியான யாழ் தமிழ் இசையின் அடிப்படைக் கருவி என வகுத்துக் கொண்டு, வெவ்வேறு நூல்குறிப்புகளில் இருந்து யாழின் வடிவத்தை உருவாக்கி, அதன் இசையிலக்கணங்களையும் வகுத்துரைக்கும் நூல். கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட பெரிய நூல் இது.

உருவாக்கம்

விபுலானந்த அடிகள் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், எஸ்.இராமநாதன், கு.கோதண்டபாணி,அ.இராகவன், வரகுண பாண்டியன், குடந்தை சுந்தரேசனார் ஆகியோருடன் இணைத்து பார்க்கப்படும் இசைநிபுணர். தொல்காப்பியம் நிலத்திற்கு ஒரு பண்ணிசைக்கருவியாக யாழையே குறிப்பிடுகிறார்.சங்க இலக்கியங்களிலும் பிற்கால பக்தியிலக்கியங்களிலும் யாழ் தமிழிசையின் முதன்மைக் கருவியாகக் குறிப்பிடப்படுகிறது. அந்த யாழ் எங்கும் புழக்கத்தில் இல்லை. அது என்னவாயிற்று என்று தேடிய விபுலானந்த அடிகள் தன் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருத அறிவு, இசையறிவு மற்றும் கணித அறிவைக்கொண்டு இந்நூலை 1947ல் எழுதினார்

பதிப்புகள்

1947ல் இந்நூல் கரந்தை தமிழ்ச்சங்கம் சார்பில் கோனூர் ஜமீன்தார் பெ.ராம.ராம.சித.சிதம்பரம் செட்டியார் நிதியுதவியுடன் கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் ஆ.யா.அருளானந்தசாமி நாடார் வெளியிடப்பட்டது. இந்நூலின் முதல் பதிப்புக்கு 1947ல் நீ.கந்தசாமி முன்னுரை வழங்கியிருக்கிறார்.

இரண்டாம் பதிப்பு 1974 ல் கரந்தை தமிழ்ச்சங்க தலைவர் செ.பெத்தண்ணனால் தமிழறிஞர் வெள்ளைவாரணனார் பாயிரத்துடன் வெளியிடப்பட்டது.

மூன்றாம் பதிப்பு 2003 ல் கனடாவின் மறுமொழி ஊடக வலையம் அமைப்பால் அதன் நிறுவனர் த.சிவதாசனால் வெளியிடப்பட்டது. இசைநிபுணர் நா.மம்முது இந்த மூன்றாம் பதிப்புக்கு விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார்.

சிறப்புப் பாயிரம்

இந்நூலுக்கு புலவர் வெள்ளைவாரணனார் அளித்த சிறப்புப் பாயிரம் இவ்வாறு தொடங்குகிறது.

உலகமெலாம் களிகூர ஒளிதமிழின் இயல் வளர

இலகு தமிழிசை வழக்கே எம்மருங்கும் வளர்ந்தோங்க

புலவர் உளமகிழ்கூர யாழ்நூல் செய் புலவர்பிரான்

மலரடி என் சென்னியினும் மனத்தகத்தும் மலர்ந்துளவால்

தொடர்ந்து 42 செய்யுள்களால் அமைந்த நீண்ட சிறப்புப் பாயிரம்

வாழி தமிழர் வளர்புகழால் ஞாலமெலாம்

ஏழிசைதேர் யாழ்நூல் இசைபரப்பி - வாழியரோ

வித்தகனார் எங்கள் விபுலானந்தர் பெயர்கொள்

அந்தனார் தாள் எம் அரண்

என முடிவடைகிறது. வெள்ளைவாரணனார் விபுலானந்தரின் மாணவரும்கூட

உள்ளடக்கம்

யாழ்நூல் ஏழு பகுதிகளாக அமைந்துள்ளது

  • பாயிரவியல்
  • யாழ் உறுப்பியல்
  • இசை நரம்பியல்
  • பாலைத்திரிபியல்
  • பண்ணியல்
  • தேவார இயல்
  • ஒழிபியல்
பாயிர இயல்

இசை நரம்புகளின் பெயரும் முறையும் பற்றிப் பேசுகிறது. ஏழு சுவரவரிசைகளை வகுத்துரைக்கிறது. (உழை, இழி,விளரி,தாரம்,குரல்,துத்தம், கைக்கிளை)

யாழ் உறுப்பியல்

ஐந்து வகை யாழ்கள் பற்றியும் அவற்றின் அமைப்பு பற்றியும் ஆராய்கிறார்.(வில்யாழ்,பேரியாழ்,சீறியாழ்,செங்கோட்டுயாழ், சகோட யாழ்)

பாலைத்திரிபியல்

தொல்காப்பியரின் கூற்றில் இருந்து யாழில் பிறக்கும் பெரும்பாலை மற்றும் கிளைபண்களை ஆய்வுசெய்கிறார்.அவற்றை ஐவகை நிலங்களுடன் தொடர்பு படுத்தும் பகுதி இது.

பண்ணியல்

ஏழு பெரும்பாலைகளுக்கு நிகரான இன்றைய பண்கள் அல்லது இராகங்களைச் சொல்கிறார்.

  • செம்பாலை- நிலம் முல்லை- அரிகாம்போதி
  • படுமலைப்பாலை- நிலம் குறிஞ்சி- நடபைரவி
  • செவ்வழிப்பாலை- நிலம் நெய்தல்- இரு மத்திமைத் தோடி
  • அரும்பாலை- நிலம் பாலை- சங்கராபரணம்
  • கோடிப்பாலை- நிலம் மருதம், கரகரப்ரியா
  • விளரிப்பாலை- நிலல் நெய்தல்- தோடி
  • மேற்செம்பாலை - நிலம் மருதம் - கல்யாணி
தேவார இயல்

பழந்தமிழ் இசை பிற்கால பண்ணிசையாக ஆனதை ஆராயும் பகுதி

ஒழிபியல்

தொகுப்புக் கூற்று. இதில் பண்களை கணிதமுறைப்படி வகுக்கிறார்.

பண்பாட்டு இடம்

நா.மம்முது இந்நூலின் சிறப்பை இவ்வாறு தொகுத்துச் சொல்கிறார்.

  • யாழ் எனும் பழங்கருவியை மீட்டுக் கொண்டு வந்தது
  • ஏழுபெரும்பாலைகளுக்கு இணையாக இன்றுள்ள ராகங்களை காட்டியது
  • குரல் திரிபு முறையில் பண்ணுப்பெயர்ப்பு முறைகளை சிலம்பின் வழிநின்று நெறியாகக் கூறியது
  • தேவார இசை ஆய்வு
  • இசைக்கணித ஆய்வு

பதினாறாம்நூற்றாண்டு முதல் தமிழிசை தன் மரபுடனான தொடர்பை இழந்து வெவ்வேறு இசைமரபுகளுடன் கலந்து கர்நாடக இசையாக மாறி நீடிக்கிறது. இன்னொரு பக்கம் பண்ணிசை தேவார இசையாக தேக்கமுற்றது. கர்நாடக இசை என்பது தமிழிசையின் மருவிய வடிவமே என்றும், தமிழிசையே இந்தியாவின் தொன்மையான இசை என்றும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் போன்றவர்கள் கூறினர். இசைமரபுகள் அறுந்துவிட்ட நிலையில் முழுக்கமுழுக்க இலக்கியச் சான்றுகள் மற்றும் கணிதமுறைகளைக் கொண்டே அக்கொள்கையை நிறுவினர். அவ்வாறு தமிழிசையின் அடிப்படைகளை அமைத்த பெருநூல்களில் ஒன்று யாழ்நூல்

உசாத்துணை