under review

யாப்பருங்கலம்

From Tamil Wiki
Revision as of 10:17, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

யாப்பருங்கலம் (பொ.யு. 11-ம் நூற்றாண்டு) தொல்காப்பியத்துக்குப் பின்னர் வந்த செய்யுள் இலக்கண நூல்களுள் குறிப்பிடத்தக்கது. இதை இயற்றியவர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர். இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது.

ஆசிரியர்

யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் அமிதசாகரர். இவர் பெயர் அமுதசாகரர், அமிர்த சாகரர் எனவும் வழங்கப் படுகிறது. அமிதசாகரர் என்பது அளப்பரிய கடல் என்றும் அமிர்தசாகரர் என்பது அமுதக்கடல் எனவும் பொருள்தரும். இதனை, ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோனே’ என்னும் காரிகை நூலின் பாயிர அடியினால் அறியலாம். அருகக்கடவுளை வழிபட்டவர் என்பதை, கீழ்க்கண்ட பாயிர முதல் செய்யுள் கூறுவதால் இவர் சமணர் என்று அறியலாம்.

முழுதுல கிறைஞ்ச முற்றொருங்‌ குணர்ந்தோன்‌
செழுமலர்ச்‌ சேவடி செல்விதின்‌ வணங்கிப்‌
பாற்படு தென்றமிழ்ப்‌ பரவையின்‌ வாங்கி
யாப்பருங்‌ கலம்நனி யாப்புற வகுத்தோன்‌
தனக்குவரம்‌ பாகிய தவத்தொடு புணர்ந்த
குணக்கடற்‌ பெயரோன்‌ கொள்கையின்‌ வழாஅத்‌
துளக்கறு கேள்வித்‌ துகள்தீர்‌ காட்சி
அசாப்பருங்‌ கடற்பெயர்‌ அருந்தவத்‌ தோனே

அமிதசாகரர் காலம் பொ.ய., 10-ம் நூற்றாண்டு. பொ.யு 11-ம் நூற்றாண்டில் வீரசோழியம் எனும் நூலை இயற்றிய புத்தமித்திரனாருக்குக் காலத்தால் முற்பட்டவர். யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். அமிதசாகரர் யாப்பருங்கலத்தின் சுருக்கமாக(வழி நூலாக) யாப்பருங்கலக்காரிகை என்ற யாப்பியல் நூலையும் எழுதினார்.

பதிப்பு

  • யாப்பருங்கல முலம்‌, நரசிங்கபுரம்‌ வீராசாமி முதலியார்‌ பதிப்பு, இயற்றமிழ்‌ விளக்க அச்சுக்கூடம்‌ (1914)
  • யாப்பருங்கல மூலம்‌ (பழைய விருத்தியுரையுடன்‌), பவானந்தம்‌ பிள்ளை பதிப்பு, பகுதி-1(1916) பகுதி-2(1917)
  • யாப்பருங்கலம்‌ (பழைய விருத்தியுரையுடன்‌),-மே, வீ. வேணு கோபாலப்‌ பிள்ளை பதிப்பு, அரசுக்‌ கீழ்த்திசைச்‌ சுவடி நூலக வெளியீடு, (1960)
  • இளங்குமரனார் பதிப்பு திருநெல்வேலி ய சைவசித்தாந்த நூற்பதிப்புக்‌ கழகம்‌ (1970)
  • யாப்பருங்கலம்‌ (பழைப விருத்தியுரையுடன்‌), மே. வீ. வே. பதிப்பின்‌ மறுபதிப்பு, உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌.(1998).

நூல் அமைப்பு

யாப்பருங்கலம் என்பதற்கு கடல்போன்ற யாப்புப்‌ பரப்பைக்‌ கடக்க உதவும்‌ சுலம்‌ போன்றது என்றும் அருங்கல அணிகளைக்‌ கோத்தமைப்பதைப்‌ போல யாப்புச்‌ செய்திகளைக்‌ கோத்தமைத்த நூல்‌ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்நால்‌ உறுப்பியல்‌, செய்யுளியல்‌, ஒழிபியல்‌ என்னும்‌ மூன்று இயல்களைக் கொண்டது.

கடவுள் வணக்கம் நீங்கலாக,யாப்பருங்கலத்தின் மொத்த நூற்பாக்கள் தொண்ணூற்றாறு. மொத்த அடிகள் 222. அனைத்தும் அளவடிகள், தனிச்சொல் ஒன்றுறேனும் இல்லாத அகவல் அடிகளால் அமைந்த நூற்பாக்கள்.

உறுப்பியல்

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய பாவுறுப்புகளின்‌ இலக்கணம் உறுப்பியலில் கூறப்படுகிறது. ,

  • எழுத்து ஓத்து
  • அசை ஓத்து
  • சீர் ஓத்து
  • தளை ஓத்து
  • அடி ஓத்து
  • தொடை ஓத்து
செய்யுளியல்
  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • கலிப்பா
  • வஞ்சிப்பா

நால்வகைப்‌ பாக்கள்‌, தாழிசை, துறை, விருத்தம்‌ எனும்‌ அவற்றின்‌ மும்முன்றினங்கள்‌ ஆகியவற்றின்‌ இலக்கணமும்‌ இத்நூலின்கண்‌ இடம்பெற்றுள்ளன.

ஒழிபியல்

ஒழிபு என்பது ஒழிந்தது, நீங்கியது, விடுபட்டது எனப் பொருள் தரும். உறுப்பியலிலும் செய்யுளியலிலும் சொல்லாது விடுபட்டவற்றை மொத்தமாகத் தொகுத்துத் தருவதுதான் ஒழிபியல். ஒழிபியலில் மூன்று வகையான இலக்கணக் கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.

  • முதலிரண்டு இயல்களில் சொல்லப்படாமல் விடுபட்டவை.
  • முன்பு சொல்லப்பட்டவற்றிற்குப் புறனடையாக, வேறுபட்டு வரும் கருத்துகள்.
  • இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கருத்துகள்

ஒழிபியலில் மூன்று நூற்பாக்கள் தனிச்சொல், புறநடை, சித்திரக்கவி பற்றியவை.

யாப்பருங்கல விருத்தியுரை

யாப்பருங்கல விருத்தி அல்லது யாப்பருங்கல விருத்தியுரை யாப்பருங்கலத்துக்கு எழுதப்பட்டுள்ள விரிவுரை. இந்த உரைநூல் எழுதியவர் பெயர் தெரியவில்லை. பதிப்புநூல் இந்த உரையைப் பழைய உரை எனக் குறிப்பிடுகிறது. இந்த உரைநூலின் காலம் 11-ம் நூற்றாண்டு. விருத்தியுரை யாப்பிலக்கணம் பற்றி ஆசிரியர் கூறும் செய்திகளை மட்டும் கூறாமல் அச்செய்திகளோடு தொடர்புள்ள பிற செய்திகளையும் ஒப்பிட்டுக் காட்டிக்கொண்டு செல்கிறது. இதன் பயனாக அக்காலத்தில் பயன்பாட்டிலிருந்த பல நூல்களையும், நூலாசிரியர்களையும் அறியமுடிகிறது.

உரையாசிரியர் 90-க்கும் மேற்பட்ட நூல்களைத் தம்முடைய உரையில் சுட்டியுள்ளார். தமிழ் யாப்பிலக்கணப் பரப்பை உணர்வதற்கும் இவ்வுரை துணைசெய்கிறது. உரையாசிரியர், நூற்பாக்களுக்கு எடுத்துக் காட்டுகின்ற பாடல்கள் 1000-க்கும் மேற்பட்டவை. இவருடைய உரையிலிருந்து ‘மேற்கோள் நூற்பா அகர வரிசை’ என்ற தனித்த நூலைப்பதிப்பதற்கு ஏற்ற வகையில் விரித்து உரைக்கிறது.

சிறப்புகள்

யாப்பருங்கலம் தொல்காப்பியத்திற்குப் பின்னர் தமிழில் தோன்றிய பாக்கள் பாவினங்களின் வளர்ச்சியை உணர்த்துகிறது. யாப்பிலக்கணத்துக்கான முதல் நூலாகக் கருதப்படுகிறது.

சொல்லிற் சுருங்கிப் பொருள் பெருகித் தொல்ஞானம்
எல்லாம் விளக்கி இருளகற்றும் நல் யாப்பருங்கலம்’

என்று புகழப்பட்டது.

பாடல் நடை

எழுத்தியல்

உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா
குறிலே நெடிலே அளபெடை யென்றா
வன்மை மென்மை இடைமை யென்றா
சார்பிற் றோன்றும் தன்மைய வென்றா
ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்கு
ஐம்மூ வெழுத்தும் ஆமசைக் குறுப்பே.

செய்யுளியல்

இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும்1
கலந்ததம் கல்வியும் தோற்றமும் ஏனைப்
பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும்
விலங்கிவருங் கூற்றை விலக்கலும் ஆகா
தனைத்தாதல் நீயிரும் காண்டிர் - நினைத்தகக்
கூறிய வெம்மொழி பிழையாது;
தேறிநீர் ஒழுகிற் சென்றுபயன் தருமே’.

ஒழிபியல்

ஈற்றெழுத்து நீக்க இயல்புடைய நூற்செய்கை
பாற்படத் தோன்றும் பயின்று.

மாலை மாற்றே சக்கரஞ் சுழிகள
மேக பாத மெழுகூற்றிருக்கை
சாதை கரப்பே கரத்துறை பாட்டே

உசாத்துணை

யாப்பருங்கலம் பழைய விருத்தியுரையுடன் - தமிழ் இணைய கல்விக்கழகம்


✅Finalised Page