மு. இராகவையங்கார்

From Tamil Wiki
மு. இராகவையங்கார்
மு. இராகவையங்கார்

மு. இராகவையங்கார் (முத்துசுவாமி இராகவையங்கார்) (ஜூலை 26, 1878 – பிப்ரவரி 2, 1960) தமிழ் வரலாற்றாய்வாளர், தமிழறிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பல ஆய்வுகளைச் செய்து ஆய்வுத்துறை முன்னோடி என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படுபவர்.

பிறப்பு, கல்வி

இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக ஜூலை 26, 1878ஆம் ஆண்டு இராகவையங்கார் பிறந்தார். இராகவையங்காரின் தந்தை முத்துசாமி அய்யங்கார் கன்னடம் அறிந்த தமிழ் அபிமானி. மரபுவழிப் புலவர்; தசாவதானம் செய்தவர். மரபுவழிப் பாடல்களை இலக்கணச் சுத்தமாக எழுதவேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவர். இவர் எழுதிய நூல்களில் மணவாள மாமுனிகள் நூற்றந்தாதியை வைணவர்கள் முக்கியமாகக் கொள்கின்றனர். பாண்டித்துரை தேவரின் ஆசிரியராக இருந்த முத்துசாமி அய்யங்கார் தன் மகனுக்கு 16 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார். இவர் 1894இல் காலமானார். அதன் பின்னர் பாண்டித்துரைத் தேவர் இராகவையங்காரை வளர்த்துக் கல்வி புகட்டினார்.

தனிவாழ்க்கை

1901இல் பாண்டித்துரைத் தேவரால் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-1912 வரை மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1944-ஆம் ஆண்டில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. ஓ. எல்.) பட்ட வகுப்பு தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

1945-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இராம. அழகப்பச் செட்டியார் வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. 1945-1951 வரை மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக பணியாற்றினார். தன் 76 வயதில் மனைவி, மக்கள், மருமகனை இழந்தார். இறுதி காலத்தில் தன் இரண்டாவது மகனின் வீட்டில் மானாமதுரையில் வசித்தார்.

இலக்கியவாழ்க்கை

மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896-ஆம் ஆண்டில் தம்முடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரைத் தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.

செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் 1913-1939ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார்.

நூல்கள்

இராகவையங்கார் எழுதிய வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன் சாசனத் தமிழ்க் கவி சரிதம், ஆழ்வார் காலநிலை ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்ற நூல்களை வரலாற்று நூல்கள் என்று கூறலாம். கட்டுரை மணிகள், இலக்கியக் கட்டுரைகள் இரண்டும் தொகுப்புகள், கேரளத்தில் இராகவையங்கார் வாழ்ந்தபோது பேசிய பேச்சுகள் Some Aspects of Keralas Tamil Literature என ஆங்கிலத்திலும் வந்திருக்கிறது.

திவாகர நிகண்டு, நரிவிருத்தம், தமிழ் நாவலர் சரிதை பெருந்தொகை, சேர வேந்தர் செய்யுட் கோவை உட்பட 34 மேற்பட்ட நூல்களை இராகவையங்கார் பதிப்பித்திருக்கிறார் இவரது பதிப்பு நுட்பமானது, தெளிவுடையது. பாடபேதங்களில் மிகவும் கவனம் செலுத்தி இருக்கிறார்.

கட்டுரைகள்

1903இல் இவர் எழுதிய ஆரம்பக்காலக் கட்டுரைகளில் செந்தமிழ் இதழில் வெளிவந்த 'வேளிர் வரலாறு' குறிப்பிடத்தகுந்தது. இந்தக் கட்டுரை வெளிவந்த ஆண்டிலே கொழும்பு வி.ஜே. தம்பிப் பிள்ளை என்பவர் Royal Asiatic Society Journal இதழில் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இது அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் பாடத்திட்டத்தில் இருந்தது. சங்க கால வள்ளல்களான வேள் பரம்பரையினரைப் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரையை ராமநாதன் செட்டியாரின் முகவுரையுடன் மதுரை தமிழச் சங்கம் வெளியிட்டது.

இவருடைய நூல்களில் முக்கியமானவையாகச் சாசனத் தமிழ்க்கவி சரிதம், ஆராய்ச்சிக் கட்டுரைகள், சேரன் செங்குட்டுவன், ஆழ்வார் கால நிலை, தெய்வப் புலவ கம்பர் ஆகியவற்றைச் சொல்லலாம். 1984இல் தஞ்சை தமிழ்ப் பல்கலை ஆராய்ச்சித் தொகுதி நூலை மறுபடியும் வெளியிட்டுள்ளது. இந்நூலில் உள்ள கண்ணபிரானைப் பற்றிய தமிழ் வழக்கு அர்ச்சுனனும் பாண்டிய மரபும் என்னும் இரு கட்டுரைகளும் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியவை என்று அ.கா. பெருமாள் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

மகாபாரதக் கதாபாத்திரங்களின் அடிப்படையில் மதுரையை மையமாகக் கொண்டு உருவான பெரிய எழுத்து அம்மானைக் கதைகளுக்கும் தென்பாண்டித் தமிழ்ச் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய செய்திகள் இன்னும் முழுதாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அல்லிக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு பாண்டியர் தொடர்பானது என இராகவையங்கார் கூறும் கருத்து இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டியது. இராகவையங்கார் இந்தக் கட்டுரையில் அறிவியல் ரீதியான முழுமையான ஆய்வை வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்ல முடியாவிட்டாலும் இவர் ஆரம்பித்த ஆய்வுப் பயணம் தொடரவில்லை எனலாம்.

உரை

இராகவையங்கார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1929இல் பேசிய சிறப்பு உரையை பின்னர் விரிவாகச் செப்பனிட்டு சாஸனத் தமிழ்க்கவி சரிதம் என்னும் பெயரில் வெளியிட்டிருக்கிறார். தொல்பொருள்துறை வெளியிட்ட தமிழகக் கேரளக் கல்வெட்டுப் பகுதிகளைப் படித்து அவற்றில் உள்ள தமிழ்ப் பாடல்களைத் தொகுத்தும், தமிழ்ப் புலவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தும் கடின உழைப்பில் உருவானது இந்த நூல். கல்வெட்டுக்களைப் பதிப்பித்தவர்களுக்கு இவற்றில் இலக்கியத் தன்மை உண்டு, அவற்றிலும் பாடல்கள் உண்டு என்று முதலில் கூறியவர் மு. இராகவையங்கார். 84 புலவர்களைப் பற்றிய செய்திகளை இவர் கல்வெட்டுகளிலிருந்தே திரட்டி இருக்கிறார். இவர்களின் பாடல்களையும், சில புலவர்களின் பெயர்களையும் தொகுத்திருக்கிறார். இந்த ஆராய்ச்சியும்கூட இவருடன் நின்றுவிட்டது (மு. அருணாசலம் போன்றவர்கள் விதிவிலக்கு.)

பதிப்பாசிரியர்

அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951 ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார். இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.

இதழாசிரியர்

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904-ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912-ஆம் ஆண்டு வரை அப்பணியைச் செவ்வனே ஆற்றினார். இவருக்கு முன்னர் 1901 – 03-ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் மாமா மகன் இரா. இராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்குப் பின்னர் 1912-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை அ. நாராயண ஐயங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பத்திரிகையாளர்

மதுரை தமிழ்ச் சங்க ஆசிரியர், செந்தமிழ் பத்திரிகையின் ஆசிரியர். 1907-21 வரை சென்னைப் பலகலைக்கழகத்தின் லெக்சிகன் பதிப்பில் உதவியாசிரியர், கலைமகள் பத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழர்நேசன் பத்திரிகையின் கௌரவ ஆசிரியர் எனப் பல பொறுப்புகளிலும் பணிகளிலும் இருந்தவர்.

பிற

1936-38 வரை சென்னை லயோலா கல்லாரி வருகைப் பேராசிரியர், 1944-51 வரை திருவிதாங்கூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கம்பராமாயணம் பதிப்புக்குழு உறுப்பினர், தமிழ் கல்விச் சங்கத்தின் உறுப்பினர்.

நூல்பட்டியல்

பதிப்பித்தவை

  • திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் - 1910
  • பெருந்தொகை - 1936
  • திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ் - 1936
  • அரிச்சந்திர வெண்பா - 1949
  • கம்பராமாயணம் பால காண்டம் - 1951
  • திரிசிராமலை அந்தாதி - 1953
  • கம்பராமாயணம் - சுந்தர காண்டம் - 1958
  • நரிவிருத்தம் அரும்பத உரையுடன்
  • சிதம்பரப் பாட்டியல் உரையுடன்
  • திருக்கலம்பகம் உரையுடன்
  • விக்கிரம சோழனுலா
  • சந்திரா லோகம்
  • கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை

நூல்கள்

  • வேளிர் வரலாறு - 1905
  • தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி - 1912
  • சேரன் செங்குட்டுவன் - 1915
  • தமிழரும் ஆந்திரரும் - 1924
  • ஆழ்வார்கள் காலநிலை - 1926
  • சாசனத் தமிழ்க்கவி சரிதம் - 1929
  • ஆராய்ச்சித் தொகுதி - 1938
  • திருவிடவெந்தை எம்பெருமான் - 1939
  • சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி) - 1947
  • செந்தமிழ் வளர்த்த தேவர்கள் - 1948
  • Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes - 1950
  • இலக்கியக் கட்டுரைகள் - 1950
  • சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி) - 1951
  • வினைதிரிபு விளக்கம் - 1958
  • கட்டுரை மணிகள் - 1959
  • தெய்வப் புலவர் கம்பர் - 1969
  • இலக்கிய சாசன வழக்காறுகள்
  • நூற்பொருட் குறிப்பகராதி
  • நிகண்டகராதி

சொற்பொழிவுகள்

  • சாசனத் தமிழ்க்கவி சரிதம் - 1929
  • காந்தளூர்ச் சாலை - 1950
  • சேரத் தமிழ் இலக்கியங்கள் - 1950
  • தெய்வப் புலமை - 1959
  • கம்பனின் தெய்வப் புலமை

புகழ்

  • 1938இல் இவரின் அறுபது ஆண்டு நிறைவு விழா இராமநாதபுரத்தில் நடந்தபோது உ.வே.சா.வின் வாழ்த்துரை வழ்ங்கினார்
  • 1939இல் இவருக்கு ராவ்சாகிப் விருது கிடைத்தபோது நடந்த பாராட்டுரையில் இராகவையங்காரின் ஏற்புரையும் அந்தக் அறிஞர்களுக்கிடையே பெரிதாகப் பேசப்பட்டது.
  • தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றியதைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது

இறுதிக்காலம்

மு. இராகவையங்கார் பிப்ரவரி 2, 1960இல் தன் 82வது வயதில், மானாமதுரையில் தன் மகன் வீட்டில் மரணமடைந்தார்.

உசாத்துணை