under review

மு. அப்துல் லத்தீப்

From Tamil Wiki
Revision as of 16:08, 30 August 2022 by Madhusaml (talk | contribs)
மு. அப்துல் லத்தீப்

மு. அப்துல் லத்தீப் (1937 ) மலேசியாவின் உருவான முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர். இவர்  மண்ணின் மைந்தன், தோழன் மு.அ. எனும் பிற புனைப்பெயர்களாலும் அறியப்படுகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

மு. அப்துல் லத்தீப் பிப்ரவரி 5, 1937ல் தமிழகத்தில் பிறந்தார். தந்தை முகமது சேக் கோலாலம்பூர் பங்சார் சாலையில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்தார்.  தாயாரின் பெயர் பல்கிஸ். இவருடன் பிறந்தோர் இரண்டு பேர். மு. அப்துல் லத்தீப் தனது தொடக்கக் கல்வியை தமிழகத்தில் கற்றார். மலேசியாவுக்கு வந்த பிறகு தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிவம் ஐந்து வரை கல்வியைத் தொடர்ந்தார்.

திருமணம், தொழில்

மு. அப்துல் லத்தீப் 1968ல் நாசிர் பேகம் என்பவரைத் திருமணம் செய்தார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

சிறுவனாக இருந்தபோதே அப்துல் லத்தீப் தன் தந்தைக்கு உதவியாகப் பலசரக்குக் கடையில் பணி புரிந்தார். பின்னர் அவர் பத்திரிகையாளராகவே தன் பணியைத் தொடர்ந்தார்.

இலக்கியம்

மு. அப்துல் லத்தீப் 1950ல் மாணவர் மணிமன்றம் மூலம் தனது இலக்கியப் பணியைத் துவங்கினார். தமிழ் முரசு, தமிழ் நேசன், தமிழ் மலர், தேச தூதன் போன்ற நாளிதழ்களில் தொடர்ச்சியாக இவர் படைப்புகள் இடம்பெற்றன. 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். மேலும்  வானொலியிலும் முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதினார்.

இதழியல்

மு. அப்துல் லத்தீப் தொடக்கப்பள்ளி மாணவனாக இருந்தபோதே கையெழுத்து மாதப் பத்திரிகை நடத்தினார். முதல் படிவத்தில் இருந்து நான்காம் படிவம் போனபோது 'மாணவர் பூங்கா' என்ற மாத இதழை அச்சில் கொண்டு வந்தார். அவ்விதழ் ஈராண்டுகள் வந்தது.

பின்னர் 'மலை நாடு' என்ற வார ஏட்டுக்கு தபாலில் கட்டுரைகள் எழுதினார். அவர் கட்டுரைகளுக்கு சன்மானம் கிடைத்தது. தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து மாலை பதிப்பாக வந்த 'தேசதூதன்' ஏட்டில் துணை ஆசிரியராக முழு நேர பத்திரிகை பணியில் இணைந்தார். தினமணி, தமிழ் மலர் போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார்.

வானொலி

அப்துல் லத்தீப், வனொலி தொலைக்காட்சியில் செய்தி வாசித்தல், அறிவிப்பு மற்றும் செய்தி மொழிப்பெயர்ப்பு பணிகளைச் செய்துள்ளார்.

பதிப்பகம்

தலைநகர் கொலாலம்பூரில் 'பூங்கா' எனும் பதிப்பகத்தை நிறுவி நடத்தினார்.

அங்கீகாரம்

  • சிங்கப்பூர் கல்வி அமைச்சு இடைநிலைப்பள்ளி பாட நூலில் இவரது சிறுகதையின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது.
  • மலேசிய எழுத்தாளர் சங்கம் தங்கப் பதக்கமும் பணமுடிப்பும் கொடுத்து கௌரவித்தது.
  • மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்பாளர் சங்கம் டத்தோ பத்மநாபன் இலக்கிய விருதை வழங்கியது.

நூல்கள்

சிறுகதை
  • மனித தெய்வம் (கதைக் கொத்து) - 1959
  • சிறுகதைக் களஞ்சியம் (சிறுகதைத் தொகுப்பு) - 1993
கட்டுரை
  • பூவுலகில் புகழடைந்தோர் (கட்டுரை நூல்) - 1991
  • மணிச்சரம் (கட்டுரை நூல்) - 1990
  • எண்ண ரதங்கள் (கட்டுரை நூல்) - 1994
  • சில நிமிடங்களில் சில சிந்தனைகள் (கட்டுரை நூல்) - 1995

உசாத்துணை

  • நம் முன்னோடிகள் - வரலாற்றுத்துறை தேசியப் பல்கலைக்கழகம் - 2000
  • மலேசிய தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - மா. இராமையா - 1996


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.