முடத்தாமக் கண்ணியார்

From Tamil Wiki
Revision as of 16:53, 19 October 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

முடத்தாமக் கண்ணியார், சங்க இலக்கிய பத்துப்பாட்டு  நூல்களுள் ஒன்றான  பொருநராற்றுப்படை இயற்றிய புலவரின் பெயராகும். இவர் ஆண்பால் புலவர் ஆவார். இவரை பெண்பாற் புலவரெனவும் சிலர் கருதுகிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

முடத்தாமக் கண்ணியார் என்ற பெயரிலுள்ள கண்ணி என்பது பூமாலை வகைகளில் ஒன்று. 'முடத்தாமம்' செண்டால் இணைக்கப்படாத மாலை. கழுத்தில் அணியும்போது இருபுறமும் தொங்கும். இதனை அணிந்தவர் முடத்தாமக் கண்ணியார் எனக் கொள்ளப்படுகிறது.

ஆயினும், தாமம் என்ற சொல்லை இடையணியைக் குறிப்பதாகவும் பதினெட்டு கோர்வை உள்ள இந்த அணி பெண்கள் இடையில் அணிவது என்றும் தமிழ்லெக்சிகன் (பக்கம்- 1836) குறிப்பிடுகிறது. முடம் என்ற சொல் வளைவு என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. வளைவான தாமத்தை அணிந்த அழகான கண்களையுடையவர் என்பதே இப்பெயரின் பொருள். எனவே இவர் பெண்பாற் புலவர் எனச் சிலர் கருதுகிறார்கள்.

மேலும்,  முடம்பட்ட தாமக்கண்ணி என விளங்கிக்கொண்டு முடத்தாமக் கண்ணி என்னும் பெயர் ஊனமான  உறுப்பால் வந்ததென்றும், இவர் பெண்பாற் புலவர் என்றும் சிலர் கருதுகிறார்கள் (பத்துப் பாட்டு மூலமும் உரையும் பொ.வே. சோமசுந்தரனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி- இராசமாணிக்கனார்).

இலக்கிய வாழ்க்கை

முடத்தாமக் கண்ணியார் , இயற்றிய நூலான பொருநராற்றுப்படை  என்பது சங்க காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல்  ஆகும்.  சோழன் கரிகாற் பெருவளத்தானை இவர் இந்தப் பாடலில் போற்றிப் பாடியுள்ளார். இந்த நூல் 248 அடிகளைக் கொண்டது. இதன் இறுதியில் பிற்காலத்தவர் எழுதிய இரண்டு வெண்பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை இந்த நூலின் தொகுப்புச் செய்திபோல் உள்ளன.

பாடல் சொல்லும் செய்திகள்

பொருநராற்றுப்படை

பொருநர் விழாக்களில் கூடித் தங்கள் இசைத்திறனைக் காட்டுவர் .ஊர்விட்டு ஊர் செல்வர். போர் நடந்து முடிந்த களங்களுக்குச் சென்று வென்றவரைச் சிறப்பித்துப் பாடுவர். அவர்களுடன் செல்லும் விறலி முடி முதல் அடிவரை சிறந்த அழகு பொருந்தப் பெற்றவள் ஆவாள். வள்ளல்களைப் பாடிப் பரிசிலாகத் தேர், யானை முதலியவற்றைப் பெறுவர் பொருநர் பொன்னால் ஆகிய தாமரைப் பூவைப் பெறுவர். விறலியர் பொன்னரி மாலைகள் பெறுவர்

சோழன் கரிகால் பெருவளத்தான் திருமாவளவன் என்றும் சிறப்பிக்கப்பட்டவன்.  உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன். தாய் வயிற்றிலே இருந்து அரச உரிமை பெற்றுப் பிறந்தவன். இவன் மனைவி நாங்கூர் வேண்மாள். இவன் மிக இளம்வயதிலேயே வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும் வென்றான்.

எளியவரையும் நட்புடன் விரும்பி, விருந்தோம்பும் பண்பாளன். பாணர் முதலிய கலைஞர்கள் பல நாட்கள் தங்கியிருந்துவிட்டு ஒருநாள் தயங்கித் தயங்கி ‘எங்கள் ஊருக்குப் போகிறோம்’ என்று சொன்னாலும், சினம் கொள்வதுபோல் நோக்கி வருந்துவான். இசைக் கலைஞரின் ஏழிசைக்குத் தக்க மதிப்புத் தரும் வகையில் ஏழடி அவர்கள் பின்னால் நடந்து சென்று வழி அனுப்பி வைப்பான். யானைக் கூட்டத்தையும் பொன் பொருளையும் கணக்கின்றி வழங்குவான். இவனது நல்லாட்சியில் நாடு வளம்மிகுந்து செழித்தது. காவிரி ஆறு பெருகி வந்து நாட்டை வளம் பெறச்செய்தது.

சென்ற நாள்தொட்டுப் பகலும் இரவும் மூச்சுக் காற்றுக்குக் கூட உள்ளே இடம் இன்றிக் கொழுப்புடைய கறியையே உண்டனர். அதனால் பொருநனுக்கும் அவன் கூட்டத்தார்க்கும் பற்கள் தேய்ந்து போயின. நிலத்தை உழுது உழுது தேய்ந்து போன ஏர் முனைக் கொழுவைப் போல ஊன் தின்று, தின்று பற்கள் தேய்ந்து போயின.

பொருநன் அணிந்திருந்த பழைய ஆடையில் “ஈரும் பேனும் இருந்து அரசாள்கின்றன. அது, வேர்வையில் நனைந்து அழுக்கில் திரண்டு, கிழிசல்களை மீண்டும் மீண்டும் தைத்ததால் வேறு நூல் நுழைந்த கந்தலாகி விட்டது. அதனால் துணி நெய்தது போல் இல்லை, தைத்தே செய்ததுபோல் இருக்கிறது”.

இந்தப் பழந்துணியை நீக்கி விட்டு உடுத்துக்கொள்ளக் கரிகாலன் கொடுத்த ஆடை , நூல் இழை ஓடிய வழி எது என்று கண்பார்வை கூட நுழைந்து கண்டுபிடிக்க முடியாதாத அளவுக்கு நுண்மையான பூ வேலைப்பாடு கனிந்து இருக்கிறது. பாம்பு உரித்த தோல்போல் மென்மையாய் உள்ளது.

பொருநராற்றுப் படையில் நான்கு வகை நில மக்களைப் பற்றியும் சிறப்பாகப் பேசப்படுகிறது.

மருத நிலத்தில் பெடை மயில்கள் அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆண் மயில்களோ பூக்களில் பாடும் வண்டுகளின் இசை கேட்டு நெய்தல் நிலத்துக்கு வந்து ஆடுகின்றன.

களமர்கள் (உழவர்கள்) கரும்பை அரைக்கும் ஓசை, நெல்லை அரிக்கும் ஓசை இவற்றைக் கேட்டுச் சலிப்பு ஏற்பட்டால் நாரைகள், பகன்றை முதலிய மருத நில மரங்களை விட்டு நீங்கி, தோன்றி, காயா, முல்லை மலர்கள் பூத்த முல்லை நிலம் தேடிச் செல்லுகின்றன. அதுவும் வெறுத்தால், உடனே நெய்தல் நிலக் கடற்பகுதிக்கு வந்து இறால் மீனை உண்டு பூத்த புன்னை மரக் கிளையில் கூட்டில் தங்குகின்றன. அங்கு அலை ஓசை தொல்லை செய்தால் மருத நிலத்தின் பனை மரத்தின் மடலில் கூடு கட்டுகின்றன.

மக்களும் இதைப் போன்றே, மருத நிலத்துக் களமரின் இசையில் சலிப்பு ஏற்பட்டால் முல்லை படர்ந்த காட்டு நிலத்துக்குச் சென்று அந்த நிலத்தைப் பாராட்டுவார்கள். அந்த இடத்து வாழ்க்கையில் சலிப்பு வந்தால் உடனே மருத நிலத்துக்குப் போய் அந்த நில ஒழுக்கத்தைப் புகழ்வார்கள். கடற்கரைப் பாக்கத்தில் வாழும் மீனவர்கள் அந்த வாழ்க்கையில் சலிப்பு வந்தால் உடனே அருகில் இருக்கும் மலை நிலத்துக்குச் சென்று குறிஞ்சியைப் புகழ்ந்து பாடுவார்கள்.

குறிஞ்சி நிலத்து மக்கள் அங்கு விளையும் பொருள்களான தேனையும் கிழங்கையும் மீனவரிடம் கொடுத்து, மாற்றாக மீன் நெய்யையும் மதுவையும் பெறுவார்கள். இனிய கரும்பையும் அவலையும் விற்கும் மருத நிலத்து மக்கள் அவற்றுக்கு ஈடாகக் குறிஞ்சி மக்களிடமிருந்து மான்கறியையும், கள்ளையும் பெறுவார்கள். குறிஞ்சிப் பண்ணை நெய்தல் நிலப் பரதவராகிய மீனவர் பாடுவார்கள். மலைக் குறவர்கள் நெய்தல் பூ மாலையைச் சூடுவார்கள். முல்லையாகிய காட்டுநில மக்கள் மருதப் பண்ணைப் பாடுவார்கள். காட்டுக் கோழி வயலில் நெல் கதிரை மேயும். மருத நில வீட்டுக்கோழி மலையில் விளையும் தினைக் கதிரைக் கொத்துமாம். மலையில் உள்ள மந்திகள் நெய்தல் நில உப்பங்கழியில் மூழ்கி விளையாடும். கழியில் இருக்கும் நாரைகள் அஞ்சிப் பறந்து போய் மலை மீது அமரும்.

நூல் நடை

பொருநராற்றுப்படை

பாடினியின் கேசாதிபாத வருணனை

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்

கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்

இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்

பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்

மயிர்குறை கருவி மாண்கடை யன்ன

பூங்குழை ஊசற் பொறைசால் காதின்

நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்

ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை

நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்

கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்

அணங்கென உருத்த சுணங்கணி யாகத்

தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை

நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்

உண்டென வுணரா உயவும் நடுவின்

வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்

இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்

பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப

வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி

அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்

பரற்பகை யுழந்த நோயொடு சிவணி

மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்

நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்

பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி

தணப்பின் நெகிழ்பவெந் தடமென் றோளே.

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம்

பொருநராற்றுப்படை, தமிழ் சுரங்கம்

http://www.tamilsurangam.in/literatures/patthu_paddu/porunaratrupadai.html

பொருநராற்றுப்படை, தமிழ் இணையக் கல்விக் கழகம்

https://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043444.htm