under review

முச்சொல் அலங்காரம்

From Tamil Wiki
Revision as of 03:17, 17 August 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முச்சொல் அலங்காரம் (படம்: A.P.S சர்மா தனிநபர் சேகரிப்பு)

மூன்று கேள்விகளுக்கு ஒரே பதில் விடையாக வருவது முச்சொல் அலங்காரம்.

பதிப்பு, வெளியீடு

இரு சொல் அலங்காரம் நூலின் பின்னிணைப்பாக முச்சொல் அலங்காரப் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளன. 1886-ல், சகலகலா நிலைய அச்சுக்கூடத்தில் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது. இயற்றியவர் அருணாசல முதலியார். பதிப்பித்தவர் கணலூர் கிருஷ்ணப்பச் செட்டியார். இதற்குப் பின் பலர் இந்த நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.

இந்நூலில் முச்சொல் அலங்காரத்தில் 10 பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

உள்ளடக்கம்

’முச்சொல் அலங்காரம்’ நூல் தமிழ்ப் புதிர்களோடு தொடர்புடையதாகும். மூன்று வெவ்வேறான கேள்விகளுக்கு, அவை அனைத்திற்கும் பொருந்தும் படியாக ஒரே பதிலில் விடை அமைவதே முச்சொல் அலங்காரம். பாமர மக்களின் வாழ்வில் இவை இயல்பாகப் புழங்கி வந்தன என்பதை இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கொச்சைச் சொற்கள் காட்டுகின்றன. நாட்டுப்புற வாய் மொழி இலக்கியங்களுள் இதுவும் ஒன்று.

நூலிருந்து சில பகுதிகள்

பாடல்: ஆடோடு ஆடிய காடும், அரசனோடு ஓடிய ஊரும், அடிக்கடி தாய் வீடு ஒடிய பெண்ணும் - இம்மூன்றும் பேயோடு ஆடிய கூத்தாம்.

விளக்கம்: ஆடுகள் ஓடிய காட்டின் வளமை அழிந்து விடும். ஆடுகள் முழுக்க மேய்வதால் காடு தன் பசுமையை இழந்து விடும்.

அரசன், தன் படைகளுடன் சென்ற ஊர் உருக்குலைந்துவிடும். நால் வகைப் படைகளின் நடமாட்டங்களால் ஊரின் வனப்பு பாழாகி விடும்.

அடிக்கடி கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு தாய் வீட்டுக்குச் செல்லும் பெண்ணால் இல்லறம் சிறக்காது. கணவனோடு மகிழ்ச்சியாக வாழ இயலாது.

இவற்றையே 'பேயோடு ஆடிய கூத்து’ என்று பாடல் ஒப்பிடுகிறது.

பாடல்: ஆனை வால் ஒத்த கரும்பும், அறு நான்கிற் பெற்ற புதல்வனும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடுவும் இம்மூன்றும் பெரியோர்கள் வைத்த தனம்.

விளக்கம்: வலிமையான யானையின் வாலைப் போன்று விளைந்து காட்சி தரும் கரும்பு செல்வத்தைத் தரும்.

தந்தை, தனது 24 வயதில் பெற்ற புதல்வன், தந்தைக்கு 44 வயதாகும் போது, அவனும் உழைக்கத் தயாராகி விடுவான் அதனால் செல்வம் சேரும்.

புரட்டாசி பதினைந்தில் நடவு நடப்பட்டால் (நெல்), அது நன்கு வளர்ந்து தையில் அறுவடை செய்வதற்கு ஏதுவாக அமையும். வளம் சேரும். ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் (ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம்) நாற்று நடவு செய்வது வழக்கம்.

பாடல்: இரும்பை அரம்போல் தேய்க்கின்ற உறவும், இல்லறத்தில் வல்லாண்மை பேசு மனையாளும், நல்ல மரமேற் புல்லுருவி பாய்கின்ற நட்பும் - இம் மூன்றும் கொல்ல வரவிட்ட கூற்று.

விளக்கம்: இரும்பைத் தேய்க்கப் பயன்படுத்தும் கருவி அரம். அந்தக் கருவியைப் போன்ற உறவுகளால் ஒருக்காலும் நன்மை விளையாது.

குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டால், இல்லறம் சிறக்காது.

நல்ல மரத்தில் புல்லுருவி பரவினால், அது நீரையும் மரத்தின் பிற ஆற்றல்களையும் உறிஞ்சி அதன் அழிவுக்குக் காரணமாகும்.

உசாத்துணை


✅Finalised Page