மீட்சி

From Tamil Wiki
மீட்சி

மீட்சி (1983) பிரம்மராஜன் உதகமண்டலத்தில் இருந்து வெளியிட்ட சிற்றிதழ். நவீனக் கவிதை, இலக்கியக் கோட்பாடுகள், மற்றும் கதைகளை வெளியிட்டது. மொழியாக்கங்களும் வெளியிடப்பட்டன. மீட்சி பதிப்பகம் நூல்களையும் வெளியிட்டது

வரலாறு

1983 ஆகஸ்டில் பிரம்மராஜன் உதகமண்டலத்தில் இருந்து மீட்சி மாத இதழை ஆரம்பித்தார். மீட்சி ஆத்மாநாம், பிரம்மராஜன் படைப்புகளையும் இளம்தலைமுறை கவிஞர்களின் படைப்புகளையும் வெளியிட்டது. திரைப்படம் பற்றிய கட்டுரைகள், இலக்கியக் கோட்பாடுகள் குறித்த விளக்கங்கள் ஆகியவை அதில் வெளிவந்தன. 1986 முதல் ’மீட்சி’ காலாண்டிதழாக மாற்றப்பட்டது. 2000 த்துக்குப் பின் வெளிவரவில்லை

உள்ளடக்கம்

மீட்சி இதழ் நவீனக் கவிதைகளையும் மொழியாக்கங்களையும் முன்வைக்கும்பொருட்டே தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து திரைப்படம், ஓவியம், இலக்கியக் கோட்பாடுகள் என அதன் களங்களை விரித்துக்கொண்டது. பெரும்பாலும் மொழியாக்கங்கள் இதில் வெளியாயின.1989ல் உலகக்கவிதைகளின் மொழியாக்கத் தொகுப்பை மீட்சி வெளியிட்டது

பங்களிப்பு

மீட்சி தமிழில் பின்அமைப்பியல் - பின்நவீனத்துவ உரையாடல்களை தொடங்கிய இதழ்களில் ஒன்று என நினைவுகூரப்படுகிறது. நாகார்ஜுனன் எழுதிய கட்டுரைகளும் சாரு நிவேதிதா எழுதிய நேர்கோடற்றவகை எழுத்துக்களின் தொடக்கங்களும், கோணங்கி எழுதிய தானியக்க எழுத்துவகை படைப்புக்களும் மீட்சியில் வெளிவந்தன.

உசாத்துணை