மிச்சமிருப்பவர்கள்
மிச்சமிருப்பவர்கள் (2018) மலேசிய எழுத்தாளர் செல்வன் காசிலிங்கம் எழுதிய குறுநாவல். இது 2007-ஆம் ஆண்டு மலேசியாவில் ஹிண்ட்ராப் அமைப்பு உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் மேற்கொண்ட பேரணியை மையப்படுத்தி எழுதப்பட்ட குறுநாவலாகும்.
பதிப்பு வெளியீடு
2017-ஆம் ஆண்டு வல்லினம் இலக்கியக் குழு குறுநாவல் பதிப்புத் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டமானது மலேசிய எழுத்தாளர்களைக் குறுநாவல் எழுத வைத்து அதனைச் செறிவாக்கி நூலாகப் பதிப்பிக்கக் கொண்டு வரப்பட்டது. 14 குறுநாவல்கள் பங்குபெற்ற பதிப்புத்திட்டத்தில் தேர்ந்த நடுவர்களால் பதிப்பிக்கத் தகுதியானவை எனத் தேர்வு செய்யப்பட்ட மூன்று குறுநாவல்களில் மிச்சமிருப்பவர்கள் குறுநாவலும் அடங்கும். இந்நாவல் 2018-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
வரலாற்றுப் பின்னணி
நவம்பர் 25, 2007 அன்று பல்லாயிரக்கணக்கான மலேசிய இந்தியர்கள் கோலாலம்பூரில் தங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதையும் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவதையும் கண்டித்து அமைதிப் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியை ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை முன்னணிக் குழு ஒருங்கிணைத்தது. அந்தப் பேரணியில் பங்கேற்றவர்களைக் கலைந்தோடச் செய்ய அவர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக்குண்டு, தண்ணீர் பாய்ச்சுதல் ஆகியவற்றைப் பிரயோகித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பேரணியை மையமாகக் கொண்டு மிச்சமிருப்பவர்கள் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
கதைச்சுருக்கம்
மலேசியாவில் தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிய தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு குழுவினர் ஒரு அமைப்பின் மூலம் கூட்டுறவு முறையில் தொடங்கப்படும் நிலக்குடியேற்றத் திட்டமொன்றில் பங்கேற்கின்றனர். அந்த நிலக்குடியேற்றத் திட்டம் தவறான முதலீடுகளால் பொருளாதாரப் பின்னடைவை அடைகிறது. அந்நிலத்தைப் பெருநிறுவனமொன்றிடம் விற்றுவிடுகின்றனர். நிலத்தைக் கைபற்றுவதற்கு முயலும் நிறுவனத்தின் முயற்சிகளுக்கு இடையில் நிச்சயமற்ற தன்மையில் நகர்கின்ற மக்களின் வாழ்க்கையையே நாவல் பேசும் களமாக அமைகிறது. அத்துடன் மலேசியாவில் சிறுபான்மை மக்களான இந்தியர்கள் சமூகப் பொருளாதார நிலையில் பின் தங்கி இருப்பதால் எளிதில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடுகின்றவர்களின் மீது காவல் துறை போன்ற அதிகார அமைப்புகள் ஒடுக்குமுறைகள் நிகழ்த்துகின்றன. அதைப் போல, கல்வி, பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதிலும் கடும் சிரமத்தை மேற்கொள்கின்றனர். இந்தச் சூழலை, அரசு மற்றும் அமைப்புகளின் மீதான நம்பிக்கையை இழக்காமல் பார்வையாளர் கோணத்தில் அணுகுகின்ற செல்வாவின் பார்வையில் நாவல் விவரிக்கப்படுகின்றது. இன்னொரு கோணத்தில் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவரான பொன்னுச்சாமி, நடைபெறும் சம்பவங்களின் மீது ஆழ்ந்த விரக்தியும் தடாலடியான விமர்சனத்தையும் கொண்டவராக இருக்கின்றார். இவ்வாறு வேறுபட்ட மனநிலை கொண்டவர்கள் கோலாலம்பூரில் நிகழும் ஹிண்ட்ராப் பேரணியில் பங்கேற்பது தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக உணர்ந்து மனவெழுச்சி அடைவதுடன் நாவல் நிறைவடைகிறது.
கதைமாந்தர்கள்
- செல்வா – தோட்டத்தில் குடியேறிய இரண்டாம் தலைமுறை, நாவலின் மையப்பாத்திரம்
- பொன்னுச்சாமி- தோட்டத்தில் குடியேறிய முதல் தலைமுறை
- அண்ணாச்சி – தோட்டத்தில் உணவகத்தை நடத்துகின்றவர்
- கனகசபை – அண்ணாச்சியின் மகன், பொது உயர்கல்விக் கழகத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போதைப்பழக்கத்துக்கு ஆளாகி இறந்து போகின்றான்.
- மகேஸ்வரன் – காவல் துறை நிலையத்தில் இறந்து போகின்றவன்
இலக்கிய இடம்
இந்நாவலின் பல கிளைக்கதைகளும் ஒரு மையப்புள்ளியை நோக்கி நகரும் வகையில் அமைந்திருப்பதால் வெற்றிகரமான குறுநாவலாக அமைகின்றது என எழுத்தாளர் சு. வேணுகோபால் குறிப்பிடுகிறார். 2000-த்துக்கு முந்தைய மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகத் தரவும் முயன்றிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
விருது
- இந்நாவலுக்கு டான் ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் போட்டியில் ஆறுதல் பரிசான 500 ரிங்கிட் கிடைத்தது - 2020
உசாத்துணை
- ஒடுக்கப்பட்டக் கூடுகளின் ஓங்கல் - ஹரிராஸ்குமார்
- மிச்சமிருப்பவர்கள் குறுநாவல் விமர்சனம் - சு. வேணுகோபால்
✅Finalised Page